திங்கள், 5 நவம்பர், 2018

நியூட்ரினோ....

இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (Matter) எனலாம். 
இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை.
ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் இறுதித்துகள் என நம்பப்பட்டது. 'அணு' (Atom) என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) 'பிளக்க முடியாதது' என்பதாகும்.
இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவைகளால் ஆனவை எனக் கண்டறியப்பட்டது. இவைகளை அணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர்.
மேலும், புரோட்டானும் நியூட்ரானும் ஒன்று சேர்த்து இருக்கும் பகுதி அணுக்கரு (Nuclei) என சொல்கிறது அறிவியல்.
அணுவினுள் பல்வேறு உட்துகள்கள் (Subatomic particles) இருப்பதாகவும் பிறகு கண்டறியப்பட்டது. அணு உட்துகள்களை மூலத்துகள் (எதனாலும் உருவாக்கப்படாதவை) மற்றும் கலவைத் துகள்கள் எனப் பிரித்தனர்.
எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge) உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும்.
முதலில் நியூட்ரினோவிற்கும் நியூற்றான் என்ற பெயரே இருந்தது. இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். 
இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம் "A little neutral one" என்பதாகும்.
சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ.
அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது.
நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது.
இதனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே பல கோடி நியூட்ரினோக்கள் உங்கள் உடலை ஊடுருவி இருக்கும்.
இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. 
அது எப்பொருளுடனும் எவ்வித வினையும் புரியாது.

அது இவ்வுலகில் சிறு துரும்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காது. 

நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அதுபோலத்தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம்.
இருக்கும் அணுத்துகள்களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றது. இது வருவதும் தெரியாது போவதும் தெரியாது.
1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர்.
அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்களுக்கு நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது.
1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் காலம் இழுத்துக்கொண்டே சென்றது.
2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy) இத்திட்டத்தில் முழுவீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக்கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
பொட்டிபுரத்தில் திட்டமிட்டுள்ள நியூட்ரினோ கூடத்தில் வைக்கப்படவுள்ள ஆய்வுகருவிகளைப் போன்ற ஒரு மினி கலோரிமீட்டர் கருவியை தயாரிப்பதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டனர்.

நியூட்ரினோ ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .


இத்திட்டத்துக்கு தேனீ மாவட்டம் பொட்டிபுரம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது?
இந்த ஆய்வு மையத்தை அமைப்பது இந்திய நியூட்ரினோ ஆய்வகம். (ஐஎன்.ஓ.). 15 கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 50 அறிவியலாளர்கள் சேர்ந்து தேசிய நியூட்ரினோ கூட்டுக் குழு என்ற ஒன்றை உருவாக்கி இந்த ஆய்வில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த ஆய்வு மையம் அமைக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நீலகிரி மாவட்டம் சிங்காராவில் அமைப்பதாகதான் இருந்தது. இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரையை அடுத்து, இம்மையம் சிங்காராவில் அமைய 2009 ஆம் ஆண்டு அனுமதி மறுத்தார் அப்போதைய சுற்றுசூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ். மையம் அமைக்க திட்டமிடப்பட்ட பகுதி அருகிலேயே பந்திப்பூர் மற்றும் முதுமலை சரணாலயம் இருக்கிறது என்பதுதான் இதற்கான காரணம்.
இதன் பின்தான், இத்திட்டம் தேனி மாவட்ட போடி மேற்கு மலைக்கு 2010 ஆம் ஆண்டு இடமாறியது. அதற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகமும் அனுமதி அளித்தது. மரங்கள் வெட்டப்பட கூடாது; அப்பகுதியில் உள்ள காட்டிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மலை சார்ந்த பகுதியையே தேர்ந்தெடுக்க என்ன காரணம். இதை சமதளத்தில் அமைக்க முடியாதா? 
 "நியூட்ரினோ ஏனைய அணுத்துகள்கள் போல எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதிநவீன கருவிகளைக்கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தினாலும் மிக குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதன் இயற்பியல் தன்மை அப்படியானது. மேலும், நியூட்ரினோ துகளை பதிவு செய்யும் பொழுது ஏனைய அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்களும் பதிவாக வாய்ப்புள்ளதால் ஏனையவைகள் முற்றிலுமாக வடிகட்டப்பட வேண்டும். நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை. இதற்காகதான் தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மலையின் உள்ளே ஓர் ஆய்வு மையத்தையும், மலைக்கு வெளியே அலுவலகம் மற்றும் குடியிருப்பையும் அமைப்பதுதான் திட்டம்.

மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப் பெரிய அளவுள்ள காந்தமையப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில் விட்டு வைக்கப்படும். இதற்குள் செல்ல 2.1 கி.மீ நீளத்திற்கு 7.5 அகலத்திற்கு குகை அமைக்க இருக்கிறார்கள்.
காந்தத்தின் செயல்பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டி அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப்போகிறார்கள்.
நியூட்ரினோ ஆய்வு மையம் எப்போதுமே செயல்படும் நிறுவனமாக இருக்காது. ஆய்வுகள் முடிந்த பின்னர், இந்த மையம் என்னவாகும் என்ற தெளிவான பதில் அரசிடம் இல்லை. இந்த மையம் தொடர்பாக முதலில் அரசு வெளியிட்ட அறிக்கையில் இந்த மையம் எதிர்காலத்தில் அணு கழிவுகளை சேகரித்து வைக்கும் இடமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைகள் எழுந்ததும், அந்த வார்த்தை தவறுதலாக எழுதப்பட்டது என்று சமாளித்தார்கள். 
மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாக உள்ள தேனி மாவட்ட பொட்டிபுரத்தில் உள்ள மலையை குடைந்து, வெடிவைத்து தகர்த்து வேலைகள் நடைபெறும்போது, அது சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.இன்று கல்குவாரிகள் இருக்குமிடங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது அரசுக்கு தெரியாததல்ல.
அதைவிட பலமடங்கு மலையை தகர்க்கும் இத்திட்டத்தில் பாதிப்பே வராது என்பது பொய்யானது என்பது தெளிவாகவே தெரிகிறது.
நியூட்ரினோ நோக்குக் கூடம் அமைப்பதில் அரசு காட்டும் அக்கறையை ஏன் சாதாரண மனிதர்களின் சாதாரண தேவைகளை பூர்த்திசெய்வதில் காட்டுவதில்லை. 
இந்த அறிவியல் திட்டத்தால் சாதாரண மக்களுக்கு என்ன  பயன் கிடைக்கக்கூடும்?
அவர்களின் அன்றாட வாழ்வில் எந்த விதத்தில் இந்த அறிவியல் மாற்றத்தைக் கொண்டுவரும்? மக்களின் வாழ்வாதாரத்தை உயர்தாத எந்த திட்டமும் பயனற்ற திட்டம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அமெரிக்க மிரட்டலுக்கு அடங்கிப்போன மோடி.

ஈரான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதாரத் தடைக்கு உட்படுத்திடுவோம் என்கிற அமெரிக்க அரசாங்...