bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 3 நவம்பர், 2018

மஞ்சள் கடுதாசி நிறுவனத்தில் கோடிகளில் முதலீடு.

கருப்பு பணம், கள்ள பண ஒழிப்பு என கூறி பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் நாட்டின் சாமானிய மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என அனைவராலும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. 
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு புகழ்பாடி வருகிறார்.
கடந்த 2016 டிசம்பர் மாதம் 8ம் தேதி திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உயர்மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். 

இதனால் கள்ள பணம் மற்றும் கருப்பு பணம் முற்றிலும் ஒழிய போவதாக பிரதமர் உள்பட பா.ஜ.க தலைவர்கள் பலரும் புகழ் பாடி வந்தனர். 
மேலும், எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்கள் உணவு உட்கொள்ள முடியாமலும், வெளியூர்களுக்கு செல்ல முடியாமலும், சிறு, குறு வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை நடத்த முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகினர். 
மேலும், இதனால் சாமானிய மக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் இறக்கவும் நேரிட்டது. நாட்டின் வங்கிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.
கடந்த நிதியாண்டின் முடிவில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கையின்படி, பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 99.9% வங்கியிடம் வந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. 
இதன்மூலம் இந்த நடவடிக்கையால் எந்த கருப்பு பணமும், கள்ளப்பணமும் ஒழியவில்லை என தெளிவாகியது. 
மாறாக அனைத்து கருப்புப்பணமும் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளன.பாஜக தலைவர் அமித்ஷா தலைமையிலான குஜராத் மாநில கூட்டுறவு வங்கி பலகோடிகளை முறைகேடாக புதிய பணமாக ஒருவாரத்தில் மாற்றியுள்ளது.
தற்போது அரசுமுறை சுற்றுப் பயணமாக தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா சென்றுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று இரவு அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் முன் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலர் தங்களின் தலையணைகள், மெத்தைகள் மற்றும் குளியலறையில் பதுக்கிய பணம் தற்போது வங்கியினுள் வந்துவிட்டதாக புகழாரம் சூட்டியுள்ளார். 
ஆனால், உண்மையில் கறுப்புப்பணம் வைத்தவர்கள் அனைவருக்கும்  அனைத்தும் வெள்ளைப்பணமாக மாற்றித்தரப்பட்டுள்ளன என்பதே உண்மை .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மஞ்சள் கடுதாசி நிறுவனத்தில் கோடிகளில் முதலீடு.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 126 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. 
இந்த ஒப்பந்தம் கடந்த 2016ல் மத்திய பாஜக அரசால் முதற்கட்டமாக 36 விமானங்களை வாங்குவது என மாற்றப்பட்டது. மேலும், இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை ஒப்பந்தத்திலிருந்து நீக்கி விட்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகராக இணைத்தது.
முன்பு 526 கோடிக்கு ரூபாய் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரபேல் விமானத்தின் விலையை 3 மடங்கிற்கு மேலாக அதிகரித்து 1670 கோடி ரூபாய்க்கு வாங்கப்போவதாக மத்திய மோடி அரசு அறிவித்தது பெரும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. 
மேலும், இந்த ஒப்பந்தத்திற்காகவே துவங்கப்படுவது போல அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு வெறும் 10 நாட்களேயான நிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இது ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் இருப்பதை உறுதி செய்வதாக அமைந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது ஆதாரத்துடன்  கூறியதாவது : 
"ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியும், பிரதமர் நரேந்திர மோடியும் பங்குதாரர்களாக வேலை செய்து வருகிறார்கள். 
மேலும், நரேந்திர மோடி அரசு ரபேல் போர் விமானத்தின் விலையை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்தில் ஏன் பிரான்ஸ் நாட்டு டசால்ட் நிறுவனம் ரூபாய் 284 கோடியை முதலீடு செய்ய வேண்டும்? 
என கேள்வி எழுப்பினார். மேலும், ஒப்பந்தத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திய பிரதமரை காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்து பொய்களை பேசி வருகிறார்"என குற்றஞ்சாட்டியுள்ளார் .
ராகுல் குற்றம் சாட்டி மூன்று நாட்கள் ஆனபின்னரும் பாஜகவினரோ,பாஜக அரசோ,மோடியோ இதுவரை பதில் தரவில்லை.
அம்பானி நிறுவனம் மட்டும் இது அரசியல் குற்றசாட்டு என்று மட்டும் பதில் தந்துள்ளது. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                     

வாட்ஸ்அப் செயலிக்கு மாற்று செயலிகள்…!

