bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 31 ஆகஸ்ட், 2019

பொருளாதார நெருக்கடி எங்கிருந்து துவங்கியது?

                                                                                                      -பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

 பல நாட்களாக ஊடகங்களில் இந்திய பொருளாதாரம் தற்போது எதிர்கொள்ளும் மந்த நிலையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக அதன் தொனி எப்படி இருக்கிறது? “ இன்றைக்கு பெரும் பெரும் கம்பெனிகள் நெருக்கடியை சந்திக்கின்றன. அரசு, அவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளை விலக்கி சலுகைகள் வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் அவர்கள் பலருக்கு  வேலை கொடுப்பார்கள் ” என்ற பாணியில் போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் சரியான அணுகுமுறையா என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
 
1950 – 1990 காலகட்டம்
விடுதலை பெற்றபோது, இந்தியா மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. நம் உழைக்கும் மக்கள் உற்பத்தி செய்து கொடுத்த உபரிகளை எல்லாம் பிரிட்டிஷ் காலனியாதிக்க சக்திகள் எடுத்துக் கொண்டு சென்றனர். பல்வேறு துறைகளில் நாம் பின்தங்கியிருந்தோம். நவீன துறைகள் இங்கு கிடையாது. பின்தங்கிய விவசாயம்; அதில் நிலப்பிரபுக்கள், மிராசுதாரர்கள் ஆதிக்கம்; சாதிய ஒடுக்குமுறை, பிற்போக்கான சமூகம்; அதேபோன்று சிமெண்ட், சர்க்கரை, ஜவுளி  போன்ற சில தொழில்கள் தவிர வேறு எதுவும் இல்லாத சூழல். அதற்குப் பிறகுதான் ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டு வந்து, பொதுத்துறை முதலீடுகளை முன்வைத்து, இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டிலே உற்பத்தி என்ற முறையில், சுங்கச் சுவர்கள் எழுப்பி, அந்நிய நாட்டுப் பொருட்களை தடுத்து இந்தியாவிற்குள்ளேயே தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். அது ஓரளவு விறுவிறுப்பாக முதல் மூன்று ஐந்தாண்டு (1950 முதல் 1966 வரை) திட்டங்களில் இது நடைபெற்றது. ஏனென்றால் அப்போது சூழலே மாறியிருந்தது. அமெரிக்கா நீங்கலாக, இதர மேலை நாடுகளை ஆண்டு வந்த வல்லரசுகள் முதல் உலகப் போர், பெரும் வீழ்ச்சி (Great Depression), பின்னர் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றால் பலவீனம் அடைந்திருந்தன. அன்றைக்கு இவர்களையெல்லாம் எதிர்கொண்டு ஹிட்லரையும் தோற்கடித்த மாபெரும் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவை எதிர்கொள்ளும் அளவிலான பெரும் வல்லரசாக திகழ்ந்தது. அதனுடைய அனுபவம் என்னவென்றால் அரசினுடைய முன் முயற்சியில் வளர்ச்சியை சாதிக்க முடியும்; திட்டமிடுதல் என்பது சாத்தியம்தான்; ஒரு நாட்டை வளர்ப்பதற்கு பெரிய முதலாளிமார்கள் தேவையில்லை; அரசும் மக்களும் இணைந்து செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

விடுதலைக்குப்பின் சோவியத் வல்லரசின் சாதனைகள் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், இந்தியா முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் பயணித்தது என்பதையும் சோசலிசப் பாதையில் போகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய அரசின் வாசகங்கள் சோசலிசத்தின் பேரில் அவ்வப்பொழுது  முன்வைக்கப்பட்டாலும் இந்தியாவின் வளர்ச்சியில் டாடா, பிர்லா போன்ற மிகப்பெரும் முதலாளிகளே பெரும் பங்கு வகித்தனர். இவர்களுடன் அரசும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.   195௦ முதல் 1980 வரை ஒரு வகையான பொருளாதார வளர்ச்சி இருந்தது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமான இறக்குமதிக்கு மாற்றாக இந்தியாவில் உற்பத்தி, பொதுத் துறை, திட்டமிடுதல், ஒரு வரம்பிற்கு உட்பட்ட நில சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றுடன், பசுமைப் புரட்சியும் இணைந்தது. இது விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், நவீன உற்பத்தி முறையை பரவலாக்கவும் உதவியது. அதன் மூலம் சாகுபடி பரப்பளவு குறைந்தால் கூட, தானிய உற்பத்தியையும் வேளாண் உற்பத்தியையும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது. இதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. சிலர் அதிகம் பயன்பெற்றனர். சிலர் பயன்பெறவில்லை. இருந்தாலும், ஒட்டுமொத்தமாக நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட பசுமைப்புரட்சி முக்கியப் பங்காற்றியது.

உலகை மாற்றிய நிதி மூலதனம் 
இந்த சூழலில்தான் நாம், 1980-க்கு வருகிறோம். 1945-60 காலத்தில்  இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகம் எப்படி மாறிக் கொண்டிருந்ததோ, அதேபோன்று 80களில் ஒரு மாற்றம் வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின் தங்களது ஓரளவு வலுவை இழந்திருந்த மேலை நாட்டு வல்லரசுகள், 30 ஆண்டு கால வளர்ச்சியில் மீண்டும் வலுப்பெற்றன. இப்பின்புலத்தில், பழைய காலனியாதிக்க முறைகளை நேரடியாக அமல்படுத்த முடியாவிட்டாலும், வளரும் நாடுகளின் சந்தைகளை, மூலப் பொருட்களை, அங்கிருக்கக் கூடிய மலிவான உழைப்பை எப்படி பயன்படுத்துவது என்பதில் தீவிரமாக மேலை நாட்டு வல்லரசுகள் களம் இறங்குகிறார்கள். பன்னாட்டு கம்பெனிகள் ஒரு மிகப் பெரிய சக்தியாக வருகின்றன. குறிப்பாக, மேலை நாடுகளில் 1950 முதல் 1980 வரை இருந்த 30 ஆண்டு காலத்தில் சேர்க்கப்பட்ட ஏராளமான செல்வங்கள் (பெரும் பெரும் கம்பெனிகளின் லாபங்கள்) அனைத்தும் பன்னாட்டு சந்தைகளில் பணமாக உலா வருகிறது. இதிலிருந்து பண மூலதனத்தின் ஆதிக்கத்தை உலகில் நீங்கள் 80களில் பார்க்க முடியும். (பன்னாட்டு பணமூலதன வளர்ச்சிக்கு வேறு சில காரணங்களும் உண்டு.) இந்த பண மூலதன ஆதிக்கம் படிப்படியாக சோசலிச நாடுகளையும் சிதைக்கிறது. அங்கேயும் அதனுடைய செயல்பாடு துவங்குகிறது. இதேபோன்று, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் பன்னாட்டு பண மூலதனம் வரும்போது, பன்னாட்டு வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கி வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல இடங்களில் கடன்களை வாங்குகின்றன.

கடன் நெருக்கடி
இந்நிலையில், விரைவாக இந்த கடன்களை திருப்ப முடியாத நெருக்கடி நிலை ஏற்படும்போது, மேலைநாடுகள் சொல்வதைக் கேட்கிற இடத்திற்கு கடன் வாங்கிய நாடுகள்  வந்து விடுகின்றன. உலக வங்கி, ஐஎம்எப், உலக வர்த்தக அமைப்பு போன்ற  அமைப்புகளின் ஆதிக்கம் மேலைநாடுகளிடம் (ஐரோப்பா, அமெரிக்கா) இருக்கிறது. அந்த நாடுகள் ஜி-7 என்று சொல்லக்கூடிய ஏழு பணக்கார நாடுகள். இவர்கள் வளரும் நாடுகளின் வளர்ச்சியின் மீது  கணிசமாக செல்வாக்கு செலுத்தும் இடத்தில் உள்ளன. தொழில்நுட்பம், சந்தை, நிதி, தகவல் தொடர்பு ஆகிய  துறைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த பன்னாட்டு சூழல் வளரும் நாடுகளுக்கு சொந்த காலில் நின்று வளருவது என்பதை  சவாலாக்குகிறது. குறிப்பாக, சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு அமெரிக்கா தலைமையில் ஒருதுருவ உலகம் உருவானது. வளரும் நாடுகள் மேலும் கூடுதலாக மேலை நாடுகளை சார்ந்து வளரவேண்டிய நிலை வலுப்பெற்றது. இதற்கு விதிவிலக்காக ஒரு சில சோஷலிச நாடுகள் சுயசார்பு தன்மையிலான வளர்ச்சிக்கு முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன.  இவற்றில் மிக முக்கியமானது மக்கள் சீனம். நீண்ட நெடிய போராட்டங்களுக்குப்பின்  சோசலிசப் புரட்சி செய்து, மக்கள் சீனம் வளர்கிறது. ஆனால், பொதுவான விதியாக, வளரும் நாடுகள் மேலை நாடுகளைச் சார்ந்து நிற்கின்ற நிலை பரவலாக உள்ளது.  மேலை நாடுகள், உலக வங்கி போன்ற அமைப்புகள் மூலமாக வளரும் நாடுகளின் கொள்கைகளை நிர்ணயிக்கிறார்கள். தேவை என்று கருதினால், நேரடியாகவும் தலையிடுகின்றனர். உலகவங்கி, ஐ எம் எப் நிறுவனங்களில் முக்கிய  பொறுப்பில் இருந்தவர்கள் இந்திய அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார கொள்கைகளை வகுக்கும் பொறுப்புகளுக்கு வருவதை தற்போது நாம் பார்க்கிறோம். குறிப்பாக, அண்மைக் காலங்களில் இது அதிகரித்திருக்கிறது.

நவீன தாராளமயம் எப்படி அமலானது?
இவ்வாறு, 1980களுக்குப் பிறகு, உலக அளவில் மேலைநாடுகளின் மீட்சிக்குப் பிறகு, அவை மீண்டும் பெரும் வல்லரசுகளாக முன்வரும்போது, 80களின் இறுதியில் 90 களின் துவக்கத்தில் சோசலிச நாடுகள் பலவீனமடைகின்றன. இது ஒரு துருவ உலகத்தை ஏற்படுத்துகிறது. அப்போது மேலை நாடுகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கிறது. அந்த பின்புலத்தில்தான், 90களின் துவக்கத்தில் இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கை அமலாகிறது.  1960, 70களில் இருந்தது போல் நாம் இப்போது இருக்க முடியாது என சொல்லப்படுகிறது. அரசு முதலீடு செய்ய முடியாது, அரசிடம் பணம் இல்லை என்பதே புதிய கதையாடலாக வருகிறது. இந்திய பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கைகள் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் ஓங்குகின்றன.  செல்வந்தர்களுக்கு உடன்பாடு இல்லாத கொள்கைகளை அரசுகள் பின்பற்றுவதில்லை. செல்வந்தர்கள் மீது வரி போட அரசு தயாராக இல்லை. அப்படியென்றால் வரிப்பணம் எங்கிருந்து வரும்? பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் அதே வேகத்தில் அரசின் வரி வருமானம் உயர்வதில்லை. “அரசின் செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளிடம் கொடுத்து விடுவோம். பன்னாட்டு சரக்கு வர்த்தகம் மற்றும் பன்னாட்டு பணமூலதனம்  ஆகியவற்றின் மீதான அரசு  கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். இது தான் உலக அனுபவம்”  என்ற கதையாடல் முன்வைக்கப்படுகிறது. .
தனியார்மயம் என்று சொல்லும்போது பெருமுதலா ளிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும், அவர்களுக்கு கட்டுப்பாடு இருக்கக் கூடாது, நெறிமுறைகளை நீக்க வேண்டும் என்ற குரல் ஓங்குகிறது. அரசுப் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகள்கூட காசுக்கான பொருளாக, சந்தைப் பொருளாக மாற்றப்பட்டு, முழுவதும் தனியார்மய மாக்கலும், தாராளமயமாக்கலும் கொண்டு வரப்படுகிறது. இதனுடன் சேர்ந்து மேலை நாட்டு, பன்னாட்டு கம்பெனிகள் இன்னும் விரிவாக வளரும் நாடுகளில் பணமாக கொண்டுவந்து பங்கு சந்தைகளில், நாணய சந்தைகளில் ஊக வணிகம் செய்ய அங்கீகரிப்பதும் நிகழ்கிறது.  உலகமயமாக்கல் என்ற பெயரில் ஏராளமான தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்துவிட்டதாக கற்பனைக் கதையாடலும் நடக்கிறது. செல்போன், கம்ப்யூட்டர் போன்றவை மானுடத்தின் சாதனைகள்; உலகமயத்தின் சாதனைகள் அல்ல.  உலகமயம் என்பது இந்த தொழில்நுட்பத்தின் உதவி யோடு வளரும் நாடுகளை, மேலைநாடுகள் கையகப் படுத்தக்கூடிய வாய்ப்பை முன்வைக்கிறது. இதுதான் உலகமயம். மேலை நாட்டு பன்னாட்டு கம்பெனி களுக்கு சாதகமான விதிமுறைகள், வழிமுறைகள், பொருளாதார அம்சங்கள் என்ற இலக்கை வைத்துத்தான் இந்த பயணமே நடக்கிறது. இக்கொள்கைகள் ஏகப்பட்ட மூலதனத்தை இந்தியாவில் உற்பத்திக்கு கொண்டுவரும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும், ஏற்றுமதியை பெருக்கும், வறுமை ஒழிந்துவிடும் என்ற கதையாடல்கள் துவங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்தியாவின் முப்பது ஆண்டு அனுபவம் என்ன?
30 ஆண்டு அனுபவம் என்ன? பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாகத்தான் அரசின் புள்ளி விவரங்கள் நமக்கு கூறுகின்றன. ஏறத்தாழ சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீதம் தேசத்தின் உற்பத்தி மதிப்பு பெருகுவதாக கணக்கு (ஜிடிபி- சந்தை விலைகளின்படி, இந்திய உற்பத்தி மதிப்பு-உள்நாட்டு உற்பத்தி மதிப்பு) சொல்கிறார்கள்.  இது ஆண்டுக்கு 6 சதவீத வேகத்தில் வளருகிறது என்றால் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், இந்த வளர்ச்சியின் தன்மை என்ன? என்னென்ன துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கெங்கு வளர்ச்சி ஏற்படவில்லை? இதன் பயன்கள் யாருக்கு போயிருக்கிறது? இது நிலைத்து நிற்குமா? நீடிக்குமா? என்ற கேள்விகளை எழுப்பும்போது, பல சங்கடமான உண்மைகளை சந்திக்க வேண்டியுள்ளது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற இரண்டுமே அரசை விலக்கி வைத்துவிட்டு, பெரும் தனியார் முதலீட்டாளர்கள் (பெட்டிக் கடைகள் அல்ல), பெரிய பெரிய முதலாளிகள், தங்குதடையின்றி நம் நாட்டில் செயல்படக்கூடிய வழிகளை ஏற்படுத்துகிறது. அப்படி யென்றால், இவர்கள் எந்தவொரு சூழல் பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டியதில்லை; தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பற்றி கவலைப்பட தேவை யில்லை; லாபத்தை ஈட்டுவது மட்டுமே அவர்கள் இலக்கு. எப்படி வேண்டுமானாலும் லாபத்தை ஈட்டலாம் என்று பச்சைக் கொடி காட்டப்பட்ட சூழல்தான் இங்கு உள்ளது.

விவசாயியின் கதி?
இந்த 30 ஆண்டு கால வளர்ச்சியில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நாம் பொதுவாக பேசுகின்ற ஆலை உற்பத்தியும் பாய்ச்சல் வேகத்தில் நாட்டில் வளர வில்லை. நிகழ்ந்துள்ள வளர்ச்சியில் பெரும்பகுதி எங்கு என பார்த்தால், சேவைத்துறை (Service Sector) யில்தான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் சேவைத்துறை. அடுத்து 23 அல்லது 24 சதவீதம் ஆலை உற்பத்தி, மின்சாரம் உள்ளிட்ட தொழில்துறை மீதம் 16, 17 சதவீதம் தான் விவசாயத்தின் பங்கு. ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டு மக்கள் தொகையில் 68.4 சதவீதமான மக்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள். மொத்த இந்திய மக்களில் பாதிக்கும் சற்று அதிகமானோர் வேளாண்துறை வருமானத்தை சார்ந்திருக்கிறார்கள். அந்தத் துறை சரியாக செயல்படவில்லை. அதில் பெரும் முன்னேற்றமில்லை. அந்தத் துறையில் பெரும்பகுதி மக்கள் சாகுபடி செய்வதையே லாபகரமாக செய்ய முடியவில்லை என்ற நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். கடந்த 20 ஆண்டு களில் 3.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் சாகுபடியே செய்ய முடியாமல், செய்கிற சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல், விளை பொருட்கள் விலை சரிந்து, இடுபொருட்கள் விலைகள் ஏறி கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளனர்; கடன் கிடைப்ப தில்லை. இதெல்லாம் எங்கிருந்து வந்தது? தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கை என்ன சொல்லியது? நாட்டை திறந்துவிடு, வெளிநாட்டிலிருந்து அந்நிய வேளாண் பொருட்கள் வரட்டும்; விலை குறையும்; இடுபொருள் விலையை ஏற்ற வேண்டும். மானியம் கொடுத்தால் அரசுக்கு பற்றாக்குறை அதிகரித்துவிடும். பற்றாக்குறை கூடினால் வெளிநாட்டு நிதி முதலாளிகள் இங்கு வரமாட்டார்கள். வெளி நாட்டு முதலாளிகளை குஷிப் படுத்துவதற்கு, ஈர்ப்பதற்கு அரசு தனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வரிகளைப் போடக் கூடாது, போட்டால், ஊக்கம் குறைந்துவிடும். இக்கொள்கை தான் விவசாயிகளின் வாழ்வை பறித்துள்ளது.

யார் வரி செலுத்துவது?
அண்மையில், சித்தார்த்தா என்ற தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். அதையொட்டி, “வரி பயங்கரவாதம்” என்ற சொல்லாடல் முன்வைக்கப்பட்டது. ஏதோ ஏராளமான வரிகள் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்கப்படுவது போல் சித்தரிக்கப்பட்டது. உண்மை என்ன வெனில், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வாங்குகிற மொத்த வரி என்பது தேசத்தின் உற்பத்தியில் 15,16 சதவீதம் கூட கிடையாது. அதில் 3 இல் 2 பங்கு சாதாரண உழைக்கும் மக்கள் கொடுக்கின்ற மறைமுக வரிகள் (கலால் வரி, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் வரி). சாதாரண மக்கள்தான் பெரும்பகுதி மறைமுகவரிகளை  கொடுக்கின்ற னர். வரி கொடுப்பவர்கள் கோட்-சூட் போட்ட ஆள் என்று தொலைகாட்சிகளில் காட்டப்படும் பிம்பங்கள் உண்மைக்கு மாறானவை. விவசாயத் தொழிலாளியும் ரிக்சா ஓட்டுபவர்க ளும் இந்த நாட்டில் வரி கட்டுகிறார்கள். பெருஞ்செல்வந்தர் கள் வரி கட்டவில்லை என்று சொல்லவில்லை, அவர்கள் ஒரு மிகச் சிறிய பங்காற்றுகின்றனர்.  இன்றைக்கு, அரசு வளங்களைத் திரட்டாமல், மக்களுக்கு தேவையான கல்வியையோ, ஆரோக்கியத்தையோ, அடிப்படை கட்டமைப்பு வசதிகளையோ கொடுக்க முடியாது. அப்படி வருமானங்களை திரட்ட வேண்டுமானால், முக்கிய மான செயல் வரி போடுவதுதான். அதை முறையாக செய்ய வேண்டும். (இதை மிரட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதில் ஒரு சிறு  நியாயம் இருக்கலாம்.) இன்றைக்கு, நாம் எதிர்கொள்ளும் நெருக்கடி, மந்தநிலை எதை சுட்டிக் காட்டுகிறது? கடந்த 30 ஆண்டு வளர்ச்சி என்பது பெரும்பகுதி இந்திய மக்களின் வாங்கும் சக்தியை சார்ந்து இல்லை என்பதுதான்.
நம்மில் பெரும்பாலோர் தினமும் வேலைதேடிப் போகி றோம், அரசாங்கமே குறைந்தபட்ச கூலியாக ஒரு நாளைக்கு வெறும் 178 ரூபாயை நிர்ணயிக்கிறது. நீங்கள் 178 ரூபாய் கூலியில் ஒரு நாள் குடும்பத்தை நடத்திப் பாருங்கள். இது என்ன நியாயம்? வரி போடு கிறீர்கள் என கோடீஸ்வரர்கள் அலறுகின்றனர். ஆனால் நாள் முழுவதும் உழைக்கும் சாதாரண ஒரு உழைப்பா ளிக்கு 178 ரூபாய்தான் கொடுப்போம் என்றால் அதை நிச்சயம் பரிசீலிக்க வேண்டும். நம்முடைய முன்னுரி மைகள் அனைத்தும் தலைகீழாக இருக்கிறது. உழைப்பவ னுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க தயாராக இல்லை.

செல்வத்தை உருவாக்குவது முதலாளிகளா?
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சரும், பிரதமர் சுதந்திர தின உரையிலும், ‘Corporates are the wealth creators’ (பெரும் கார்ப்பரேட் முதலாளிகள்தான் இந்த நாட்டின் செல்வங்களை உருவாக்குகிறார்கள்) என்கின்றனர். இது என்ன அநியாயமாக இருக்கிறது? விவசாயி உற்பத்தி செய்கிறானா? தொழிலாளி உற்பத்தி செய்கிறா னா? விஞ்ஞானி உற்பத்தி செய்கிறானா? இவர்கள் யாரும் செல்வத்தை உருவாக்கவில்லையாம். முதலாளிகள்தான் செல்வத்தை உருவாக்குகிறார்களாம். இது என்ன வகையிலான பார்வை? இவர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். உடமையை வணங்குகிற, உடமைக்கு அடிபணிகிற அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். உழைப்புக்கு மரியாதை கொடுக்கிற அமைப்பில் நாம் இல்லை. அடிப்படை இந்திய பொருளாதார தத்து வத்தைப் பார்த்தால், நாம் ஏன் உழைப்புக்கு மரியாதை கொடுப்பதில்லை? ஏன் உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை முதல் இலக்காக வைப்பதில்லை?  “கம்பெனிகள் முதலீடு செய்வார்கள், அதன் வழியாக உற்பத்தியும் வருமானமும் அப்படியே வழிந்து வழிந்து கீழே வந்து உங்களுக்கும்  கொஞ்சம் கிடைக்கும்” என்ற தத்துவம் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.

அரசின் அணுகுமுறை 
இன்றைக்கு மந்த நிலையை எதிர்கொள்ளக் கூடிய இடத்தில் என்ன முன்வைக்கப்படுகிறது? அரசு, பெரிய பெரிய கம்பெனிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும், வரி விகிதங்களை குறைக்க வேண்டும், அரசினுடைய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற குரல்தான் ஒலிக்கிறது. ஆனால், இந்திய நாட்டினுடைய தொழில் வளர்ச்சி நிலைத்த வளர்ச்சியாக இருக்க வேண்டுமானால், பெரும்பகுதி மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வருமானம் உயர்ந்தால்தான் பொருளை வாங்க முடியும்.

மீள்வதற்கு என்னதான் வழி?
இந்திய நாட்டின் சந்தையை விஸ்தரிப்பதற்கு என்ன வழி உங்களுக்கு இருக்கிறது? ஒரு வழி ஏற்றுமதி செய்யலாம். (ஏற்றுமதி என்பது பிறநாடுகளின் மக்கள் உங்கள் உற்பத்திக்கு கொடுக்கும் கிராக்கி). ஆனால், ஏற்றுமதிக்கான வாய்ப்பை இந்தியாவில் பெருமளவுக்கு வெற்றிகரமாக நம்மால் செய்ய முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகம் செய்வோம். அதன்மூலம் அந்நிய செலாவணி அதிகம் வரும் என்றெல்லாம் கூறினார். ஒரு வருடத்தில்கூட அது நடக்கவில்லை.  30 ஆண்டுகளிலும் இந்தியாவின் சரக்கு(goods) ஏற்றுமதி மதிப்பு என்பது இறக்குமதி மதிப்பை விட குறைவாகத்தான் நிற்கிறது. பெரிய பள்ளம் விழுகிறது. சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (merchandise trade deficit) பிரம்மாண்டமாக உள்ளது. தாராளமயம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை நீக்கி இறக்குமதிக்கு கதவை திறந்து விட்டோம். இறக்குமதியின் மூலமாக பெரும் அளவில் அந்நிய செலாவணி நம்மை விட்டுப் போகிறது. அப்படியா னால் இந்த பள்ளத்தை நிரப்புவதற்கு என்ன வழி? இரண்டு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று, தகவல் தொழில்நுட்ப துறை ஏற்றுமதி நமக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் தருகிறது. சுற்றுலா போன்ற துறைகளும் அந்நிய செலாவணியை ஈட்டி தருகின்றன. இதைவிட முக்கியமானது, வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்திய உழைப்பாளி மக்கள், (நான் டாடா, பிர்லா போன்ற பெரிய முதலாளிகளை சொல்லவில்லை), தமிழ்நாடு, கேரளா உள்ளிட்டு பல மாநிலங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளிலும் இதர நாடுகளிலும்  குடும்பத்தை விட்டுச் சென்று, கஷ்டமான சூழலில் வேலைகளை செய்கி றார்களே, அவர்கள் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை ஊருக்கு, தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புகி றார்கள். அந்த பணத்தில் அவர்களது குடும்பம் நடக்கிறது. இதுபோன்ற இந்திய உழைப்பாளி மக்கள் செலுத்தும் அந்நிய செலாவணி நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த உழைப்பாளி மக்கள் கடுமையாக உழைத்து குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். நம் நாட்டையும் பாதுகாக்கிறார்கள். இது ஒரு பகுதி.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை

இந்த இரண்டும் சேர்ந்து சரக்கு வர்த்தகப் பள்ளத்தை ஓரளவு இட்டு நிரப்புகிறது. அதற்குப் பிறகும் பற்றாக்குறை உள்ளது. இதுதான் நடப்புக் கணக்கு பற்றாக்குறை. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறையை நீங்கள் எப்படி ஈடு செய்வீர்கள்? எப்படியாவது அந்நிய செலாவணியை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். அவர்கள் இங்கு  வந்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அவர்கள் இங்கு வந்தால் போதும். ஏனென்றால் நமக்கு பற்றாக்குறை இருக்கிறதே, எப்படி எதிர்கொள்வது? வெளிநாட்டினர் நமக்கு ரூபாய்க்கு பொருள் தர மாட்டார்களே, டாலருக்குத்தானே தருவார்கள். அப்படியா னால் நாம் டாலரை ஈட்டியாக வேண்டுமே.  அதனால்தான் வெளிநாட்டினரை வரச் சொல்கிறீர்கள். “ நீங்கள் இங்கு வந்து தொழில் நடத்த வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. பங்குச் சந்தையில் சூதாடினாலும் பரவாயில்லை. பணத்தை கொண்டு வாருங்கள். வருடம் முழுவதும் எங்களுக்கு பணம் வந்து கொண்டேயிருக்க வேண்டும். அது எங்கள் பணம் இல்லை, உங்கள் பணம் தான். நாங்கள் அதற்கு வட்டி கட்டுவோம், நீங்கள் லாபத்தை அடித்துக் கொண்டு போங்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நீங்கள் வந்தால் போதும்.” என்று இந்திய அரசு மன்றாடிக் கேட்கும் குரல் தினம் ஒலிக்கிறது. அந்நிய செலாவணியை தொடர்ந்து வெளிநாட்டினர் இங்கு கொண்டு வரவில்லையென்றால், இந்திய பங்குச் சந்தை படுத்துவிடும்.ரூபாய் மதிப்பு சரிந்துவிடும். இந்த நெருக்கடியில் நாம் சிக்கி உள்ளோம்.
உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் நல்வாழ்வு வளர்ச்சிப் பாதையை பின்பற்று வதை நாம் விட்டுவிட்டோம். அதை நாம் பின்பற்றவில்லை. உலகமயம் என்ற கனவில் பெரிய பெரிய முதலாளிகளுக்கு லாபம் இருக்கிறது. ஒருபகுதி நடுத்தர மக்களுக்கு கூட அதில் பயன் கிடைக்கிறது. ஆனால், பெரும்பகுதி இந்திய உழைப்பாளி மக்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு தொழில் முனைவோருக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயத் தொழிலாளிக்கு, என்ன அனுபவம்? உங்களது கடந்த 30 ஆண்டு கால உலகமயம், தாராளமயம் அவர்கள் வாழ்வை பெரும்பாலும்   மேம்படுத்தவில்லை.  சாதாரண மக்களுக்கு பயன்தரும் தொடர் வளர்ச்சியை இந்தியாவால் ஏன் சாதிக்க முடியவில்லை? அதற்கு, தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கை சட்டகத்தினை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.  இந்த பிரச்சனை ஏன் சீனாவில் இல்லை? சீனா விடுதலை பெற்றபோது, பெரும் மிராசுதாரர்களை எல்லாம்  பலவீனப்படுத்தி, அவர்களது நிலங்களை கிராம விவசாயி களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். இன்று அவர்களுக்கு பிழைப்பிற்கு பிரச்சனையில்லை.

