நிர்வாணப் பேரரசரின் கதையைக் கேட்டவர்கள் அந்தக் கதையின் முடிவைக் கேட்டிருக்க மாட்டார்கள். இதோ அந்தக் கதையின் முடிவு இப்படியாக இருந்தது.
பேரரசர் மெல்லக் குனிந்து பார்த்தார்; முதன்முறையாகத் தான் அம்மணமாக இருப்பதை அறிந்து கொண்டார். சுற்றிலும் தலையைத் திருப்பிப் பார்த்தார்; அவையில் உள்ளோர் எல்லாம் அரசர் அணிந்துள்ள ஒளிபொருந்திய அங்கியைக் குறித்து சிலாகிப்பதைப் பார்த்தார். “ஒருவேளை எல்லோரும் நம்மை ஓட்டுகிறார்களோ” என தனக்குத் தானே சந்தேகமாய்ச் சொல்லிக் கொண்டார். தனது தலைமை அமைச்சரும் அவையினர் போலவே சிலாகிப்பதைக் கண்டதும் பேரரசரின் சந்தேகம் அதிகரித்தது. சாளரத்தின் வழியாய் வீசிய காற்று நிர்வாண உடலில் படர்வதை உணர்ந்தார்; பேரரசரின் முகம் அவமானத்தில் கறுத்தது.
***
குஜராத் தேர்தல் எண்ணற்ற ஆச்சரியங்களைத் தன்னோடு அழைத்து வந்துள்ளது. முதன்முறையாக எதற்குமே வளைந்து கொடுக்காதவர் எனக் கருதப்பட்ட மோடி மெல்ல இறங்கி வந்துள்ளார். கடந்த நவம்பர் 10 -ம் தேதி கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இது வரை 28 சதவீத வரி விதிப்பு வளையத்தில் இருந்த சுமார் 178 பொருட்களின் வரிவிகிதம் குறைக்கப்பட்டு, அவை 18 சதவீத வரி விதிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் வெறும் 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி வளையத்தின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பாராளுமன்றத்தாலும், பொது அறிவாலும் சாதிக்க முடியாததைச் சாதித்ததற்காக நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தை பாரதிய ஜனதா தனக்குத் தானே உண்டாக்கி வைத்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தாம் 150 -க்கும் மேற்பட்ட இடங்களை வென்று சாதனை படைப்போம் என அமித்ஷா வெற்றிக்கான இலக்கை நிர்ணயித்து விட்டார்.
கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் பாரதிய ஜனதா ஆட்சியில் இரண்டு முக்கியமான விளைவுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று பொருளாதாரத் துறையில்; மற்றொன்று சமூகத் துறையில்.
பொருளாதாரத் துறையைப் பொருத்தவரையில் மோடி ஆட்சிக்கு வந்ததை அடுத்து தனிநபர் வருமானம் தொடர்ந்து குறைந்து, தற்போது ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும் ஆரவாரத்துடன் 2003 -ம் ஆண்டு ‘வைப்ரண்ட் குஜராத்’ எனும் கொண்டாட்ட நிகழ்வு மோடியால் துவங்கி வைக்கப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் இந்நிகழ்வுக்கு வரவழைக்கப்பட்டு புதிய தொழில்கள் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
2003 -ம் ஆண்டு துவங்கி 2017 வரை 8 முறை வைப்ரண்ட் குஜராத் கொண்டாடப்பட்டுள்ளது. 2003 -ம் ஆண்டு நடந்த நிகழ்வில், இந்தியா தவிர 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிற்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டு சுமார் 66 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முனைவுக்கான 76 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்வில் 55 ஆயிரம் பார்வையாளர்களும், 110 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு 25,578 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கடைசியாக நடந்த ஏழு வைப்ரண்ட் குஜராத் நிகழ்வுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் 84 லட்சம் கோடி; இதில் மிகப் பெரிய முரண் நகை என்னவென்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பே 153 லட்சம் கோடி தான். 2014 – 15 காலகட்டத்திற்கான குஜராத் மாநில மொத்த உற்பத்தியின் மதிப்பு வெறும் 7.82 லட்சம் கோடி தான். மேலும், அதற்கும் முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தை விட இது குறைவான அளவு என்பது அம்மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
புள்ளி விவரக் கணக்குகள் ஒருபுறமிருக்க, குஜராத்தின் வளர்ச்சி என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரை தான் என்பதை பட்டேல்களின் இட ஒதுக்கீடு போராட்டம் பட்டவர்த்தனமாக காட்டியது. குஜராத் முழுக்க சுமார் 60 லட்சம் இளைஞர்கள் வேலை கிடைக்காமலும், தொழில் வாய்ப்புகள் ஏதுமின்றியும் உள்ளனர் என்கிறார் அல்பேஷ் தாக்கோர். மத்திய அரசின் தேசிய மாதிரி சர்வே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நகர்புற குஜராத்தில் 5.8 சதவீத இளைஞர்களும், கிராமப்புற குஜராத்தில் 11.6 சதவீத இளைஞர்களும் வேலையற்று உள்ளனர்.
குஜராத்தின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும் அறிமுகமாகின. இவ்விரு நடவடிக்கைகளும் ஏற்கனவே மரணப்படுக்கையில் இருந்த குஜராத்தின் பொருளாதாரத்தை மொத்தமாக குழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போடுவதாக அமைந்து விட்டன. சூரத், அகமதாபாத் என குஜராத் முழுவதும் தொழிற்துறையினர் லட்சக்கணக்கில் திரண்டு போராடினர்.
