உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்ற வேட்கையோடு முதலாளித்துவம் நடத்தி வரும் சதுராட்டங்களால் 2008ம் ஆண்டு ஏற்பட்டு மிகக்கடுமையான நெருக்கடியைப் போலவோ அல்லது அதைவிட இன்னும் கடுமையானதாகவோ பொருளாதார நெருக்கடி ஏற்படும் என சர்வதேச பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
வெறும் 900 டாலர் மதிப்பு கொண்ட பணத்தை அல்லது பொருளை பிட்காயின் என்று சொல்லப்படுகிற டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் உலவ விடுவதன் மூலம் 10,000 ஆயிரம் டாலர் மதிப்பு அளவிற்கு இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை யுகத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற சூழலை பெரும் கார்ப்பரேட்டுகள் உருவாக்கியுள்ளன.
நவீன வரலாற்றில் இப்படி ஒரு கொள்ளை லாபம் எதிலும் பார்க்கப்பட்டதில்லை.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் ஏடு வெளியிட்டுள்ள செய்தியில், எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாமல் – புதிதாக எந்தவொரு மதிப்பையும் உற்பத்தி செய்யாமல் டிஜிட்டல் பணம் என்ற பெயரில் பல நூறு மடங்கு லாபம் பார்க்கப்படுகிறது;
இதற்கு முன்பு பணத்தின் மதிப்பில் இத்தனை பெரிய லாபம் பார்க்கப்பட்டது என்றால் அது 1915ம் ஆண்டுதான்;
அப்போதும் கூட 82 சதவீதம் அளவிற்குத்தான் லாபம் பார்க்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமையிடமாக அமைந்துள்ள வாஷிங்டனின் வால்ஸ்ட்ரீட் பகுதியே உலக அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் இயங்கு தளமாக இருக்கிறது; வால்ஸ்ட்ரீட்டை மையமாகக் கொண்டு செயல்படும் மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் உலகம் முழுவதும் நிதிச் சந்தைகளில் லட்சக்கணக்கான கோடி டாலர்களை கொட்டுகின்றன;
டிஜிட்டல் பணம் என்ற வடிவத்தில் கொட்டப்படும் இந்தப் பணம் எந்த உற்பத்தியும் செய்யப்படாமல் மீண்டும் அங்கிருந்து லட்சக்கணக்கான கோடி டாலர்களை லாபமாக அள்ளிச் செல்கிறது.
இது முற்றிலும் தங்கு தடையற்ற – உலகையே லாப வேட்டைக்காடாக மாற்றியிருக்கிற – யாராலும் நிறுத்த முடியாத மோசடியாக அரங்கேறி வருகிறது; டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் கடன் கொடுப்பதற்கோ, வட்டி வசூலிப்பதற்கோ, பண பரிவர்த்தனை செய்வதற்கோ எந்தவிதமான வரையறைகளோ, விதிமுறைகளோ, சட்டதிட்டங்களோ இல்லை;
இதனால் நுகர்வோரின் பணத்திற்கு எந்த பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது ஒட்டுமொத்த மக்களையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நோக்கி தள்ளிவிட்டுள்ளன.
இதன்பின்னணியில் மிகப்பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபமே இருக்கிறது. இந்தத் துறையில் முதலீடு என்ற பெயரில் பெரும் நிறுவனங்கள் மத்திய வங்கிகளில் அல்லது பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெருமளவு பணத்தை கடனாக பெற்று அதை முதலீடு செய்கின்றன.
பங்குச் சந்தையிலும் அந்தப் பணத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது.
வங்கிகளின் கணக்குகளில் மிகப்பெருமளவு பணம் இருப்பது போல இந்த நிறுவனங்கள் காட்டினாலும் உண்மையில் ஒட்டுமொத்த பணத்தையும் இந்நிறுவனங்கள் அல்லது பெரு முதலாளிகள் சூறையாடி வேறு இடத்திற்கு கொண்டுசென்று மீண்டும் மீண்டும் டிஜிட்டல் பண வடிவில் நிதிக்கட்டமைப்பிற்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
அதன்மூலமாக ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் இவர்களே ஆதிக்கம் செய்கிறார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஏடு விவரித்துள்ளது.
சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகில் பிட்காயின் என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் பண முறையை 2009ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த சதோஷி நகாமோட்டோ என்பவர் தலைமையிலான முதலாளிகள் குழு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
முதலில் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்று முன்மொழியப்படும்.
எளிதானது என்று நம்பவைக்கப்படும்; மக்கள் இந்த வடிவத்திற்கு பழகியதற்கு பிறகு மத்திய வங்கிகள் மற்றும் அரசின் சட்டவிதிமுறைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு டிஜிட்டல் பண வரித்தனை என்பதே முற்றிலும் அராஜகம் நிறைந்த, சர்வாதிகாரம் நிறைந்த வடிவமாக மாறும்.
விதிமுறைகள் அனைத்தும் மீறப்படும் நிலையில் இந்தப் பணம் எளிதில் கையாள முடியாத ஒன்றாக – பெரும் துயரத்தை தரக்கூடியதாக மாறும்.
அது படிப்படியாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும்.
அதன் விளைவாக இந்த உலகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று சர்வதேச நிதி விவகார வல்லுநரான ஆன்ட்ரே தாமோன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் எச்சரித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக