”எனக்கு 50 நாட்கள் மட்டும் கொடுங்கள்; இந்த முடிவு தவறாகப் போனால் என்னைப் பொதுவிடத்தில் வைத்து தூக்கிலிடுங்கள்” – கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பிளிறினார் மேதகு பாரத பிரதமர் மோடி.
அது நவம்பர் 13-ம் தேதி, 2016-ம் வருடம். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்த் தாள்கள் செல்லாது என அறிவித்த ஐந்தாம் நாள் மேற்படி “மேதகு” கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றச் சென்ற போது தான் நாடெங்கும் மக்கள் வங்கிகளின் வரிசையில் நிற்கும் போது தங்கள் உழைத்துச் சம்பாதித்த காசு திடீரெனச் செல்லாததாக அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொண்டால் ”டைரக்ட்டாக” சொர்க்கம் தான் என அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் வேறு ஒரு சுவாரசியமான தகவலையும் பிரதமர் அவர்கள் வெளியிட்டார்.
அதாவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நகைகள் வாங்குவதற்கு பான் எண்கள் கட்டாயம் என்கிற விதியைத் தளர்த்திக் கொள்ளுமாறு தனக்கு கடிதங்கள் எழுதியதாகவும், என்றாவது அதைத் தான் வெளியிட்டால் அந்த உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கே செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், நேர்மையின் உறைவிடமான திருவாளர் மோடி “அந்தக் கடிதங்களை” வெளியிடவும் இல்லை; அதற்குப் பின் அதைப் பற்றிப் பேசவும் இல்லை.
பிட்டத்தில் பற்ற வைக்கப்பட்ட நெருப்பின் வெப்பம் மக்களை எட்டு திசைகளிலும் சிதறியோடச் செய்து விட்டதால் நாமும் அதை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற பாரதப் பிரதமருக்கு நினைவூட்ட மறந்து விட்டோம்.
இப்போது விசயம் அதுவல்ல.
மத்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 15.44 லட்சம் கோடியில் 15.28 லட்சம் கோடி வங்கிகளுக்குத் திரும்ப வந்து விட்டதாக அறிவித்துள்ளது.
அதாவது வெறும் 1 சதவீதம் மட்டுமே மீண்டும் வங்கிகளுக்குத் திரும்பவில்லை. பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணங்களில் முக்கியமானது – இந்நடவடிக்கை கள்ளப் பொருளாதாரத்தை ஒழித்து விடும் என்பது.
அதாவது, பணத்தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின், வங்கிகளுக்குச் செலுத்துவோர் முறையான கணக்குகளை ஒப்படைக்க வேண்டியிருக்கும் என்றும், பதுக்கல்காரர்களுக்கு அவ்வாறு செய்ய இயலாது என்பதால் தமது கருப்புப் பணத்தை வங்கிகளில் கட்டாமல் மறைத்து விடுவார்கள் என்பதும் அரசு சொன்ன வியாக்கியானம்.
ஆனால், நடந்தது என்ன? வெறும் 16 ஆயிரம் கோடி மட்டுமே வங்கிகளுக்குத் திரும்பவில்லை. இந்தப் பதினாறாயிரம் கோடி “கருப்பு” பணத்தை ஒழிப்பதற்காக புதிய பணத்தாள்கள் அச்சடித்த வகையில் மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடியைச் செலவழித்துள்ளது அரசு.
இந்தச் செலவோடு, புதிய பணத்தாள்களை வங்கிகளுக்கு அனுப்புவதற்கு ஆன போக்குவரத்து செலவு, லட்சக்கணக்கான ஏ.டி.எம் இயந்திரங்களை புதிய பணத்தாள்களுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்வதற்கான செலவு, பழைய ரூபாய்த் தாள்களை எண்ணுவதற்கு செய்யப்பட்ட செலவு, வங்கி ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்வதற்கு கொடுத்த படி என மற்றவைகளையும் சேர்த்தால் மேலும் சில ஆயிரம் கோடிகள் செலவாகி இருக்கும்.
சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்தனர்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் காரணமாக சுமார் 1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இத்தனைக்கும் பிறகு பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தின் மதிப்பு வெறும் 1 சதவீதம் என்கிற ரிசர்வ் வங்கியின் அறிக்கை.
இந்த அறிக்கை வெளியாவதற்கு பதினைந்தே நாட்களுக்கு முன்பு – சுதந்திர தினத்தன்று – தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிப் பேசிய பிரதமர் கொஞ்சமும் கூச்சமே படாமல் “மூன்று லட்சம் கோடி” கருப்புப் பணம் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் கண்டறியப்பட்டதாக பொய்யுரைத்தார்.
சரி, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படியே பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் 16 ஆயிரம் கோடி கருப்புப் பணம் கண்டறியப்பட்டதாக சொல்வதாவது உண்மை தானா?
இல்லை.
திரும்ப வராத 16 ஆயிரம் கோடி என்பது நேபாள் நாட்டின் மத்திய வங்கியிடம் உள்ள பழைய ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களையும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்ட நோட்டுக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வந்தடைந்த தொகையாகும்.
தற்போது நேபாள் வங்கி இந்திய ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதே போல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளிடம் இருக்கும் பழைய தாள்களும் திரும்ப வரும் போது ஒன்று செல்லாத நோட்டுக்கள் அனைத்துமே திரும்ப வந்திருக்க வேண்டும் –
அல்லது அதற்குக் கூடுதலான தொகை (15.44 லட்சம் கோடிக்கும் மேல்) திரும்ப வரும்.
இதன் பொருள் என்ன?
முதலாவதாக, சுழற்சியில் இருந்த கருப்புப் பணம் அனைத்தும் சட்டப்பூர்வமான வழிகளிலேயே வெள்ளைப் பணம் ஆகியுள்ளது.
இரண்டாவதாக, சுழற்சியில் இருந்த போலி ரூபாய்த் தாள்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நல்ல ரூபாய்த்தாள்களாக மாறியுள்ளது. அடுத்து, பணம் சார்ந்த பொருளாதாரத்தை ஒழித்து மின்னணுப் பொருளாதாரமாக (Digital Economy) மாறிச் செல்வதற்கு பணமதிப்பழிப்பு நடவடிக்கை உதவும் என்கிற வாதமும் பொய்யென்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது.
மேலும் பணமதிப்பழிப்பு நடவடிக்கை தீவிரவாத தாக்குதல்களைக் குறைக்கும் என்பதும் ஏற்கனவே பொயாகியுள்ளது – சொல்லப் போனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஆக,
மத்திய பாரதிய ஜனதாவின் முட்டாள்தனமான நடவடிக்கையின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததும், லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழப்புக்கு ஆளானதும், நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்ததும், கருப்புப் பண முதலைகள் சட்டப்பூர்வமாக கருப்பை வெள்ளையாக்கியதுமே நடந்துள்ளது.
நன்றி:வினவு,
மேலும் படிக்க:
- ‘HANG ME if I’m wrong’: Fighting back the tears Modi says that an end is in sight for India’s money madness as the exchange limit is raised by Rs 500
- ‘Shame on RBI’: Chidambaram on Figures Post Demonetisation
- This Is How 2 Lakh ATMs In India Will Get A Complete Makeover
- Demonetisation will cause loss of Rs 1.5 lakh crore to GDP: P Chidambaram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக