இந்தியாவின் புகழ்பெற்ற செல் மூலக்கூறு உயிரியல் (cellular molecular biology) விஞ்ஞானி புஷ்ப மித்ரா பர்கவா (Pushpa Mittra Bhargava) ஆகஸ்ட் 1, 2017 அன்று காலமானார்.
அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், ஆய்வுமுறை மற்றும் சீர்திருத்த சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ளல் ஒவ்வொரு குடிமகனும் உள்ள அடிப்படைக் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 51(அ) வரையறுத்துள்ளது.
அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் யதார்த்தத்தில் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் காலத்தில் இதை தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு கடைசிவரை நேர்மையாகப் பின்பற்றியவர் பர்கவா.
1928-ம் ஆண்டு ராஜஸ்தான் அஜ்மீரில் பிறந்த பர்காவா, வாரணாசியில் உள்ள தியாசபிகல் கல்லூரியிலும், குயின்ஸ் கல்லூரியிலும் படித்தார்.
அங்கு 1944-ம் ஆண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார்.
1946-ம் ஆண்டில் கரிம வேதியியல் துறையில் தனது எம்.எஸ்.சி. பட்டத்தை பூர்த்தி செய்தார். தனது 21-ம் வயதில் லக்னோ பல்கலைக்கழகத்தில் செயற்கை கரிம வேதியியல் துறையில் ஆய்வுப்படிப்பை (PhD) முடித்தார்.
மைய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் (CSIR) ஹைதராபாத்திலுள்ள செல்லுலார் மூலக்கூறு உயிரியல் ஆய்வுமையத்தின் (CCMB) நிறுவன இயக்குனராகவும் இருந்தார். இந்த ஆய்வுமையம் இந்திய அணுசக்தியின் தந்தை என்றழைக்கப்படும் ஹோமி பாபாவால் துவங்கப்பெற்ற டாடா அடிப்படை ஆய்வுகளுக்கான நிறுவனத்துடன் (TIFR) ஒப்பிடத்தக்கது. அதனால், பர்கவா இந்திய மூலக்கூறு உயிரியல் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். பிரதமரின் அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் வகித்தவர் பர்கவா.
1946-களில் துவங்கப்பட்ட இந்திய அறிவியல் தொழிலாளர்கள் சங்கத்தின் (Association of Scientific Workers in india) நிறுவனர்களில் ஒருவர் பர்கவா. அறிவியலாளர்களும் கூட கூட்டு நலன்களைக் கொண்ட தொழிலாளர்களே; அவர்கள் பொது நலனுக்கான வேலைகளைத் தொடர்வதற்கு தங்களை ஒரு தொழிற்சங்கத்தில் அமைப்பாக்கிக் கொள்ளவேண்டும் என்றார் பர்கவா. மேலும், அப்போதைய பிரதமர் நேருவை தங்களது சங்கத்தின் தலைவராக இருக்க ஒப்புக் கொள்ளச் செய்தார்.
மற்ற முக்கிய அறிவியல் நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் போபால் யூனியன் கார்பைடு ஆலை விபத்தைப் பற்றி மவுனம் சாதித்தபோது பர்கவா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதியாக நின்றார்.
1981-ம் ஆண்டு அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தை (Society for the Promotion of Scientific Temper) உருவாக்கிய விஞ்ஞானிகளில் பர்கவாவும் ஒருவர்.
1994-ம் ஆண்டு, அரசின் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சோதிடத்தை சேர்க்கும் முடிவை இந்திய அறிவியல் கழகங்களின் கூட்டிணைவு எதிர்க்காததால் அதன் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பர்கவா.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதித்ததை கடுமையாக எதிர்த்துவந்தார் பர்கவா. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அறிமுகம் செய்யப்படுவதை குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு தள்ளிப்போட வேண்டும் என்று கூறிவந்தார்.
2015-ம் ஆண்டில் பகுத்தறிவாளார்கள் கல்புர்கி, பன்சாரே ஆகியோரது படுகொலைகள், மாட்டிறைச்சியின் பெயரால் தாத்ரி படுகொலை ஆகியவற்றைத் தொடர்ந்து மோடி அரசின் சகிப்பின்மைக்கு எதிராகவும், அறிவியல், பகுத்தறிவுக்கு எதிரான இந்துத்துவத்தின் தாக்குதலைக் கண்டித்தும் 1986-ல் தனக்கு வழங்கப்பட்டிருந்த பத்ம பூஷன் விருதை திருப்பிக் கொடுத்தார் பர்கவா.
“உள்ளார்ந்த நம்பிக்கையினாலும் மூடநம்பிக்கையினாலும் பெறப்பட்டதும்…
மதம், பழக்கவழக்கம் மற்றும் பாரம்பரியதால் உந்தப்பெற்றதும்…
அறிவியல் அறிவு மற்றும் திறந்த மனப்பான்மையுடன் நேரடி முரண்பாடு உடையதுமான..
பழமைவாத, உணர்ச்சிவயப்பட்ட, பகுத்தறிவற்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாக அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் அதை நடைமுறை செயல்படுத்துவதும் இந்தியாவில் முன்னெப்போதையும் விட இன்றைய உடனடித் தேவையாகும்”.
– அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்து பர்கவா 1980-களில் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி.
மக்களிடம் அறிவியல் மனப்பான்மையையும் பகுத்தறிவையும் வளர்ப்பதற்கு பன்முகத் தன்மையுடன் பணியாற்றிய பர்கவாவின் மரணம் இந்திய மக்களுக்கும், அறிவியல் துறைக்கும் மீப்பெரும் இழப்பாகும்.
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த குரு கோல்வால்கரை மங்கி ஆக்கிய பர்கவா :
பர்கவாவின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இன்றைய காலப்பொருத்தம் கருதி ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்த தலைவர் கோல்வால்கரை மூக்குடைத்த அவரது சந்திப்பு பற்றிய சிறுபகுதியை கீழே தருகிறோம்:
1966-ம் ஆண்டு பசு வதையை தடை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பூரி சங்கராச்சாரியார் பசு வதைக்கெதிராக உண்ணா விரதத்தை தொடங்கினார்.
அப்போது ஹைதரபாத் பிராந்திய ஆய்வுக் கூடத்தில் (Regional Research Laboratory) வேல இசெய்து வந்தார் பர்கவா. 1967-ம் ஆண்டு அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தின் சார்பில் பசுவதை தடை தொடர்பாக ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதற்கு தலைமை தாங்கினார் பர்கவா. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரபல டாக்டர் பி.ராம்சந்தர், “நாம் பசுக்களை தின்னாவிட்டால், அவை நம்மை தின்றுவிடும்” என்று குறிப்பிட்டார். இது அன்றைய பத்திரிக்கைகளில் வெளியாகி அரசின் பிராந்திய ஆய்வுக் கூடத்தில் வேலை செய்து வந்த பர்கவாவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியது.
அரசு ஆய்வகத்தில் மேற்படி கலந்தாய்வுக் கூட்டத்தை எப்படி ஏற்பாடு செய்யலாம் என்று கேள்விகள் எழுப்பபட்டன. மத்திய அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சர்க்கார் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குகுழுவில் பூரி சங்கராச்சாரியார், ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வல்கர், அமுல் புகழ் வர்கீஸ் குரியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
கோல்வல்கர் பர்கவாவிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.
நீங்கள் பிராமணரா?
இறைச்சி சாப்பிடுவீர்களா?
பிராமணராக இருந்து எப்படி சாப்பிடுகிறீர்கள்?
என்று நீண்டன கேள்விகள்.
அத்தனைக்கும் பொறுமையாக பதிலளித்தார் பர்கவா.
ஒரு உடல் எப்படி இறைச்சியை உருவாகுகிறது?
அடிப்படை உயிர்வேதியலைக் கொண்டு இறைச்சி உடலில் எப்படி உருவாகிறது என்று விளக்கினார். நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் புரதங்கள் இரைப்பை உள்ளிட்ட செரித்தல் உருப்புகளில் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன. அவை இரத்தத்தின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு புரதமாக மறுகட்டமைக்கப்பட்டு திசுக்களாக மாறுகின்றன. இது தான் உடலில் இறைச்சி – திசுக்கள் உருவாகும் விதம்.
எனில் பால் எப்படி உருவாகிறது?
பாலும் இறைச்சியைப் போலவே அதே செயல் முறையில்தான் உருவாகிறது.
பாலும், இறைச்சியும் ஒரே மாதிரியாகத்தான் உருவாகின்றன என்றால் நீங்கள் ஏன் இறைச்சியை விட்டுவிட்டு பாலை உண்ணக்கூடாது – இது கோல்வால்கர்.
இதே தர்க்கத்தில் “பாலும், இறைச்சியும் ஒரே மாதிரியாகத்தான் உருவாகின்றன அப்படியிருக்க நீங்கள் ஏன் இறைச்சியை உண்ணக்கூடாது” – இது பர்கவா.
பர்கவாவின் எதிர்கேள்வி ஆர்.எஸ்.எஸ்-சின் கோல்வல்கரை மங்கியாக ஆட வைத்துவிட்டது. அவரை சமாதானப்படுத்த சங்கராச்சாரி பெருமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அன்றைய சித்தாந்தத் தலைவராக இருந்தாலும் சரி அவருடைய இன்றைய அடிபொடிகளாக இருந்தாலும் சரி லேசாக எதிர்கேள்வி கேட்டு மடக்கினாலே அவர்களுக்குள்ளிருக்கும் பாசிச மங்கியை வெளிக் கொணர்ந்துவிடலாம். பின்னர், தன்னை சந்தித்த பர்கவாவிடம் அருமையாக பதிலடி கொடுத்ததாக நீதிபதி சர்க்கார் பாராட்டியுள்ளார்.
பின் குறிப்பு: “அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதற்காகவும், இந்துக்களை பசு என்ற குறியீட்டைக் கொண்டு ஒன்று திரட்டவுமே பசுவதை தடை அரசியலைக் கையில் எடுத்தேன்” என்று பின்னர் வர்கீஸ் குரியனை சந்தித்த கோல்வல்கர் கூறியதாக குரியன் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி:வினவு, – நாசர்
கட்டுரையை எழுத உதவிய மூலங்கள்:
- A champion of reason
- Renowned scientist Pushpa Mitra Bhargava passes away
- When P.M. Bhargava’s Biochemistry Lesson on Beef Threw Golwalkar Into a Fit
- Why P.M. Bhargava Will Be Remembered as a Forthright Institution-Builder
- Pushpa Mittra Bhargava – conscientious scientist and advocate of scientific temper
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக