புதன், 7 பிப்ரவரி, 2018

விஸ்வரூபம்'

விஸ்வரூபம்' 5 ஆண்டு சிறப்பு கட்டுரை

'உலக நாயகன்' கமல்ஹாசன் அவர்களது நடிப்பில் பல தரமான பொழுதுபோக்கு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், கமல் அவர்களது எழுத்திலும் இயக்கத்திலும் வெளியான திரைப்படங்கள் இன்னும் ஸ்பெஷல்! அவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படம் வெளியாகி, இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகிறது! விஸ்வரூபம் என்கிற சம்ஸ்கிருத டைட்டிலை மாற்ற வேண்டும் என 'இந்து மக்கள் கட்சி' வெளியிட்ட அறிக்கை, DTH முறையில் வெளியிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களின் மறுப்பு, சில இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம், தமிழக அரசின் தடை, 'இதுவே தொடர்ந்தால், நான் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்' என சொன்ன கமல் அவர்களின் சோகம் என ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் 'விஸ்வரூபம்' திரைப்படம் வெளியானதை யாராலும் எளிதில் மறக்க முடியாது.

'James Bond 0007', 'The Bourne Series', 'Mission Impossible' என Spy த்ரில்லர் ஜானரில் ஹாலிவுட்டில் வருடத்துக்கு 5 படமாவது வெளியாகும். ஆனால், அந்த ஜானர் அதிகம் பிரபலமாக இல்லாத இந்திய சினிமாவில் இதற்கு முன் வெளியான பாலிவுட் திரைப்படங்கள் எல்லாம் 'Agent Vinod' போல சுவாரஸ்யமற்றதாகவோ அல்லது 'Ek Tha Tiger' போல மிக அதிகமான மசாலா நெடியுடனே இருந்துள்ளன. இதற்கு முன், 1980களிலும் 1990களிலும் தமிழ் சினிமாவில் வெளியான 'விக்ரம்' 'குருதிப் புனல்' (இந்தி திரைப்பட ரீமேக்) போன்ற சில Spy த்ரில்லர் பெரிய வெற்றி பெறவில்லை. அந்த வகையில், 'விஸ்வரூபம்' தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமானதொரு ஆக்ஷன் த்ரில்லர்!

ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், "மகாபாரதத்தில் வரும் 'விராட பருவம்' தான், 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் கதைக்கான இன்ஸ்பிரேஷன்" என சொல்லியிருந்தார் கமலஹாசன். 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, பாண்டவர்கள், மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில் வாழ்ந்தனர். அங்கே அர்ஜுனன் விராட இளவரசி உத்தரைக்கு நடனம் கற்றுத் தரும் ஆசிரியராக பிருகன்னளை எனும் பெயரில் வாழ்ந்தான். ஆம், அந்த அர்ஜுனன் கதாபாத்திரமே விஸ்வநாத்துடையது (கொஞ்ச காலம் தலைமறைவாக வாழும் ஒரு நடன ஆசிரியர் வேடம்). அர்ஜுனன் கிருஷ்ணர் சொல்லுக்கு கட்டுப்பட்டதைப் போல, கமல் அவர்கள் கட்டுப்பட்டது தனது மாமா மற்றும் பாஸ் ஆன சேகர் கபூருக்கு - படத்தில் அவரது பெயர் ஜெகன்நாத் (கிருஷ்ணர்)!
சர்வதேச நாடுகளை எல்லாம் அச்சுறுத்தும் பயங்கரவாதியான ஒமர் குரேஷி மற்றும் அவனது கூட்டத்தை பிடிக்க செல்லும் இந்திய உளவாளியான (RAW) விஸாம் அஹ்மத் காஷ்மீரி, ஆப்கானிஸ்தானில் தலிபன்களை உளவு பார்த்து அவர்கள் இருப்பிடத்தையும், ஒசாமா பின் லேடனின் மறைவிடத்தையும் NATOவிற்கு தெரிவிக்கும் வேலையில் ஈடுபடுகிறார். ஒமர் குரேஷியின் வேறு சில திட்டங்களையும் தெரிந்து வைத்திருக்கும் விஸாம், அமெரிக்காவில் வெடிக்கவிருக்கும் ஒரு கதிரியக்க வெடிகுண்டை செயலிழக்க வைப்பதற்காக விஸ்வநாத் என்கிற பெயரில் நடித்து வருகிறார். அவர் மேற்கொள்ளும் அந்த அபாயகரமான பணியும், யாருக்கும் தெரியாத அவரது உண்மையான சுயரூபத்தின் வெளிப்பாடுமே 'விஸ்வரூபம்' திரைப்படம்.