தனது சொந்த மாநிலமே தனக்கெதிராக போர்க்கோலம் பூண்டு நிற்பதைக் கண்டு திகைத்த மோடி- அமித்ஷா இணை, பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்புப்பண முதலைகளுக்கு எதிரானதென்றும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்கென்றும் இதை எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகளென்றும் சொல்லி சமாளிக்க பார்த்தது. இவர்கள் இப்படியான வியாக்கியானத்துடன் மக்களை ஏமாற்ற எத்தனித்த வேளையில் அமித்ஷா மகனின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானி மும்பை பங்குச்சந்தையில் முறைகேடுகளில் ஈடுபட்ட புகாரும் மேலெழுந்து வந்தன.
ஆக மொத்தம் மோடி அமித்ஷா இணை பொருளாதார வளர்ச்சி, தூய்மையான நிர்வாகம் எனும் பெயரில் இத்தனை ஆண்டுகளாக தங்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்கிற உண்மையை குஜராத்திகள் மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டனர். எனவே தான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் “குஜராத் மாடல்” எனும் பூச்சரத்தை இந்தியர்களின் காதில் சுற்றிய மோடி – அமித்ஷா இணை, அந்தப் பூச்சரத்தை குஜராத்திகளின் முன் எடுக்கவே இல்லை. ஆம், குஜராத் தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசையும் ராகுல் காந்தியையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் மோடி, “வளர்ச்சி” என்றோ “குஜராத் மாடல்” என்றோ பேசுவதை மிக கவனமாகத் தவிர்த்து வருகிறார்.
பாரதிய ஜனதா தலைவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை காலி நாற்காலிகளே வரவேற்கும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் தடுத்துள்ள அமித்ஷா, தற்போது பிரச்சாரக் கூட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்கியுள்ளார். மேலும், மாநில அமைச்சர்கள் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் கடுமையான மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவலுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னொருபுறம் பாரதிய ஜனதா அதிகாரத்துக்கு வருவதற்கு முன் சத்திரியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இசுலாமியர்கள் (KHAM) ஆகிய பிரிவினரின் ஓட்டு வங்கியின் பலத்தில் தான் தேர்தல்களை காங்கிரசு வென்று வந்தது. இதற்கு எதிராக பட்டேல் வாக்குவங்கியை ஒருங்கிணைத்து நிறுத்தியது பாரதிய ஜனதா. “இந்து ஒற்றுமை” என்கிற காவி அரசியல் அதன் நடைமுறையில் ஆதிக்க சாதிகளின் கூட்டிணைவாகவே இருந்து வந்துள்ளது. மோடியின் வருகைக்குப் பின், இதே ஆதிக்க சாதிகளின் கூட்டிணைவு தனது காலாட்படையாக ஒடுக்கப்பட்ட மக்களையும் ஆதிவாசிகளையும் இணைத்துக் கொண்டது.
மதமோதல்களின் அடிப்படையில் ஒருமுகப்படுத்தப்பட்ட வாக்குவங்கியின் மூலம் வெற்றி பெற்ற மோடி, அதன் பின் வேறு வழியின்றி “தொழில்கள் நடப்பதற்கான அமைதியான சூழலை பராமரிக்கும்” கட்டாயத்துக்கு ஆளானார். தொடர்ந்து மதவெறி நெருப்பை எரிய விட்டு அதன்மூலம் இனப்படுகொலைகளை முன்னெடுத்துச் செல்வதில் இருக்கும் “நடைமுறை” சிக்கல்களைக் கணக்கில் கொண்டு தான் “வளர்ச்சியை” கையில் ஏந்தினார் மோடி.
எனவே தான் “வளர்ச்சி” கைவிட்டுவிட்ட நிலையில் உத்திரபிரதேச தேர்தலுக்கு முன் அரங்கேற்றியதைப் போன்ற நேரடி மதமோதல்களைத் தூண்டி விடுவது காரிய சாத்திமற்றதாகியுள்ளது. வேறு வழியின்றி ராகுல் காந்தியைக் கிண்டல் செய்வது, பட்டேல் சாதித் தலைவராகவும் தமக்குக் கட்டுப்படாதவராகவும் உருவெடுத்துள்ள ஹர்திக் பட்டேலுக்கு எதிராக செக்ஸ் சி.டி. -யை வெளியிடுவது, குஜராத்தின் வளர்ச்சியின்மைக்கு காங்கிரசை காரணம் காட்டுவது என செயல்திட்டம் வகுத்துள்ளது பாரதிய ஜனதா.
தேர்தலை வெல்லும் அளவுக்குக் காங்கிரசு இன்னும் பலம் பெறவில்லை என்றே தேர்தல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனினும், முந்தைய தேர்தல்களைப் போல் பாரதிய ஜனதாவால் சுலபமாக வெற்றி பெற்று விடவும் முடியாது என்பதையே குஜராத்தில் இருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.
எனவே தான் கறாரான பேர்வழியாக அறியப்பட்ட மோடி, ஜி.எஸ்.டி விவகாரத்தில் மெல்ல இறங்கி வந்துள்ளார். ஒருவேளை காங்கிரசு வென்று விட்டால்? அது காங்கிரசின் வெற்றியாக இருக்காது; மாறாக பாரதிய ஜனதாவின் தோல்வியாகவே இருக்கும்.
மேலும் :
- Vibrant Gujarat — Brushing up the numbers
- GST has hurt textile industry in election bound Gujarat, say traders
- Why Gujarat May End Up Being a Hard Nut to Crack for the BJP
- With No Jobs in Sight, How Vibrant Is Gujarat Really?
- Why Isn’t Narendra Modi Talking About the ‘Gujarat Model’ Anymore?
- நன்றி:வினவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக