bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 27 நவம்பர், 2018

வரலாறு படைத்த ஐராவதம் மகாதேவன்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐராவதம். 

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பர்மாவில் அவர் பணியாற்றியபோது அவரது குடும்பமும் அங்கேதான் இருந்தது. 
அப்போது 1930ல் பிறந்தவர் மகாதேவன்.

சில ஆண்டுகளில் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வந்த பின்பு, திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த மகாதேவன் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில்இணைந்து இளங்கலை வேதியல் பட்டம் பெற்றார்.
 பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்டஅறிஞரானார். 

அதன் பின் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றிபெற்று, 1953ல் அவ்வாண்டின் தமிழ்நாட்டுக் குழுவைச் சேர்ந்த இஆப அதிகாரியாக அறிவிக்கப் பட்டார். 

மத்திய அளவிலும் மாநிலத்திலும் கடமைப் பொறுப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகச் செயலாற்றினார். 

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையில் ஒரு அதிகாரியாக 1958 முதல் 1961 வரையில் பணியாற்றிய போது அவருக்கு, அலுவலகத்திற்கு அருகில் இருந்த இந்திய அருங்காட்சியகத்திற்கு அடிக்கடி சென்றார்.
 அங்கிருந்த தொன்மை சார் தகவல்களும் தடயங்களும் அவரை ஈர்த்தன. 

அதன் தலைமைக் காப்பாளராக இருந்தகல்வெட்டு ஆய்வாளர் சி. சிவராமமூர்த்தி அவரது ஆர்வத்தைக் கண்டு, தென்னிந்திய எழுத்தியல் வரலாறுபற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்குவித்தார்.

பின்னர், அதிகாரம் மிக்க ஆட்சிப் பணி பொறுப்பி லிருந்து 1980ல் தன் விருப்ப ஓய்வு பெற்றார் ஐராவதம் மகாதேவன். நெடுங்கால லட்சியமான எழுத்தியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இவ்வாறு பதவி விலகினார்.

1987ல் ‘தினமணி’ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. 
அவரது பன்முகக் கல்வியறிவும் சமூக அக்கறையும் தமிழ் நாட்டமும் இதழியல் பணியை நான்காண்டு காலம் சிறப்பாக நிறைவேற்றத் துணையாக அமைந்தன.

 தினமணியில் அதுவரையில் இருந்த எழுத்து நடையில் நல்ல தமிழ்ச்சொற்களைக் கொண்டுவரச் செய்ததில் அவர் காட்டிய ஈடுபாடு பிற பத்திரிகைகளுக்கும் ஒரு ஈர்ப்பாக அமைந்தது என்றால் மிகையில்லை. பத்திரிகைப் பணிக்குப் பிறகு தனது ஆராய்ச்சிகளிலேயே முழுமையாக ஈடுபட்டார். 

அவரது ஆயுளின் பிந்தைய முப்பதாண்டு காலம் இந்திய எழுத்தியல் தொன்மைகள் பற்றிய அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிகளிலேயே கடந்தன. 


 உலக அளவில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துப் படிவங்கள் பற்றி ஆராய்ந்து புகழ்பெற்ற சிலரது வரிசையில் மகாதேவனும் இடம்பெற்றார், நுட்பமான, கடுமையான உழைப்பின் அடிப்படையில் அன்றைய அந்த எழுத்துரு திராவிட எழுத்துருவே என்று நிறுவினார்.

இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் நிதியுதவியோடு நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர் ஆக்கிய‘சிந்து பதிவுகள் – எழுத்தாக்கங்கள், பொருளாக்கங்கள், பட்டியல்கள்’ என்ற நூல் விரிவான ஆராய்ச்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தது என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள். 
இந்தியத் தொல்லியல் துறை 1977ல் அந்தப் புத்தகத்தை வெளியிட்டது. 

அவருடைய கட்டுரைகள் வாய்மொழி வழியிலான ரிக் வேதப் பதிவுகளுக்கும் எழுத்துப்பூர்வமான சிந்துசமவெளி பதிவுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது சாமானியமான பணியல்ல. 


குறிப்பாக அவர், அறிவியல் கண்ணோட்டத்தோடு வரலாற்றை அணுகிய இந்தியாவின் ரொமிலா தாப்பர், பின்லாந்து நாட்டின் அஸ்கோ பார்ப்போலோ போன்ற முன்னணி ஆய்வாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இயங்கினார்.

தமிழ் எழுத்து, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மையை நிறுவிட முயலும் சக்திகளுக்கு அவரது ஆராய்ச்சிகள் பெருந்துணையாக அமைந்துள்ளன என்று இளம் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவர் ‘பண்டைய தமிழ் எழுத்தியல்’ பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். 

 2003ல் அந்த நூல் வெளியிடப்பட்டது. 

பின்னர் 2014ல் மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனம் அதனை மறுவெளியீடு செய்தது. 
கரூர் அருகில் உள்ள புகளூர் பகுதியில் கிடைத்த தமிழ் பிரம்மி எழுத்துகள் பற்றிய அவரது ஆய்வு சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுகளில் புதிய ஆர்வத்தைத் தூண்டியது என்கிறார் மூத்த எழுத்திய லாளர் முனைவர் நாகசாமி. 

மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் எழுத்துரு தொடர்பான ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டார். 
1961ல் வர லாற்றாய்வாளர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அவர் சில. குகைகளில் உள்ள எழுத்துகள் பற்றிக்கூறியதுதான் தனக்கு இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தைக் கொடுத்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஐராவதம் மகாதேவன்.

 எழுத்தியல் போலவே அவர் பண்டைய நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சியிலும் அக்கறை காட்டினார். 
அதே அளவுக்கு ஆராய்ச்சியும் முக்கியமானது என்று இந்திய தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளரும், ஊரகக் கல்வி மற்றும் மரபுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான டி.சத்தியமூர்த்தி கூறுகிறார்.
இத்தகைய பணிகள் அவருக்கு 1970ல் ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப் விருதையும், 1992ல் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் ஃபெல்லோஷிப் விருதையும், 2009ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுத்தந்தன. 
1998ல் அவர் இந்திய எழுத்தியல் அமைப்பின் மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
2001ல் இந்திய வரலாற்று பேராயத்தின் பொதுத் தலைவரானார்.

தமிழ் பிரம்மி குறிப்புகள் தொகுப்பு (1966), அகம் புறம்– சிந்து எழுத்துரு அறிகுறிகள் (2010), ரிக் வேத வழி சிந்து பதிவுகளுக்கான திராவிட ஆதாரம் (2014) ஆகிய நூல்களும் அவரது முக்கியப் பங்களிப்புகளாகும்.
                                                                                                                                                                                                                                                   -அ.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...