வெவ்வேறு புனைப்பெயர்கள், பெண்களுக்கே உரிய நளினத்தோடு நடன ஆசிரியராக ஒரு கெட்-அப், உளவாளியாக ஒரு கெட்-அப், தலிபான் பயங்கரவாதியாக ஒரு கெட்-அப், ஒமரையும் ஒசாமாவையும் பிடிக்க முயற்சிக்கும் விறுவிறுப்பான பயணம் என ஒரு சர்வதேச உளவு திரைப்படத்திற்கு தேவையான பக்காவான செட்டப்போடு, ஆங்கிலப் படங்களுக்கு நிகரான மேக்கிங்கில் உருவாகியிருந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'விஸ்வரூபம்'.
 

kamal haasan vishwaroopam

தனது விவாகரத்து குறித்து, ஒரு மனோதத்துவ நிருபரிடம் விஸ்வநாத்தின் மனைவி நிருபமா பேசுவதில் தொடங்குகிறது திரைப்படம். அமெரிக்காவில் குடியேற உதவியாய் இருக்குமே என விஸ்வநாத்தை திருமணம் செய்து கொண்டதை 'A convenient marriage' என அழைக்கும் நிருபமா, சற்றே அசாதாரணமாக இருக்கும் தனது கணவர் மேல் பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லாமல் இருக்கிறாள். தனது முதலாளியை பிடித்திருப்பதால், தன் கணவனை விவாகரத்து செய்ய வாய்ப்பிருக்குமா என பார்க்கிறாள். தனது முதலாளி மூலம் ஒரு டிடெக்டிவ்வை நியமித்து விஸ்வநாத்துக்கு வேறு யாரோடும் தொடர்பிருக்கிறதா என பார்க்க செய்கிறாள். அப்பொழுது கூட 'அவர் வாழ்க்கையில வேற யாராவது இருந்தா, அது பொம்பளையா இருக்காது' என சொல்லி விஸ்வநாத்தை ஆண்மையில்லாதவர் போல சித்தரிக்கிறாள். 'உனை காணாத' பாடலின் நடனத்தோடு, விஸ்வநாத்தாக கமல் நமக்கு அறிமுகமாகிறார். கமல்ஹாசன் அவர்களது 60 ஆண்டு கால திரையுலக பயணத்தில், இப்படியொரு வேடத்தில் கமல் இப்படி நடிப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். சின்ன சின்ன வசனங்களிலும் உடல்மொழியிலும், மனிதர் பிரமாதப்படுத்தியிருப்பார் - உடல்மொழி மட்டுமின்றி நடந்துகொள்ளும் விதத்திலும், பெண்களுக்கே உரிய நளினத்தோடு அந்த பாத்திரத்தை குறைகளின்றி திரையில் காட்டிட, வசனங்கள் எழுதப்பட்ட விதத்திலும் நடிப்பிலும் நிறையவே மெனக்கெட்டிருப்பார். 'மணவாட்டியே, மணாளனின் பாக்கியம்' என மாற்றி சொல்வது, ஃபோனை எடுத்தவுடன் 'ஹலோ Mrs. & Mr.விஸ்வநாத்’s residence' என சொல்வது, சமையல் உட்பட அனைத்து வீட்டு வேலைகளையும் தானே பார்ப்பது என அந்த பாத்திரத்திற்கு நிறைவான வடிவம் கொடுத்திருப்பார்.

அதற்கடுத்த காட்சிகளில், விஸ்வநாத் ஒரு முஸ்லிம் என தெரிகிறது. படத்தின் முதல் 20 நிமிடங்கள் மெதுவாக சற்றே அசுவராஸ்யமாக நகர்வதைப் போல இருந்தாலும், வில்லன் ஒமர் தானே விஸ்வநாத்தை பார்க்க வருகிறேன் என சொல்லும் கணத்திலிருந்து, திரைக்கதையில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதற்கடுத்த காட்சியில், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஸ்டண்ட் காட்சிகளில் ஒன்றான அந்த warehouse சண்டைக்காட்சி வருகிறது.

'விஸாம் அஹ்மத் காஷ்மீரி, அல்-கொய்தாவால் பயிற்சியளிக்கப்பட்டவன்' என்கிற பில்டப்போடு தொடங்கும் ஆப்கானிஸ்தான் ஃபிளாஷ்பேக் காட்சிகள் முழுக்கவே பரபரவென நகர்கிறது. 'நாயகன்' படத்தின் தாராவி செட், 'அன்பே சிவம்' திரைப்படத்தின் ரயில் விபத்து செட் மற்றும் ஒரிஸா வெள்ளம் செட், 'விருமாண்டி' திரைப்படத்தின் கிராம செட் மற்றும் ஜெயில் செட் என கமல் அவர்களது திரைப்படங்களில் எப்பொழுதுமே ஆர்ட் டைரக்ஷன் மிக நேர்த்தியாக இருக்கும். அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில், ‘விஸ்வரூபம்’ படத்திற்காக சென்னை OMR சாலையில் உள்ள ஜேப்பியார் கல்லூரி மைதானத்தில், 1000 லோடு மண்ணைக் கொட்டி ஆப்கானிஸ்தானையே உருவாக்கி மலைக்க வைத்திருந்தார் 'கலைஞானி' கமல்ஹாசன். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்கா சம்பந்தப்பட்ட பல காட்சிகளும் கூட செட் மற்றும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது; படத்தில் வரும் 80% காட்சிகள் செட்களிலும் கிரீன் மேட்டிலுமே படமாக்கப்பட்டது என்பது நம்புவதற்கு சற்றே கடினமான உண்மை. 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு பின், முழுக்க முழுக்க செட்டிலும் கிரீன் மேட்டிலுமே படம் எடுக்கும் டிரெண்ட் மிக பிரபலமானது. 'விஸ்வரூபம்' படத்தின் மூலம் கலை இயக்குனர் 'லால்குடி' இளையராஜா அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால், warehouse சண்டைக்காட்சி (transformation சீன்) உட்பட பல காட்சிகளில் வரும் ஸ்டண்ட்களில் கமல் அவர்களது முகம் VFXஇல் மாற்றப்பட்டிருப்பது தெரியாத அளவிற்கு சிறப்பாக இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லா தொழில்நுட்ப துறையிலுமே அசத்தியிருந்தார்கள். ‘விஸ்வரூபம்’ திரைப்படம் என்றதும், முதலில் நம் நினைவுக்கு வருவது ‘எவன் என்று நினைத்தாய்?’ பாடலும் அந்த தீம் இசையும் தான்; ‘ஆளவந்தான்’ திரைப்படத்திற்கு பின், இரண்டாம் முறையாக இணைந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் மற்றும் கமல்ஹாசனின் இசைக் கூட்டணி ‘விஸ்வரூபம்’ படத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

ஜிஹாதிகளைப் பற்றிய ஆக்ஷன் த்ரில்லர் என்றபோதிலும், அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் பேசியது ‘விஸ்வரூபம்’. ‘நீ ஜிஹாதி ஆகணுமா?’ என ஒமரின் மகன் நாசரைப் பார்த்து விஸாம் கேட்கையில், ‘இல்ல.. நான் டாக்டர் ஆகணும்’ என அவன் சொல்கிறான். பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கே அவர்கள் செய்வது எதிலுமே விருப்பம் இல்லை என சொல்கிறது அக்காட்சி. ‘டாக்டரெல்லாம் ஆக வேணாம்’ என ஒமர் திட்டியதும், நாசரை சமாதானப்படுத்துவதைப் போல வெளியே வந்து அவனை ஊஞ்சலில் உட்காரவைத்து விஸாம் ஆட்ட, முதிர்ந்தவனைப் போல் ‘நான் ஒண்ணும் குழந்தை இல்ல’ என இறங்கி செல்கிறான். ஆனால், ஜிஹாதியான மம்மு ஊஞ்சலில் அமர்ந்து குழந்தையை போல் ஆட்டிவிட சொல்கிறான். அப்படி இருப்பதால் தானோ என்னவோ, சரி எது தவறு எது என தெரியாமல் எளிதில் மூளைச் சலவை செய்யப்பட்டு மனித வெடிகுண்டாகி சாகிறான். ஆங்கிலம் கற்க கூடாது பேசக்கூடாது என சொல்வது, சிறுவர்கள் கையிலும் கூட துப்பாக்கி இருப்பது, அங்காடியில் தோட்டாக்கள் விற்கப்படுவது, கண்ணைக்கட்டிக்கொண்டிருக்கும் தன் மகனுக்கு எது எந்த துப்பாக்கி, எந்த குண்டு என கண்டுபிடிக்க சொல்லி பயிற்சியளிப்பது என அங்கே நிலவும் சூழலையும் காட்டுகிறார்கள். ‘ஜலாலை அவன் ஆசைப்பட்ட மாதிரியே, இஞ்சீனியரிங் படிக்க லண்டன் அனுப்பி இருந்தா, நாசரை அவன் விருப்பப்படியே டாக்டர் ஆக்கியிருந்தா... இந்த மாதிரி சாம்பல் ஆகியிருக்க மாட்டாங்க’ என ஒமர் கண்ணீர் சிந்துகிறான். “முதல்ல, பிரிட்டிஷ் வந்தான்... அப்புறம் ரஷ்யன், தலிபான், அமெரிக்கா காரன்... இப்போ, நீங்கள்லாம்” என ஒரு பாட்டி திட்டும் வசனத்தின் மூலம் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை ஒரே வரியில் சொல்லி முடிக்கிறார் எழுத்தாளர் கமல்ஹாசன்.
 

“துப்பாக்கி எங்கள் தோளிலே, துர்பாக்கியம் தான் வாழ்விலே” என தொடங்கும் பாடலில்,
“போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை,
போர்தான் எம்மை தேர்ந்தெடுத்து கொண்டது...

எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை,
ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது...

ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்,
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்...

ஒட்டக முதுகின் மேல், ஒரு சமவெளி கிடையாது,
டாலர் உலகத்தில், சமதர்மம் கிடையாது”
என ஒவ்வொரு வரியிலும் தங்களை போராளிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர்களின் எண்ண ஓட்டத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருப்பார் ‘கவிப்பேரரசு வைரமுத்து.

அதே போல, ‘அணு விதைத்த பூமியிலே’ பாடலில்
“போர் செல்லும் வீரன், ஒரு தாயின் மகன் தான்...
நம்மில் யார் இறந்தாலும், ஒரு தாய் அழுவாள்...”
என்கிற வரிகளில் போரின் ரணங்களை சொல்லியிருப்பார்.

படத்தில் கமல்ஹாசன் முதல் எல்லா கதாபாத்திரங்களுமே மிகத் தெளிவாக படைக்கப்பட்டிருக்கும். ‘செத்துட்டா எல்லா பாவத்தையும் மன்னிச்சிரணுமா? அப்போ, ஹிட்லரையும் மன்னிச்சிடலாமா?’ என கேட்கும் அதே விஸாம் தான், ‘ஒரு மனுஷாளோட சாவை இப்படியா தீபாவளி மாதிரி கொண்டாடுறது?’ என ஒசாமா பின் லேடனின் மரணம் குறித்து மனிதாபிமான அடிப்படையில் கேட்பார். அதே போல அஸ்மிதா, Colonel ஜெகன்நாத், விஸாம் என எல்லோருமே ஒரே குழுவில் இருந்தாலும் கூட, மூன்று பேருக்குமே அந்த மரணம் குறித்த புரிதலும் கருத்தும் வெவ்வேறாக இருக்கும். ‘அசுரனைக் கொன்னா, கொண்டாடதானே செய்வா?’ என அஸ்மிதா கேட்க, ‘அதை அசுரனோட அண்ணன், தம்பி, பொண்டாட்டி, பொண்ணுகிட்ட சொல்லு பார்ப்போம்’ என்பார் ஜெகன்நாத்.

‘தேவர் மகன்’, ‘அன்பே சிவம்’, ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’ என கமல் அவர்களது எழுத்தில் உருவான எல்லா படங்களிலுமே வன்முறை வேண்டாம் என்கிற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ மேலோங்கி இருக்கும். இந்த எல்லா படங்களிலுமே ஹீரோ ஏதோவொரு குற்ற உணர்வால் புழுங்கித் தவிப்பான் அல்லது தனிப்பட்ட இழப்பால் சோர்ந்து கிடப்பான். ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் இசக்கியின் கை வெட்டப்படுதல் மற்றும் ஊருக்குள் கலவரம், ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் பஸ் விபத்து, ‘ஹே ராம்’ திரைப்படத்தில் மத கலவரத்தில் அபர்ணா கற்பழித்து கொல்லப்படுதல் மற்றும் காந்திஜியை கொல்ல வேண்டும் என்கிற வெறி, ‘விருமாண்டி’ திரைப்படத்தில் ஊர் கலவரத்தில் இறக்கும் மக்கள் மற்றும் அன்னலட்சுமியின் மரணம் என சில உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில், ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் தவ்ஃபீக்கின் மரணத்தாலும் வேறு சில மரணத்தாலும் கலங்கியிருப்பார் ஹீரோ விஸாம். ‘நீங்கள் நல்லவரா, கெட்டவரா?’ என்கிற கேள்விக்கு வேலு நாயக்கரிடம் பதில் இல்லாததைப் போல, தான் இது நாள் வரை வாழ்ந்த ‘வில்லன்’ வாழ்க்கையில் இருந்து விலகி எஞ்சியிருக்கும் நாட்களில் ‘உத்தமன்’ பாதையில் செல்லும் மனோரஞ்சன் போல, விஸாம் அஹ்மத் காஷ்மீரியும் தான் ஹீரோ மட்டும் அல்ல வில்லனும் கூடத்தான் என தன் மனைவியிடம் ஒப்புக்கொள்கிறான்!
 

kamal haasan vishwaroopam

கமல் அவர்களது திரைப்படங்களில் என்றுமே spoon-feeding இருக்காது. தனது ஆடியன்ஸை புத்திசாலிகளாக அணுகி, படத்தில் உள்ள சில விஷயங்களை அவர்களே புரிந்துகொள்ளட்டும் என விட்டுவிடுவார். ஆனால், அதுவே அவர் நடித்த சில நல்ல திரைப்படங்கள் தோல்வியடைவும் காரணமாய் இருந்திருக்கிறது. அப்படி, ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் நீங்கள் தவறவிட்டிருக்கக்கூடிய ஒரு சில நுட்பமான விஷயங்களும் சில குறியீடுகளும் இதோ இங்கே:

- “எல்லோரும் விஸ்வநாத்தை ‘விஸ்’ன்னு கூப்பிடுவாங்க, அதான் நானும் கூப்பிடுறேன்” என முதல் காட்சியில் நிருபமா சொல்வார். ஆனால், விஸாம் என்கிற பெயரை சுருக்கித்தான் எல்லோரும் ‘விஸ்’ என கூப்பிடுகிறார்கள் என நிருபமாவிற்கோ ஆடியன்ஸிற்கோ அந்த காட்சியில் தெரியாது. ‘விஸ்வநாத்’ என்கிற பெயரை விஸாம் தேர்ந்தெடுத்ததன் காரணமும் அதுவே; யாரேனும் தவறுதலாக மாற்றிக் கூப்பிட்டாலும் கூட, மாட்டிக்கொள்ளாமல் இருக்க!

- ‘இன்னைக்கு டின்னருக்கு நிருபமா வரமாட்டா’ என விஸாம் சொன்னதும், ‘ஆகாஷவாணி சொல்லுச்சா?’ என அஸ்மிதா நக்கலாக கேட்பார். நிருபமாவின் boss தீபக்கின் அலுவலகம் முழுக்க bug செய்யப்பட்டிருப்பதைத்தான் அப்படி குறிப்பிடுகிறார்கள்.

- Warehouse சண்டைக்காட்சியில் விஸாம் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஃபரூக் இரண்டு மூன்று முறை விஸாமை நோக்கி சுட்டும் கூட ஒரு குண்டு கூட அவர் மீது படாது, கவனித்தீர்களா? அதற்கு காரணம், அதற்கு சில நிமிடங்களுக்கு முன் விஸாமை முகத்தில் அடிக்க கையை நீட்டுகையில் விஸாமின் பற்களில் பலமாக இடித்துக் கொண்டிருப்பான் ஃபரூக். இடித்தவுடன் வலி தாங்காமல், தனது அலைபேசியை கூட தீபக்கிடம் கொடுத்துவிடுவான். வலியால் அலைபேசியையே தூக்கமுடியாத ஃபரூக்கால், எப்படி சரியாக குறி வைக்க முடியும்.

- அதே சண்டைக்காட்சியில், எல்லோரையும் கொல்லும் விஸாம், ஃபரூக்கை மட்டும் கையை வெட்டிவிட்டு பின் கொல்வான். ஏன் தெரியுமா? அதற்கு முந்தைய காட்சியில், தன் மனைவி நிருபமாவை தன் கண் முன்னாலேயே அறைந்திருப்பான் ஃபரூக்.

- தவ்ஃபீக்கை பார்வையாளர்களுக்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தும் காட்சியில் ‘முதல்ல 2 ஏக்கர்ல ஆரம்பிச்சாரு, இப்போ இரண்டாயிரம் ஏக்கர் இருக்கு..’ என சலீம் சொல்வான். தவ்ஃபீக்கின் வீட்டை சுற்றி பெரிய தோட்டம் போல காட்டுவார்கள். அதை ரோஜா செடியென பலர் நினைத்திருக்க வாய்ப்புண்டு, ஆனால் அது ஓபீயம் (Opium). ‘A humble gift, from a humble farmer’ என விஸாமிடம் தவ்ஃபீக் சொல்வது ஞாபகம் இருக்கிறதா? போதை மருந்து வியாபாரம் தான் அவர்களது பயங்கரவாத தாக்குதல்களுக்கு தேவைப்படும் பணத்திற்கான முக்கிய ஆதாரம் என சொல்லும் காட்சி அது. (உலகத் தேவைக்கான அளவில் 80% ஓபீயம், ஆஃப்கனில் இருந்துதான் கிடைக்கிறது).

- NATO தாக்குதல் நடத்தி சென்ற ஆஃப்கன் கிராமத்தில், பலர் இறந்து கிடப்பார்கள் (டாக்டர் மற்றும் சிறுவர்கள் உட்பட). கொஞ்சம் உற்று கவனித்து பார்த்தீர்கள் என்றால், அந்த டாக்டரை சுட்டுக் கொன்றது கையில் துப்பாக்கியுடன் இறந்து கிடக்கும் அந்த சிறுவன்தான் என தெரியும் (அந்த டாக்டர் இறந்து கிடக்கும் விதம், சிறுவன் இருக்கும் திசையை பாருங்கள்). NATO தாக்குதல் தொடங்கிய நொடியில், ஏதோவொரு பதட்டத்தில் ‘இதற்கெல்லாம் காரணம் வெள்ளைக்காரர்கள் தான்’ என அந்த சிறுவன் டாக்டரை கொன்றிருக்க வாய்ப்புண்டு.

பயங்கரவாதம் பற்றி பேசும் இப்படியொரு திரைப்படத்தில் நடுநிலைத்தன்மையோடு காட்சிகளை அமைப்பது மிக முக்கியம்; அதை செய்ய கமல் முயற்சித்திருக்கிறார். அதனால் தான், கதாநாயகனது வேடத்தையும் இஸ்லாமியனாய் படைத்து நல்லவனாக காட்டியிருப்பார். கிளைமாக்ஸில் பாம் வெடிப்பதற்கு முன் பயங்கரவாதிகள் தொழுவதைப் போல, பாம் வெடிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு முன் விஸாமும் தொழும் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். விஸாம் ஒரு முஸ்லிம் என்பதாலேயே, அவர் மீது நம்பிக்கை இல்லாமல், அவருக்கு இந்தியா மீது தேசப்பற்று இல்லையென நினைத்து, அவர் கட்டளைகளுக்கு கீழ்படியாத அதிகாரி கதாபாத்திரத்தின் மூலம் பல விஷயங்களை சொல்லாமல் சொல்லியிருப்பார் கமல்!

 
kamal haasan vishwaroopam

‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ஆஃப்கன்-அமெரிக்க அரசியலை பேசிய விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டது. ‘அமெரிக்கா காரன் எண்ணெய்க்காக சண்டை போடுறான். நாம எண்ணெய் எடுக்க pipe போட்டுக்கோன்னு சொன்னா, அவனும் நம்ம கூட சேர்ந்து ‘அல்லாஹு அக்பர்’ சொல்வான்’ என ஜோக் அடித்த ஒரு காட்சியைத் தவிர, மற்ற எல்லா காட்சிகளிலும் அமெரிக்கர்களை ரொம்ப நல்லவர்கள் போலவே காட்டியிருந்தது விமர்சிக்கப்பட்டது. “அமெரிக்கன்ஸ் குழந்தைங்களை, பொம்பளைங்களை கொல்லமாட்டாங்க” போன்ற வசனங்கள் எல்லாம் அதன் உச்சம்! அமெரிக்கா ஆஃப்கனை கைப்பற்றியதே போதை மருந்து உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத்தான் எனவும், ஆஃப்கனில் நுழைந்ததுமே ஓப்பியம் பயிரிட்ட விவசாயிகளை அழைத்து ‘உங்கள் ஓபியம் பயிர்களை நாங்கள் எதுவும் செய்யமாட்டோம், இன்னும் நிறைய பயிரிடுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என சொல்லியதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை சொல்கிறது. அமெரிக்க NATO படைகள் பெருமளவு ஆஃப்கனை கைப்பற்றிய பின்னரும் எப்படி இவ்வளவு ஓபியம் உற்பத்தியாக முடியும்? தலிபான்கள் கையில் இருந்த ஓபியம் வியாபாரம் இப்பொழுது அமெரிக்க ஆதரவுடன் நடக்கிறதாம், இதனால் 2001இல் இருந்ததை விட 5 மடங்கு அதிக ஓபியம் ஆப்கானில் உற்பத்தியாகின்றதாம். இதைப் பற்றியெல்லாம், ஏதாவதொரு காட்சியோ அல்லது சின்ன வசனமாவது ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் இருந்திருக்க வேண்டும். மாறாக, ஏதோ அமெரிக்க திரைப்படம் போல அமெரிக்க ராணுவத்தை ஹீரோக்களாக மட்டுமே காட்டிவிட்டார்கள்.

இந்த குறைகளைத் தாண்டி, ‘விஸ்வரூபம்’ ஒரு சிறப்பான பொழுதுபோக்கு திரைப்படம். 2013ஆம் ஆண்டின் இறுதியிலேயே ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகியிருக்க வேண்டும்; ஆனால் தயாரிப்பாளர் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் அவர்களின் முந்தைய படங்களின் நஷ்டத்தால் 5 வருடங்களாக இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில், ஏப்ரல் 2018இல் ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘விஸ்வரூபம்’ கிளைமாக்ஸில் பாம் வெடித்துவிடும் என்கிற நம்பிக்கையில் விமானத்தில் கிளம்புகிறான் ஒமர். பாம் வெடிக்கவில்லை, விஸாம் தடுத்துவிட்டான் என தெரியும்பொழுது அமெரிக்காவை விட்டு ஏற்கனவே ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகிவிட்டது. அமெரிக்காவை ஏதும் செய்யமுடியவில்லையே என்கிற கோபம் ஒமருக்கு, ஒமரை பிடிக்க முடியாத வருத்தம் விசாமுக்கு. இரண்டாம் பாதியில் ஒரு காட்சியில் ‘என்னதான் இருந்தாலும், விஸாம் நம்மள்ல ஒருத்தன் இல்லையா’ என சலீம் கேட்கையில், ‘உனக்கு முழுக்கதை தெரியாது, அதான் அவனை நம்புற...’ என ஒமர் சொல்கிறான். அந்த முழுக்கதையும் இரண்டாம் பாகத்தில் சொல்லப்படும் என எதிர்பார்க்கலாம்.

முதல் பாகத்தின் முடிவில், இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளைக் காட்டி எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தார்கள். ஆஃப்கனில் இருக்கையில் ஒமர் விஸாமை சுட, விஸாம் அமெரிக்க ராணுவத்தால் காப்பாற்றப்பட்டு ஹெலிகாப்டரில் மேலே இழுக்கப்படுவதைப் போல ஒரு காட்சியும், அதற்கு முன் தான் இருக்கும் இடத்தைக் காட்டுவதைப் போல விஸாம் ஹெலிகாப்டருக்கு வெளிச்சம் காட்டுவதைப் போல ஒரு காட்சியும் காட்டப்பட்டது. அதே போல, விஸாமை ஒமர் கட்டிப்போட்டு வைத்திருப்பதைப் போல் ஒரு காட்சியும் காட்டப்பட்டது. மொத்தத்தில், முதல் பாகம் நம் முன் வைத்த பல கேள்விகளுக்கான பதில்களையும், ஒமர் மற்றும் விஸாம் இடையிலான ஒரு பலமான மோதலையும் ‘விஸ்வரூபம் – 2’ திரைப்படத்தில் எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எப்படி கையாளப் போகிறோம் ?

விக்கிபீடியா விஞ்ஞானிகளை உ ங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம். யூ-டியூப் பிரபலம்.  சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டு...