bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 11 நவம்பர், 2018

அமெரிக்க மிரட்டலுக்கு அடங்கிப்போன மோடி.

ஈரான் விவகாரத்தில் நடந்தது என்ன?

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதாரத் தடைக்கு உட்படுத்திடுவோம் என்கிற அமெரிக்க அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு மோடி அரசாங்கம் அடங்கிப்போயிருக்கிறது. 

ஆயினும், இந்தியாவுக்கும் மற்றும் ஏழு இதர நாடுகளுக்கும் தற்காலிகமாக இப்பொருளாதாரத் தடையைத் தளர்த்தி இருப்பதைப் பார்க்கும்போது முதல் பார்வையில் நம்புதற்கரியதாகவே தோன்றுகிறது.
எனினும், ஈரான் மீதான பொருளாதாரத் தடை தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் அமைச்சர் மைக் போம்பியோ (Mike Pompeo) அளித்துள்ள அறிக்கையை அலசிப்பார்க்கும்போது விஷயங்கள் தெளிவாகின்றன. 

அமெரிக்கா, ஈரான் மீது நவம்பர் 5ஆம் தேதியிலிருந்து எண்ணெய் வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் வங்கித்துறை ஆகியவற்றின் மீது பொருளாதாரத் தடையை மறுபடியும் விதித்திருக்கிறது. இத்துறைகளின் கீழ் எந்த நாடாவது, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்டால், அந்த நாடுகளும் பொருளாதார முற்றுகைக்கு உட்படும். 
அமெரிக்கா, இந்த ஆண்டு மே மாதத்தில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த பின்னர், இவ்வாறு தன் விருப்பப்படியான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அந்த சமயத்தில், அமெரிக்க நிர்வாகம், எண்ணெய் ஏற்றுமதிகள் மீதான பொருளாதாரத் தடை ஆறு மாத காலத்திற்குள் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அணு ஆயுதங்கள் வளர்ச்சிக்காக ஈரானுடன் செய்து கொண்டிருந்த அணு ஒப்பந்தம் என்பது ஜேசிபிஓஏ என்கிற கூட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டம் (JCPOA-Joint Comprehensive Plan of Action) என்று அழைக்கப்படுகிறது. 
இந்த ஒப்பந்தமானது ஈரான், அமெரிக்காவுடன் மட்டும் செய்துகொள்ளவில்லை. 
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், ருஷ்யா மற்றும் சீனம் ஆகிய ஆறு நாடுகளுடனும் செய்துகொண்டிருந்தது. 

இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவினை வேறெந்த நாடுகளும் ஒப்புக் கொள்ளவில்லை. 
அந்த நாடுகள் அனைத்துமே, ஈரான் ஒப்பந்தத்தில் கண்டுள்ள விதிமுறைகளின்படி செயல்பட்டு வந்திருக்கிறது என்றும், எனவே அமெரிக்கா ஜேசிபிஓஏ ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டிருப்பது தேவையற்றது என்றும் கூறியிருக்கின்றன. 
அந்நாடுகள் அனைத்துமே ஈரானுடன் வர்த்தகத்தைத் தொடர்வோம் என்றும் கூறியிருக்கின்றன.

ஈரானிடமிருந்து எண்ணெய் பெறும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாவது பெரிய நாடாக விளங்குகிறது. 
தற்சமயம், இந்தியாவிற்கு எண்ணெய் வழங்குவதில் ஈரான் மூன்றாவது பெரிய விநியோகஸ்தர் நாடாகும். கடந்த ஆறு மாத காலமாகவே, அமெரிக்கா, ஈரானைப் பொருளாதாரத் தடைக்கு உள்ளாக்குவதற்கான தயாரிப்புகளைச் செய்துகொண்டிருக்கும் சமயத்திலேயே, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை வெட்டிவிடுமாறு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது.

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே செப்டம்பர் மாதத்தில், 2+2 அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற சமயத்திலேயே, ஈரானிடமிருந்து கணிசமான அளவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்வது என்ற புரிந்துணர்வுக்கு இந்தியா வந்துவிட்டது. 

இப்புரிதலின் அடிப்படையிலேயே, ஆறு மாத கால அளவிற்கு, இந்தியா, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை, படிப்படியாகக் குறைத்துக் கொள்வதற்கு, அமெரிக்கா உடன்பட்டிருக்கிறது. எனினும், எதிர்காலத்தில், இந்தியா, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்திக்கொள்வதற்கான நிர்ப்பந்தத்தை அளித்திடும் வேலையை அமெரிக்கா தொடர்ந்திடும்.
மேலே கூறிய அனைத்தும், நவம்பர் 2 அன்று அமெரிக்க அரசாங்கத்தின் அமைச்சர் மைக் போம்பியோ

 ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சமயத்தில் மிகவும் தெளிவான முறையில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. 
அவர் மேலும், “எட்டு அம்சங்களுக்குச் சில தற்காலிக சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன” என்று கூறியிருக்கிறார். 
எனினும், “இவ்வாறு சலுகைகள் வழங்கியிருப்பதற்குக் காரணம், அவர்கள் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைத்தும், மற்றும் பல முனைகளில் ஒத்துழைப்பு நல்கியும்,” அவர்கள் விசுவாசத்தைக் காட்டியிருப்பதுதான் காரணம் என்று மேலும் கூறியிருக்கிறார்.

