bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 8 அக்டோபர், 2019

முதலாளிகள் நடத்தும் சூதாட்டம் !

  இந்திய தேர்தல்?
தவறாகிப்போன தேர்தல் முறை.தற்போது நடப்பவை உண்மையான மக்கள் வாக்களிப்பா?என்ற ஐயம் பலருக்கு வருகிறது.
அதற்கு மூலக்காரணமே தற்போது இந்திய தேர்தல் ஆணையமாக அமைந்து விட்டதுதான் வேதனை.
பாஜகவுக்கு ஆதரவாக அவர்கள் மக்களைக் கவரும் திட்டங்களை அறிவுக்கு வரை காத்திருந்து குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தது முதல் அசிங்கம்,தமிழகத்தில் திமுக,அதிமுக இரண்டும் ஆட்சியைப்பிடிப்பதில் சமமாக முன்னேறி வரும்போது வாக்கு என்னணிக்கை ஆரம்பித்த ஒன்னரை மணி நேரத்திலியேலே பிரதமராக இருந்த மோடி,முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மீண்டும் முதல்வராக வெற்றி பெற்றதற்கு?வாழ்த்து தெரிவித்ததால் ஆரம்பித்தது அடுத்த அலங்கோலம்.
அரசு : கார்ப்பரேட்டுகளின் சேவகன்
அதுவரை திமுக முன்னேறிக்கொண்டிருந்த இடங்களில் எல்லாம் 40 வாக்குகள் முதல் 3600 வாக்குகள் வரையில் முன்னணி பெற்று அதிமுக  வென்றதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகள் கிட்டத்தட்ட 60.
அங்குள்ள மக்களுக்கே அதிர்சி என்றால் வேட்பாளர்கள் நிலை.?
அதன் ஒரு சோறு பதம்தான் ராதாபுரம்.வென்றதாக அறிவிக்கப்பட்ட இன்பத்துரை  இன்று நீதிமன்ற மறு வாக்கு எண்ணிக்கையால் துன்பத்துரை யாகி உள்ளார்.
சரி .இனி கார்பரேட்களால் தேர்தல் முறை எப்படி வழைக்கபப்டுகிறது.வெற்றியைதீர்மானிப்பது கார்ப்பரேட்களாக இருந்தாலும்,தங்களுக்குப் பிடித்த ஆட்சியை உருவாக்குவதும் அவர்கள்தான் என்பதைப்பார்க்கலாம்.
இது 2014 "புதியஜனநாயகம்" ஏப்ரல்  இதழில் "செல்லம்" எழுதிய கட்டுரையின் மறு பகிர்வு.

“ஜனநாயகத்தின் அடிப்படையாக இருப்பது தேர்தல்கள்தான்; தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்தான் நாட்டை ஆளுகிறார்கள்; நாடாளுமன்றம் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்ந்த நிறுவனம்” என்றவாறு தேர்தல்கள், நாடாளுமன்றம் பற்றிய நம்பிக்கையை முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் பொதுமக்களிடம் உருவாக்கி வைத்துள்ளனர். ஓட்டுக்கட்சிகள் கிரிமினல்மயமாகியிருப்பது; ஓட்டுச் சீட்டு அரசியலே பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதற்கான எளிதான வழியாக, பிழைப்புவாதமாக மாறியிருப்பது; எங்கும் இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகள் பெருத்துப் போயிருப்பது என இந்த அமைப்புமுறை அழுகிப் போயிருப்பதைக் காணும் மக்கள், இந்த தேர்தல்கள், ஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்துவரும் நிலையிலும், தேர்தல்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட இந்த அமைப்பு முறையை விட்டால் வேறு மாற்று இல்லை என்றே இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் சீரழிந்து போயிருப்பதற்கு ஓட்டுக்கட்சிகள், அதனின் தலைவர்கள், தனிப்பட்ட அதிகாரிகள் ஆகியோரின் மீது பழிபோட்டுவிட்டு, இந்த அமைப்பு முறைக்கும் அக்கேடுகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என இவர்கள் வாதிடுகிறார்கள். ஓட்டுக்குப் பணம் வாங்காமல், கட்சிகளைப் பாராமல், சாதி – மதச்சார்பு இல்லாமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் போல மக்களுக்குச் சேவை செயக்கூடிய அமைப்பு வேறு எதுவும் கிடையாது என இவர்கள் உபதேசிக்கிறார்கள்.
ஊழல், அதிகாரமுறைகேடுகள் உள்ளிட்ட கேடுகள் அனைத்தையும் தானாகவே திருத்திக் கொள்ளும் வாய்ப்புகள் (ஜன் லோக்பால் போன்றவை) இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் கொட்டிக் கிடப்பதாகக் கூறி இவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்.
“நாடாளுமன்றம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடிமறைக்கும் திரைச்சீலை” என்ற லெனினின் வரையறுப்புக்கு முற்றிலும் எதிராக, “மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவதில் நாடாளுமன்றம் உயர்ந்த அமைப்பு வடிவமாகும். எனவே, இந்திய நாடாளுமன்றம் முடமாகிப் போனால், இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்” என எச்சரிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா.
அரசனை விஞ்சிய ராஜ விசுவாசி!

உங்கள் ஓட்டு, அவர்கள் சீட்டு

“மாற்றம் வேண்டும்” என்ற அடிப்படையில் வாக்களிப்பதாகக் கூறும் படித்த நடுத்தர வர்க்கத்தினர்கூட, தேர்தல்கள் மூலம் ஒரு கட்சிக்குப் பதிலாக இன்னொரு கட்சியைப் பதவியில் அமர்த்தினால் மாற்றம் வந்துவிடும் எனப் பாமரத்தனமாகத்தான் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைப் புரிந்து வைத்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்தான் நாட்டை ஆளுவதாகக் கூறப்படுவதே ஒரு வடிகட்டிய பொய். நாடாளுமன்றத்திற்குச் சட்டமியற்றும் அதிகாரம்தான் உண்டே தவிர, அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அப்பால் தனித்து இயங்கிவரும் அதிகார வர்க்கத்திற்குத்தான் உண்டு. மேலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களையும் இந்த அதிகார வர்க்கம்தான் வடிவமைத்துத் தருகிறது. இந்த அதிகார வர்க்கம் நாடாளுமன்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுயேச்சையாக இயங்கக் கூடியது. இந்த அதிகார வர்க்கத்தை நியமிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்குக் கிடையாது.
இதுவொருபுறமிருக்க, தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு இந்திய நாடாளுமன்றத் தின் நடவடிக்கைகளை ஒருமுறை அலசிப் பாருங்கள். இந்திய மக்களின் மீது மானிய வெட்டு, விலைவாசி உயர்வு, நில அபகரிப்பு எனப் பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கிய அதேசமயம், ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவற்றின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பல்வேறு சலுகைகளை அளித்து, அதன் மூலம் அக்கும்பல் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் அதிரடி இலாபம் அடையவும் ஏற்பாடு செய்து கொடுக்கும் கருவியாக நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் உண்மை தெரிய வரும்.
இந்திய நாடாளுமன்றம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் நலன்களைப் பாது காக்கும் கருவியாக இருப்பதை ஓட்டுக் கட்சிகளின் சொந்த விருப்பு வெறுப்பாக, ஓட்டுக்கட்சிகள் மக்கள் மீது அக்கறையற்று இருப்பதன் வெளிப்பாடாகவோ சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. 1990- களில் புகுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு ஏற்ப அரசின் கட்டுமானங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடு இது.


1947-க்குப் பிந்தைய இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைத் தனியார்மயத்திற்கு முன், தனியார்மயத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். 
தனியார்மயத்தின் முன்பு இந்திய நாடாளுமன்றம் டாடா, பிர்லா, டி.வி.எஸ்., உள்ளிட்ட சில குறிப்பிட்ட தரகு முதலாளித்துவ குடும்பங்களுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவந்த போதும் நாட்டின் சுதேசித் தொழில்களையும், இயற்கை வளங்களையும் ஏகாதிபத்தியக் கொள்ளையர்களிடமிருந்து காக்கும் அரைகுறையான சுதேசி பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை நிலவியது. 
இதனால் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பெயரளவிலான அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டிருந்தது. 
மேலும், மக்கள் நல அரசு எனத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவே ஒப்புக்குச் சப்பாணியாகச் சில நடவடிக்கைகளை – கல்வி, மருத்துவம், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசியமான சேவைகளை அரசின் கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருப்பது – எடுத்து வந்தது.
1991-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நரசிம்ம ராவ் அரசு, உலக வங்கியின் கட்டளைகளை ஏற்று இந்தியப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கத் தொடங்கிய பின், இந்திய நாடாளுமன்றத்தின் பெயரளவிலான அதிகாரமும் சுயேச்சைத் தன்மையும் முற்றிலும் பறிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, மக்கள் நல அரசு என்ற முகமூடியையும் கழட்டிவிட்டது.
அதனைத் தொடர்ந்து “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த நாள் தொடங்கி, இந்திய நாடாளுமன்றமும், அரசின் பிற உறுப்புகளும் அந்நிய நிதி மூலதனத்தின் கட்டளைகளை நிறைேவற்றும் ரப்பர் ஸ்டாம்பாகவே மாறிவிட்டன.
நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த காங்கிரசு அரசு “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுகூட, நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே, அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே நடந்து முடிந்தது.
 இந்தச் சம்பவம் ஒன்றே இந்திய நாடாளுமன்றம் இனி சோளக்காட்டு பொம்மை போன்றது என்பதை எடுத்துக் காட்டியது.

“காட்” ஒப்பந்தம் கொல்லைப்புற வழியில் நாட்டின் மீது திணிக்கப்பட்டபோதும், நரசிம்ம ராவ் அரசிற்குப் பின் பதவிக்கு வந்த, போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவைப் பெற்றிருந்த ஐக்கிய முன்னணி அரசும், அதற்குப் பின் பதவிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் முந்தையதைவிட விசுவாசமாக நடந்து கொள்வதிலேயே குறியாக இருந்தன.
குறிப்பாக, வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு அப்பாலும் சென்று, 640 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், இந்திய-அமெரிக்க இராணுவக் கூட்டு ஒப்பந்தமும்கூட நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல்தான் மன்மோகன் சிங் அரசால் கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் சிவில் அணுஉலைகளைக் கண் காணிக்கும் அதிகாரத்தை ஏகாதிபத்திய நாடுகளுக்கு அளித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனங்களை தாஜா செய்வதற்காகவே, அணுசக்தி கடப்பாடு மசோதா நீர்த்துப் போன வடிவத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வோடோஃபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏப்பு செய்த விவகாரம் அம்பலமான பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்புகளைத் தடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, பொது வரி தவிர்ப்பு விதிமுறைகளை நாடாளு மன்றத்தில் கொண்டு வந்தது, காங்கிரசு கூட்டணி அரசு. பன்னாட்டு நிறுவனங்கள் இப்புதிய விதி முறைகளைத் தீவிரமாக எதிர்த்தவுடனேயே, அதனை அமலுக்குக் கொண்டுவருவது கிடப்பில் போடப்பட்டது.
“மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர்” என மேற்கத்திய ஊடகங்கள் அபாயச் சங்கை ஊதியவுடனேயே சில்லறை வர்த்தகம் தொடங்கி ஆயுதத் தளவாட தயாரிப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாகத் தன்னிச்சையாக அறிவித்தார், மன்மோகன் சிங்.
உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள், குறிப்பாக அறிவுசார் சொத்துரிமை விதிகள் (TRIPS) மற்றும் நிதி முதலீட்டு விதிகளுக்கு (TRIMS) மாறாக, இந்திய நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிவிட முடியாது. இந்தியா எந்தெந்த பொருட்களை எவ்வளவு இறக்குமதி செய்ய வேண்டும்; எந்தெந்த பொருட்களை எந்த அளவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் உலக வர்த்தகக் கழகம்தான் தற்பொழுது தீர்மானிக்கிறது.
 பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், உலக வங்கியின் நிபந்தனைப்படி இயற்றப்பட்ட ஒன்றாகும். 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ரசியாவின் சீஸ்டெமா நிறுவனமும், நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனமும் அறிவித்துள்ளன.
உண்மையான அரசாங்கம் இவர்களைப் போன்ற நிபுணர்களின் கைகளில்: வங்கித்துறை சீர்திருத்தக் கமிட்டியின் தலைவர் நரசிம்மன்; வறுமைக்கோடை நிர்ணயிக்கும் கமிட்டியின் தலைவர் ரங்கராஜன்; எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவது குறித்த கமிட்டியின் தலைவர் நந்தன் நிலகேனி; வரி தவிர்ப்பு விதிமுறைகள் கமிட்டியின் தலைவர் பார்த்தசாரதி ஷோமே.

இந்திய அரசிற்கு மேலான சூப்பர் அரசாங்கமாக ஏகாதிபத்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதையே இவை எடுத்துக் காட்டுகின்றன.


1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின், அதுகாறும் அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்துவந்த துறைகள் சிலவற்றுள் இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய தொழில் கழகங்களும் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன. இப்படி நுழைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிரடி இலாபம் அடைவதற்கு வசதியாக அத்துறையில் இருந்துவரும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் திட்டமிட்டே முடக்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நட்டத்தில் தள்ளப்பட்டதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தனியார்மயத்தின் இரண்டாவது கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களையும் இலாபத்தையும் கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் படலம் ஆரம்பமானது.
 பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி, அதற்குத் தரகு முதலாளிகளின் நம்பகமான விசுவாசியான அருண் ஷோரி அமைச்சராக்கப்பட்டார். இலாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை என்ன விலைக்கு விற்கலாம் என்பதைக்கூட நாடாளுமன்றத்திற்குப் பதிலாக ஏகாதிபத்தியவாதிகள்தான் முடிவு செய்தனர்.
 2100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மாடர்ன் புட்ஸ் 104 கோடி ரூபாய்க்கும், 5,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பால்கோ 551 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதிலிருந்தே இரண்டாவது கட்டத்தில் நடந்த பகற்கொள்ளையின் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு அடுத்து, கண்ணுக்குத் தெரியும் ஆற்றுத் தண்ணீர், இரும்பு, நிலக்கரி, இயற்கை எரிவாயு, மீத்தேன் தொடங்கி கண்ணுக்குத் தெரியாக அலைக்கற்றைகள் ஈறாக இயற்கை வளங்கள் அனைத்தையும் எந்த வரைமுறையும் இன்றி இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் தேசங்கடந்த தொழிற்கழங்களுக்கும் ஒதுக்கீடு செயும் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் பாதைகள் கட்டும் காண்டிராக்டுகள் மட்டுமின்றி, அவற்றைப் பராமரிப்பது தொடங்கி குப்பை வாருவது வரையுள்ள அனைத்துப் பொதுப் பணிகளையும் தனியாரிடம் அயல்பணியாக ஒப்படைப்பது; அரசும்-தனியாரும் கூட்டுச் சேர்ந்து (Public Private partnership projects) அடிக்கட்டுமான திட்டங்களை உருவாக்குவது; சிறப்புப் பொருளாதார மண்டல வளையங்களை உருவாக்குவது; உள்நாட்டு தொழில்களில் குறிப்பாக பங்குச் சந்தை உள்ளிட்ட நிதிச் சந்தையில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவது; அவற்றுக்கு வரிச் சலுகைகளும் வரித் தள்ளுபடிகளும் அளிப்பது என அடுத்தடுத்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன.

இந்தத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை அரசே விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்து கொடுத்தது; கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்கு வசதியாக பழங்குடியின மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர்.
கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்று, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக பொதுத்துறை வங்கிகளின் கடன் விதிகள் தளர்த்தப்பட்டன; வட்டி வீதம் குறைக்கப்பட்டது.
 முதலீடுகளைக் கவர்வது என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரித் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன.

இப்படியான சலுகைகளை அளிப்பதன் மூலம்தான் நாட்டில் தொழில் பெருகும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், ஏற்றுமதி அதிகரிக்கும், அந்நியச் செலாவணி கிடைக்கும் என அரசு வாக்குறுதிகளை அள்ளிவிட்டது.

 இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பல்லிளித்துப் போவிட்டதை இப்பொழுது அரசே ஒப்புக் கொண்டு விட்டது.
நாடு போண்டியாகி நிற்கும் அதேசமயம் அரசின் செல்லப்பிள் ளைகளான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அசிம் பிரேம்ஜி, அடானி, மித்தல் உள்ளிட்ட ஒரு சில இந்தியத் தரகு முதலாளிகளோ உலகின் சூப்பர் பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றனர்.
விலங்குகளின் இரத்தத்தைக் குடிக்கும் ஒட்டுண்ணி போல, மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் முட்டைப் பூச்சி போல, இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் நாட்டின் பொதுச் சொத்துக்களை, இயற்கை வளங்களை, பொதுமக்களின் சேமிப்புகளை, உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணிகளாக அரசின் ஆதரவு அரவணைப்போடு உருவாகியுள்ளனர்.

நாடாளுமன்றம் இந்த ஒட்டுண்ணித்தனம் நிறைந்த கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் மாமா வேலையைத்தான் பார்த்து வருகிறது.
 இதைச் செய்து கொடுக்கும் நம்பகமான விசுவாசிகள்தான் அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த ராஜாவைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக நியமிப்பதற்கு திமுக மட்டும தானா லாபி செய்தது ?
பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி தூக்கி கடாசப்பட்டு, அவரிடத்தில் வீரப்ப மொய்லி உட்கார வைக்கப்பட்டதன் பின்னே முகேஷ் அம்பானியின் கரங்கள் இருந்தன.

வீரப்ப மொய்லி இயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்து, அம்பானியின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.



நிதி மந்திரி ப.சிதம்பரம், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் எனத் திரும்பும் பக்கமெல்லாம் ஏகாதிபத்திய விசுவாசிகளால் இந்திய அரசாங்கம் நிரம்பி வழிவதை யாரும் கண்கூடாகப் பார்க்கலாம். 
மாண்டேக்சிங் அலுவாலியா உலக வங்கியிலும், ரகுராம் ராஜன் சர்வதேச நாணய நிதியத்திலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிவிட்டு இறக்குமதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இவ்வளவு ஏன், உலக வங்கியில் குப்பை கொட்டியவர், ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் நம்பகமான ஏஜெண்ட் என்பதால்தான் மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதிமந்திரியாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதம மந்திரியாகவும் முடி சூட்டப்பட்டார்.
இதுவொருபுறமிருக்க இந்தியத் தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனங்களைச் சேர்ந்த விசுவாசமான அதிகாரிகளும் கொல்லைப்புற வழியாக மேலவை உறுப்பினராக நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவது இன்று ஒரு போக்காக வளர்ந்து வருகிறது.
மேலும், அரசு அமைக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் தரகு முதலாளிகளுக்கு இடம் அளிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக அரசின் பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்களைத் தரகு முதலாளிகளும், அதிகார வர்க்க கமிட்டிகளும், ஏகபோக நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களும்தான் வகுத்துக் கொடுக்கிறார்கள்.
இதன் அடிப்படையில்தான் இன்று சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவன அதிகார வர்க்கத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
 இதுபோல தொலைபேசிக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அதிகார வர்க்க கமிட்டிகள் தீர்மானிக்கின்றன.
இவற்றுக்கு அப்பால், வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்யவும், சர்க்கரை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தாராளமயத்தைப் புகுத்தவும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் கமிட்டி;
 சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியங்கள் தொடர்பாக அரசுக்கு அறிவுரை வழங்க இன்ஃபோசிஸ் இயக்குநர் நந்தன் நிலகேனி கமிட்டி;
தரகு முதலாளித்துவ நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க தரகு முதலாளி குமாரமங்கலம் பிர்லா கமிட்டி;
வங்கித் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர நரசிம்மன் கமிட்டி
 என்றவாறு அனைத்து நிலைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கு ஏற்றவாறு அதிகார வர்க்க கமிட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக மைய அரசு அமைத்து வருகிறது.
 இந்த கமிட்டிகள் தான் உண்மையான அரசாங்கமாகவும், அவை தரும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தலையாட்டி பொம்மையாக நாடாளுமன்றமும் இன்று செயல்பட்டு வருகின்றன.

அரசியல்வாதிகளிடம் காணப்படும் சுயநலம், ஊழல் ஆகிய ஒழுங்கீனங்களைக் காட்டி, தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் நிறைந்த அதிகார வர்க்கத்தின், துறை சார்ந்த நிபுணர்களின் கைகளில் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அளித்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என இந்த மாற்றத்தைப் புதிய தாராளவாதக் கொள்கை நியாயப்படுத் துகிறது.
அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் சமூக பொறுப்புகள், கடப்பாடுகள் அனைத்தும் களையப்பட்டு, அவை மேலும் மேலும் ஆழமாக இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செயும்படி மாற்றப்பட்டிருப்பதைத்தான் இவை எடுத்துக் காட்டுகின்றன.
அரசியல் கிரிமினல்மயமாகியிருப்பதைவிட கொடிய அபாயம் நிறைந்தது இந்த மாற்றம். எனினும், முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் ஊழல் இல்லாத நல்லாட்சி, சிறந்த அரசாளுமை ஆகிய மயக்கு வார்த்தைகளைக் கொண்டு இந்த பேரபாயத்தை நியாயப்படுத்தி வருகின்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் காங்கிரசு கூட்டணி ஆட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட் சி, ஐக்கிய முன்னணி ஆட்சி எனப் பல வண்ண கூட்டணிகள் மாறிமாறி ஆண்டபோதும், தனியார் மய-தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கூட்டணிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை.
 சொல்லப்போனால், இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தங்களுக்கிடையே யார் முந்தி என்ற போட்டிதான் அக்கூட்டணி ஆட்சிகளுக்கிடையே நிலவி வந்தது.
இப்படி தனியார்மயக் கொள்கைகளுக்கு எந்தவிதப் பாதிப்புமின்றி ஆட்சி நடத்துவதைத்தான் ஆளுங்கும்பல் நிலையான ஆட்சி என வரையறுக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பறக்க நடந்து வருகிறது. தேர்தலுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது பற்றி இந்திய மக்களைவிட, ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகள்தான் அதிகம் கவலை கொள்கின்றனர்.
தங்கள் விருப்பத்துக்கு மாறான கூட்டணி ஆட்சி அமைந்தால், அதனைக் கவிழ்த்து விடவும் தயாராக இருக்கிறது அக்கும்பல். “சிறிய மற்றும் பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொண்டு, ஒரு பொதுவான பொருளாதாரத் திட்டமின்றி ஆட்சியமைக்க முற்பட்டால், அது நிதி முதலீட்டாளர்களை வெளியேறத் தூண்டுவதாக அமைந்துவிடும்.
அப்படிபட்ட நிலை இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செயும்; வெளிநாடுகளிலிருந்து பெறும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும்; இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுவதைத் தாமதப்படுத்தும்” என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறது, மூடி (Moody) என்ற ஏகாதிபத்திய ரேட்டிங் நிறுவனம்.

எனவே, தேர்தல்களுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அது ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகளின், இந்தியத் தரகு முதலாளித்துவக் கும்பலின் ஆட்சியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இருக்க முடியாது.
 அதனால் நடைபெறவுள்ள தேர்தல் என்பது இந்தத் தீவட்டிக் கொள்ளையர்களின் ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வ நியாயத்தைக் கற்பிக்கும் மோசடி தவிர வேறெதுவும் கிடையாது என்பதை உழைக்கும் மக்கள் உணர வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...