                                                                                                                                                                                                                                                                                                                                                                        என்.ராஜேந்திரன்                                                                                                                                                   
      பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ்அப். இதற்கு மாற்றாக வேறு செயலியே கிடையாதா என்று பலரும் நினைக்கக்கூடும். பல செயலிகள் இருக்கின்றன. வாட்ஸ்அப் செயலியை விட கூடுதலான வசதிகளும் அவற்றில் இருக்கின்றன. இருந்தாலும் வாட்ஸ்அப் போல அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. காரணம் வணிக யுக்திகள்தான்.ஒருவேளை செய்திகளை அனுப்பும்போது மின்னஞ்சல் போல ஜிமெயிலில் இருந்து ஹாட்மெயிலுக்கோ, யாகூவுக்கு அனுப்புவது போல வாட்ஸ்அப் செயலியிலிருந்து டெலிகிராம், வைபர் போன்ற பிற செயலிகளுக்கு தகவல் அனுப்பும் வசதியிருந்திருந்தால் மற்ற செயலிகளும் அதிக அளவு பயன்பாட்டிற்கு வந்திருக்கக் கூடும்.
எப்போதும் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தே இருப்பது எதேச்சதிகாரத்திற்கே வழிவகுக்கும். அதிக பயனரைக் கொண்ட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பலவும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் மூலமாகத்தான் வருமானத்தையும் ஈட்டுகின்றன. சென்ற வாரம் கூகுள் சேவைக்கு மாற்றாக உள்ள பிற சேவைகளை அறிமுகம் செய்தோம். இந்த வாரம் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக உள்ள செயலிகளைப் பற்றி பார்ப்போம்.
வைபர் (Viber)
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இருக்கும் செயலிகளில் முக்கியமான செயலி இது. மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் மற்றவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. வாட்ஸ்அப் தற்போது கொண்டு வந்துள்ள சேவையான அனுப்பிய தகவல்களை அழிக்கும் வசதியை இரண்டு வருடங்களுக்கு முன்பே இச்செயலி அறிமுகப்படுத்திவிட்டது.மெஸேஜிங், காலிங், படங்கள், வீடியோ ஆகியவற்றுடன் ஆவணங்கள், ஜிப் செய்யப்பட்ட கோப்புக்கள் என எந்த ஒரு கோப்பையும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. வாட்ஸ்அப் செயலியை விட பேட்டரியை மின்சாரத்தை குறைந்த அளவே இச்செயலி பயன்படுத்துகிறது.
லைன் (Line)
இதுவும் வாட்ஸ்அப்பிற்கு நல்ல மாற்றுதான். வாட்ஸ்அப் தரும் எண்ணற்ற வசதிகள் இதிலும் உண்டு. குறிப்பாக தரமான இலவச வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதியைக் குறிப்பிடலாம். ஜப்பானின் ஃபேஸ்புக் என்று கூறப்படும் இச்செயலி உலக அளவில் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இச்செயலியில் 1 GB அளவு வரையிலான கோப்புகளைக்கூடப் பகிர்ந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்ட், ஆப்பிள், விண்டோஸ் என அனைத்து இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம்.
ஹைக் (Hike)
இந்தியத் தயாரிப்பு என்ற பெருமையுடன் வலம் வரும் இச்செயலி, இந்திய இளைஞர்களிடையே புகழ்பெற்றது. கூகுள் பிளேஸ்டாரில் 29 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனரைக் கொண்டிருக்கிறது. இதில் ஸ்டிக்கர் எனப்படும் கருத்துப் படங்கள் இந்திய மொழிகளில் வலம் வருவது கூடுதல் பலம். ஃபேஸ்புக் போன்ற டைம்லைன் வசதி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள், குரூப் அரட்டை, முழு மறையாக்கம் என முன்னணி செயலிகள் தரும் பல வசதிகள் இதிலும் உண்டு.
டெலிகிராம் (Telegram)
வாட்சப்பில் இல்லாத பல அம்சங்கள் இதில் உள்ளன. டெலிகிராமில் அனுப்பப்படும் குறுந்தகவல், சில விநாடிகளுக்குப் பிறகு தன்னைத் தானே அழித்துக்கொள்ளும்படி நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும். டெலிகிராமில் 1.5 GB வரையிலான கோப்புகளைப் பகிர முடியும்.
சிக்னல் (Signal)
இந்த செயலி டெலிகிராம் செயலியைப் போன்றே ஓப்பன்சோர்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் மட்டுமல்லாமல் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினி இயங்குதளங்களிலும் பயன்படுத்தக் கூடியது. தகவல்களை முழு மறையாக்கம் செய்து பாதுகாக்கும் வசதிகள் உள்ளடங்கியுள்ளது.
கூகுள் அல்லோ (Google Allo)
வாட்சப்பிற்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் அல்லோவைத் தயாரித்துள்ளது. கூகுள் அஸிஸ்டெண்ட் வசதியைக் கொண்டு குரல் வழி செய்திகளை டெக்ஸ்ட்டாக மாற்றிப் பகிரலாம். நம்முடைய மனநிலையை வெளிப்படுத்தும் தனித்துவம் மிக்க ஸ்டிக்கர்களை பகிரும் வசதி உள்ளது. அரட்டையின்போது தேவைக்கேற்ப எழுத்துக்களை பெரிதாக்கவும் சிறிதாக்கியும் பகிரும் வசதி எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது.மேற்கண்ட செயலிகள் மட்டுமல்லாமல் வீசேட் (Wechat), ஸ்கைப் (Skype), ஹேங்அவுட் (Hangout),ஃபேஸ்புக் மெஸென்ஜர் (Facebook Messenger). சேட்ஆன் (ChatON), டேங்கோ (Tango), பிபிஎம் (BBM) எனப் பல செயலிகளும் வாட்ஸ்அப் தரும் வசதிகளையும் பிற செயலிகள் தரும் வசதிகளையும் ஒன்றிரண்டை சேர்த்தோ மாற்றியமைத்தோ தருகின்றன. 
டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகள் அனைத்து செயலிகளிலும் பொதுவாகக் கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...