நிலைத்த வளர்ச்சிக்கு நிலச்சீர்திருத்தம் அவசியம்  
சீனத்தில் நிலச்சீர்திருத்தம் என்பது பரவலாக மக்களின் வாங்கும் சக்தியை கிராமங்களில் ஏற்படுத்தி யது. இதை இந்தியா செய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. கேரளா, மேற்குவங்கத்தில் அதை செய்யும் போது முன்னேற்றம் இருந்தது. இந்தியாவில் இன்றும் நிலக்குவியல் இருக்கிறது. பெரும்பகுதி நிலம் ஒரு சிறிய பகுதியினரின் கையில் தான் இருக்கிறது. பெரும்பா லான கிராம மக்கள் நிலம் இல்லாமல் தான் இருக்கின்ற னர். கிராமங்களில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். அதில் பெரும்பகுதியினர் நிலமற்றவர்களா கத்தான் இருக்கின்றனர். இவர்களில் சிலர் கால், அரை, ஒரு ஏக்கர் என்ற அளவில் நிலம் கொண்ட சிறு-குறு விவசா யிகள். ஒன்று விவசாயம் நன்றாக இருக்க வேண்டும், அல்லது கூலி வேலை கிடைக்க வேண்டும். இந்த இரண்டுமே கிடைக்கவில்லையென்றால் அந்தக் குடும்பம் எப்படி வாழும்?  கடந்த 5, 6 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு சுருங்கிவிட்டது. குறிப்பாக, மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசு வந்தபிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிதியை குறைத்துவிட்டது. இதனால் இத்திட்டத்தில் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. வேறு வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஒரு 4, 5 வருடங்களில்மட்டும் தான் – 2004-2008 – வேலை வாய்ப்பு சற்று அதிகரித்தது. ஆனால் இப்போது, ஆட்டோ மொபைல் துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகள் படுத்துக்கிடக்கின்றன. நடுத்தரப் பகுதி மக்கள் பிரிட்ஜ், ஏசி,கார் வாங்குவர். ஆனால் அவர்கள் எவ்வளவு பிரிட்ஜ், எவ்வளவு ஏசி, கார் வாங்குவார்கள். இது ஒரு குறுகிய சந்தை. இது ஒரு சுற்று சுற்றும். அடுத்த சுற்றில் கிராக்கி இருக்காது.

பெரும்பகுதி மக்களை புறக்கணித்துவிட்டு, கிராக்கியை தொடர்ந்து தக்கவைக்க நினைப்பது மூடத்தனம்.  இந்தியாவின் மந்தநிலையிலிருந்து மீள,  தேர்தல் நிதி உட்பட அனைத்தும் அவர்கள் தயவில் இருப்பதால் உடனடி யாக  பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை அரசு கொடுக்கும்.  தற்போது ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை சிதைத் ததில் கூட, அங்கு போய் நிலம் வாங்கலாம், அம்பானி அங்கு தொழில் நடத்துவார் என்றெல்லாம் வணிகக் காரணத்தை முன்வைக்கிறார்கள். அதையே கூட இந்த நாடு சகித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு வருத்தமான விஷயம்.

வளர்ச்சி விகிதம் அல்ல, அதன் தன்மை தான் முக்கியப் பிரச்சனை
இந்தியாவில் மந்த நிலை என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி ஜீரோ (பூஜ்ஜியம்)  ஆக வில்லை. வளர்ச்சி 6.8 சதவீதம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். 7 சதவீதம் என்றில்லாமல்,  6.5 சதவீத மாக குறைந்தது. இன்னும் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால்  வளர்ச்சி இருக்கிறது. மந்த நிலை என்று சொல்லும் போது, வளர்ச்சி வேகம் குறைகிறது என்ற பொருளில்  குறிப்பிடுகிறார்கள் . ஆனால் அரசு சொல்லக்கூடிய இந்த வளர்ச்சி விகிதக் கணக்கு குறித்து நிறைய சர்ச்சைகள் இருக்கிறது. சிலர் இது தவறான கணக்கு என்கின்றனர். ஏற்கெனவே இந்திய அரசினுடைய நிதித்துறை ஆலோ சகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் என்ற அறிஞர் எழுதியுள்ள கட்டுரையில், “இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2011-2012 லிருந்து 2017,-2018 வரை, ஒரு ஆண்டிற்கு 4.5 சதவீதம் போலத் தான் இருந்துள்ளது. அரசு ஆவ ணங்களில் குறிப்பிடப்படும் விகிதத்தை விட 2.5 சதவிகிதப் புள்ளிகள் குறைவாகவே உள்ளது.” என்கிறார்.  ஆனால் இதுவும் வளர்ச்சிதானே! உற்பத்தி அதிக ரிக்கிறது. மக்கள் தொகையை விட வேகமாக அதிகரிக்கி றது. தலா உற்பத்தி அதிகரிக்கிறது. தலா உற்பத்தி என்பது மொத்த உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது. அது உங்களுக்கும் எனக்கும் கிடைக்க வேண்டும் என்கிற உத்தரவாதம் இல்லை. தலா உற்பத்தி அதிகரித்தாலும் அதன் பெரும்பகுதி ஒரு சிறு பகுதி மக்களுக்கே போய்ச் சேரலாம். பெரும்பகுதி மக்களுக்கு முன்னேற்றம் மிகக் குறைவாக இருக்கிறது. முன்னேற்றம் இல்லைவே இல்லை என்று சொல்லமாட்டேன். இந்திய நாட்டில் விடுதலைக்குப் பிறகு எதுவுமே நடக்கவில்லை என்று நான் சொல்லமாட்டேன். நடந்திருக்கிறது. முன்னேறியி ருக்கிறோம். இப்போதும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கி றோம். ஆனால் அது பெரும்பகுதி மக்களுக்கு பயன் அளிக்காத முன்னேற்றம். ஒரு சிறிய பகுதி மக்களுக்கு பெரும் பயனை அளிக்கிற முன்னேற்றம்.

பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும்
இந்தப் பின்னணியில்தான் மோடி அரசாங்கம் செய்த இரண்டு பெரிய நடவடிக்கைகள் மந்த நிலையை தீவிரப்படுத்த இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக, யாரையும் கலந்து ஆலோசிக்காமல் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பண மதிப்பு நீக்கநடவடிக்கை. இந்த அறிவிப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் வங்கிகளில் தமது பணத்தை எடுக்க வரிசையில் நின்று உயிரை விட்டனர். இந்த வரிசைகளில்  கருப்புப் பண பேர்வழிகள் யாரும் நிற்கவில்லை. இதற்காக மோடி அரசு  வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இந்த பணமதிப்பு நீக்கம், இந்திய பொருளாதாரத்தில் 80-85 சதவீத சிறு-குறு தொழில்களை, வணிகர்களை முற்றிலும் நாசப்படுத்தி அழித்து விட்டது. அதிலிருந்து இன்றுவரை மீளவில்லை.  இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி. இது மிக மோசமாக அமல்படுத்தப்பட்ட, குழப்பங்கள் நிறைந்த ஏற்பாடாக இருந்தது. ஜிஎஸ்டி என்பது சரக்குகள் மற்றும் சேவை கள் மீது போடப்படுகிற மறைமுக வரி. இவை அனைத்தும் விலைகளில் நமக்கு வந்துவிடும். நாம் கொடுத்துவிடுவோம். ஆனால், முதலாளிகள், பணக்காரர்கள் இந்த வரியில் எவ்வளவு தொகையை அரசாங்கத்திற்கு கொடுக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது.
இந்த ஜிஎஸ்டி என்ற ஏற்பாடு, சிறு-குறு தொழில்களை மீண்டும் ஒருமுறை சீர்குலையச் செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி மந்தமாவதற்கும், பாதிக்கப்படுவதற்கும் தாராளமயக் கொள்கைகள் மட்டு மின்றி, இவ்விரு நடவடிக்கைகளும் முக்கிய காரணங்கள். ஜிஎஸ்டி மூலமாக அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வருமானமும் கிடைக்கவில்லை. ஏனென்றால், வளர்ச்சி குறைந்துவிட்டது. ஜிஎஸ்டி மூலமாக அரசுக்கு மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்றனர். ஆனால், கிடைக்க வில்லை. இதன் விளைவாக, அரசு கையில் காசு இல்லை. அதனால் செலவு செய்ய முடியாது என்கிறது. இச்சூழலில் தனியார் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கி றீர்கள். அவர்கள் , லாபம் கிடைத்தால்தான் செய்ய முடியும் என்கின்றனர். மொத்த முதலீடுகள் குறைந்து வருகின்றன. நுகர்வோர்களின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. இது இரண்டும் இணையும்போது நாட்டில் மந்த நிலை ஏற்படுகிறது.
தீர்வு எங்கே?
பெரும்பகுதி மக்களைச் சார்ந்த நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிராமப் புறங்களில் முதலீடுகளை மேம்படுத்தி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், அனைவருக்கும் தேவையான கட்டமைப்பு என்ற உறுதிப்படுத்துகிற, அனை வருக்கும் வேலையையும் வருமானத்தையும்  உறுதி செய்கின்ற  வளர்ச்சிப் பாதைதான் ஒரு நீண்ட கால தீர்வாக இருக்க முடியும்.
 தொகுப்பு: ஆர்.நித்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...