ஆம், இந்தியா, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைத்து, அமெரிக்காவிற்குத் தன் “விசுவாசத்தைக்” காட்டி இருக்கிறது. 

அமெரிக்காவிற்கும், (இந்தியாவிற்கும் இடையே 2+2 அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சற்று முன்னதாக) 2018 மே மாதத்தில் நாளொன்றுக்கு 6 லட்சத்து 90 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்ததை, ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 4 லட்சம் பேரல்களாகக் குறைத்துவிட்டது. 
2017-18இல் இந்தியா ஈரானிடமிருந்து 22.6 மில்லியன் டன்கள் (2 கோடியே 26 லட்சம் டன்கள்) எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது. இந்தியா, ஆண்டொன்றுக்கு 15 மில்லியன் டன்கள் வாங்கக் கூடிய அளவிற்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கட்டளையிட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. 

அதாவது நாளொன்றுக்கு 3 லட்சம் பேரல்கள் மட்டும்தான் வாங்க வேண்டும்.ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை முழுமையாக ரத்து செய்தால், அது “எண்ணெய் மீதான வர்த்தகத்தில் அதிர்ச்சி”யை ஏற்படுத்திடும் என்பதால், நாங்கள் அவ்வாறு முழுமையாக ரத்து செய்திடுங்கள் என கோரவில்லை என்று ஜனாதிபதி டிரம்ப் மிகவும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். 

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுமையாக விலக்கிக்கொண்டால், அதன் விளைவாக எண்ணெய் விலையில் மிகப்பெரிய அளவிற்கு உயர்வு ஏற்படும். அவ்வாறு உயர்வு ஏற்படும்போது அது உலகப் பொருளாதாரத்திற்கே அதிர்ச்சியை அளித்திடும்.எனவேதான், இந்தியாவிற்கு, எண்ணெய் இறக்குமதி செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளுமாறு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 
இதுவே இந்தியாவிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திடும். 

2018-19ஆம் ஆண்டான நடப்பு நிதியாண்டிற்கான எண்ணெய் இறக்குமதி செலவு, 125 பில்லியன் டாலர்களுக்கு அதிகரித்திடும், (அதாவது 42 சதவீத உயர்வு,) என எதிர்பார்க்கப்படுகிறது. 
உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்திருப்பதாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாலும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் மலிவான விலையில் எண்ணெய்யைக் கொடுத்துக் கொண்டிருப்பது, ஈரான் நாடுதான். 

இப்போது அதனிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை மிகப் பெரிய அளவில் குறைத்திருப்பதால், நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கான கட்டணம் மேலும் உயரும். 
இது நம் நாட்டின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.

இவ்வாறு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இந்தியாவின் நலன்களைக் காவு கொடுத்திருப்பதை, ஆட்சியாளர்கள் தற்போது மிகப்பெரிய சாதனை போன்று சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். 
மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், நவம்பர் 3 அன்று செய்தியாளர்களிடம், “பிரதமரின் தீவிரமான பிரச்சாரம் காரணமாக எண்ணெய் இறக்குமதி செய்திடும் நாடுகளின் நலன்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீங்கள் உதாசீனம் செய்துவிட முடியாது. 
உலக அரசியல் நிலைமையைப் புரிந்துகொண்டு, இந்தியா எண்ணெய் இறக்குமதியில் சாத்தியமானதைச் செய்திருக்கிறது. அமெரிக்கா, இந்தியா உட்பட சில நாடுகளுக்கு எண்ணெய் இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகளில் தளர்ச்சியினைத் தந்திருக்கிறது,” என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். 

இது உண்மையைப் பூசிமெழுகும் வேலையேயாகும்.அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் எண்ணத்தை அறிவித்த சமயத்தில், மத்திய அயல்துறை அமைச்சரான ஸ்வராஜ், “இந்தியா ஐ.நா. விதிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குத்தான் கட்டுப்படுமேயொழிய, எந்தவொரு நாடும் விதிக்கும் பொருளாதாரத் தடைகளுக்கும் கட்டுப்படாது,” என்று, அறிவித்திருந்தார். 

ஆனால், அதன்பின்னர், அமெரிக்காவிடம் எண்ணெய் இறக்குமதி தொடர்பான நிபந்தனைகளைத் தளர்த்திக்கொள்ளுமாறு பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கொண்டதன் மூலம், ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தற்போது மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்திருக்கிறது என்பதையே நவம்பர் 5 அன்று அரசுத்தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. 
இந்த அறிவிப்பிலிருந்து இந்தியா, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு முழுமையாக அடிபணிந்துள்ளது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
இவ்வாறு தற்காலிகத் தளர்விற்கும்கூட இந்தியா அதிக விலை கொடுத்திருக்கிறது என்பதே அமெரிக்க அமைச்சர் பாம்பியோவின் அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. 

“ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் தற்காலிகத் தளர்வு அளிக்கப்பட்டுள்ள இந்த நாடுகளிடமிருந்து மிகவும் ஆழமான சலுகைகளைக் கோரியிருக்கிறோம்,” என்று அவர் கூறியிருக்கிறார். 
இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ள ஆழமான சலுகைகள் என்ன என்று இன்னமும் வெளிச்சத்திற்கு வரவில்லை.

அமெரிக்கா அளித்துள்ள மற்றுமொரு உரிமை விட்டுக்கொடுப்பு என்பது, ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்வதற்கு அனுமதி அளித்திருப்பதாகும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவின் நலன்களே பெரிதும் உள்ளன. ஏனெனில் இந்தத் துறைமுகமானது, இந்தியா, பாகிஸ்தான் வழியே வராமலேயே ஆப்கானிஸ்தானத்திற்கு செல்வதற்கு வழிவகுத்திடும்.ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை மிகவும் கோழைத்தனமான முறையில் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையே இல்லை. முதலாவதாக, முந்தைய ஐ.நா. பொருளாதாரத் தடைகள் போல் அல்லாமல் இப்போது விதிக்கப்பட்டிருக்கிற பொருளாதாரத் தடையானது, அமெரிக்காவால் ஒருதலைபட்சமாக விதிக்கப்பட்ட ஒன்றாகும். இவ்வாறு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையை ஜேசிபிஓஏ-இல் அதன் கூட்டணி நாடுகளாக இருக்கும் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கின்றன. ஜேசிபிஓஏ-இல் கையெழுத்திட்டுள்ள மற்ற இரு நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை உறுதியாக எதிர்த்திருக்கின்றன.பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் அயல்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் இணைந்து நவம்பர் 2 அன்று ஒரு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அவர்கள், “ஈரானுடனான நிதி மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பேணிப்பாதுகாத்திடவும், நிலைநிறுத்திடவும் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை ஈரான் தொடர்ந்திடவும்,” உறுதி அளித்திருக்கின்றனர்.அவர்கள் மேலும், ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஜேசிபிஓஏ-இன் பங்கேற்பாளர்கள் என்ற முறையில் தொடர்ந்து இணைந்து பணியாற்றிடுவோம் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும் ஜேசிபிஓஏ-ஐ ஆதரித்திடும் வேறு பல நாடுகளுடனும் தொடர்ந்து பணியாற்றிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மோடி அரசால் முடியாது...
இந்தியா போன்று அல்லாமல், சீனா, அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடையைக் கண்டித்திருக்கிறது. அமெரிக்காவின் ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடையை சீனா எதிர்க்கிறது என்றும், சீனா தொடர்ந்து தன்னுடைய “இயல்பான ஒத்துழைப்பை” ஈரானுக்கு நல்கிடும் என்றும், சீன அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரகடனம் செய்திருக்கிறார். இவ்வாறு, இந்தியா, விருப்பப்பட்டால், அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட முன்வந்துள்ள இதர பெரிய நாடுகளுடன் இணைந்தும் அவற்றுடன் ஒத்துப் பணியாற்றியும், இந்தியா, ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தையும் மற்றும் இதர வர்த்தக முதலீடுகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியும். அவ்வாறு செய்வது மட்டுமே, இந்தியாவின் நலன்களையும் பாதுகாத்திடுவதற்கான வழியுமாகும்.ஆனால், இந்தியா, மோடி அரசாங்கத்தின் ஆர்வக்கோளாறினால் அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறி, போர்த்தந்திரரீதியாக அதனைக் கட்டித்தழுவிக்கொண்டிருக்கிறது. அதன் கட்டளைகளை மீறக்கூடிய நிலையில் அதற்குத் தைரியம் கிடையாது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீற வேண்டுமானால், இந்தியா முன்பு இருந்தது போன்று தன்னுடைய சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை பேணிப் பாதுகாத்திட வேண்டுமானால், அதற்கு அது தற்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ராணுவ சூழ்ச்சிக் கூட்டணியை முறித்துக் கொள்ளவேண்டும். ஆனால் மோடி அரசாங்கத்தால் அத்தகுப் பாதையில் சிந்தனை செய்திடவே முடியாது.

நவம்பர் 11, 2018
தமிழில்:ச.வீரமணி
நன்றி:தீக்கதிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...