திங்கள், 4 நவம்பர், 2019

1000 கோடி மெகா ஊழல்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளிலுள்ள கோட்டக்கணக்கர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் தமிழக அக்கவுண்ட் ஜெனரல் அருண்கோயலை கடந்த வருடம் கைது செய்தது சி.பி.ஐ.!

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளிலுள்ள கோட்டக்கணக்கர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் தமிழக அக்கவுண்ட் ஜெனரல் அருண்கோயலை கடந்த வருடம் கைது செய்தது சி.பி.ஐ.!

இந்த வழக்கில் குற்றவாளிகள் பலரையும் சி.பி.ஐ. தப்பிக்கவிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்காயர் தலைவர் (அக்கவுண்ட் ஜெனரல்) அலுவலகம் இயங்குகிறது.

தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டையில் இயங்கும் அந்த அலுவலகத்தில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்தவர் அருண் கோயல்.

தமிழக அரசின் பட்ஜெட்டை தணிக்கை செய்து மக்களின் வரிப்பணம் முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா?
 முறையாக பயன்படுத்தப் பட்டதா?

முறைகேடுகள், ஊழல்கள், விதி மீறல்கள், நட்டம், அனாவசிய செலவினங்கள் நடந்துள்ளதா?
என ஆய்வு செய்வது இத்துறையின் முக்கியப்பணி.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி ரிசல்ட்டை அறிவிப்பதும், கோட்ட கணக்காளர் பணியிடங்களை நிரப்பும் அதிகாரமும் அக்கவுண்ட் ஜெனரலுக்கு உண்டு.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்வு எழுதுபவர்களை வெற்றி பெற வைக்க அருண்கோயல் லஞ்சம் பெற்றதில் கடந்த வருடம் 2018 மார்ச்சில் அவரை பொறி வைத்து பிடித்தது சி.பி.ஐ.!

அவருடன் அவருக்கு புரோக்கராக செயல்பட்ட கஜேந்திரன், சிவலிங்கம், ராஜா ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிறையில் தள்ளியது சி.பி.ஐ.!

ஆட்சியாளர்களின் லஞ்ச- ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டிய அக்கவுண்ட் ஜெனரலே லஞ்சம் பெற்ற விவகாரம் தேசத்தையே உலுக்கியது .

சி.பி.ஐ. விசாரித்த இந்த வழக்கில்தான் சில உத்தரவுகள் சமீபத்தில் பிறப்பிக்கப்பட, குற்றவாளிகள் பலரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கோட்டங்கள் இருக்கின்றன. திட்டங்களை செயலாக்கம் செய்யும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு கோட்ட கணக்காளர் உண்டு.

 மக்கள் பணத்துக்கு பாதுகாவலன் என்கிற பெயர் இவர்களுக்கு இருப்பதால் செலவிடப்படும் ஒவ்வொரு காசும் விரயமில்லாமல் நேர்மையாக செலவிடப்படுகிறதா?
 என கண்காணிக்கிற கடமையும் இவர்களுக்கு இருக்கிறது.

பொதுப்பணித்துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலக அதிகாரிகளை அயல்பணியாக ஏ.ஜி. அலுவலகமே நியமிக்கும். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களே நியமிக்கப்படுவார்கள்.
 அந்த தேர்வை நடத்துவதும் அதன் ரிசல்ட்டை அறிவிப்பதும் ஏ.ஜி. அலுவலகம்தான்.
 நெடுஞ்சாலைத்துறையில் உதவியாளர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் இருப்பவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்துகொள்ள முடியும்.
 தேர்ச்சி பெறுபவர்கள் கோட்ட கணக்காளராக நியமிக்கப்படுவர்.

இந்த நடைமுறைகளில்தான் புகுந்து விளையாடினார் அருண்கோயல். கோட்ட கணக்காளர் பதவி உயர்வுக்கான தேர்வில் மொத்தம் 5 தாள்கள் எழுத வேண்டும். ஒரு தாளில் தேர்ச்சி பெற 1 லட்சம் என 5 தாளுக் கும் 5 லட்சம் என கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக அருண் கோயலை கைது செய்தது சி.பி.ஐ.!

இந்த வழக்கை விசாரித்து முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பதவிக்காக ஏ.ஜி. அலுவலகத்தில் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்துகொண்ட நபர்களின் விடைத்தாள்கள் ஹைதராபாத்திலுள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது.

 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தடய அறிவியல் ஆய்வகத்தின் இயக்குநர் அறிக்கை தந்திருக்கிறார்.
அதனால், தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்றும், அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன் திரும்பப்பெற வேண்டும் எனவும் ஏ.ஜி. அலுவலகத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.சுக்கு கடந்த செப்டம்பர் 16-ந்தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள அக்கவுண்ட் ஜெனரல் ஜெய்சங்கர், ஆறுமுகம், பால்ராஜ், சந்திரன், ஜெய்துன்பி, ஜெய பாலன், பரசுராமன், ராஜா, தங்கதுரை, மலர்விழி, முருகானந்தம் ஆகிய 10 நபர்களின் தேர்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

 இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் பதவி உயர்வை ரத்து செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர் கோதண்டராமனுக்கு பிரபாகர் ஐ.ஏ.எஸ் கட்டளையிட, ஆறுமுகம், பால்ராஜ் இருவரும் கோட்ட கணக்காளர் பதவியில் தற்போது இல்லாததால் அவர்கள் இருவரை தவிர மற்ற 8 பேரின் பதவி உயர்வை ரத்து செய்துள்ளார் கோதண்டராமன்.

இதனால் இவர்கள் அனைவரும் கண்காணிப்பாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் நிறைய தவறுகள் நடந்துள்ளன. 2016 மற்றும் 2017 முறையே 32 மற்றும் 24 என 56 கோட்ட கணக்காளர்கள் தேர்ச்சி பெற்றதாக நெடுஞ்சாலைத் துறைக்கு பட்டியலை அனுப்பி வைத்தார் அருண்கோயல்.
அந்த 56 பேருமே அருண் கோயலுக்கு லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள்.
ஆனால், 10 பேர் மீது மட்டும் ஆக்சன் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 46 பேரை காப்பாற்றியுள்ளது நெடுஞ்சாலைத் துறை.

லஞ்சம் கொடுத்தவர்களின் பதவி உயர்வை ரத்து செய்வது மட்டுமே போதுமானதல்ல.

நெடுஞ்சாலைத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 10 ஆயிரம் கோடி ரூபாயில், ஒவ்வொரு கோட்டத்திலும் வருசத்துக்கு 100 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அந்த 100 கோடிக்கும் கோட்ட கணக்காளர்கள்தான் பாதுகாவலர்.

ஆனால், லஞ்சத்தால் பதவி உயர்வு பெற்ற இவர்கள் எப்படி 100 கோடி ரூபாயும் முறையாக செலவிடுவதில் அக்கறை காட்டியிருக்க முடியும்?

காண்ட்ராக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை சேர்ந்து கொள்ளையடிக்க கோட்ட கணக்காளர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அதற்காக, சேங்ஷன் செய்யப்படும் ஒவ்வொரு பில்லிலும் இவர்களுக்கு 5 சதவீத கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால், மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்க அனுமதித்த கோட்ட கணக்காளர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதுடன் அவர்கள் ஒப்புதல் அளித்த திட்டங்களுக்கான நிதியில் நடந்துள்ள முறைகேடுகளை தடய அறிவியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தினால் 1000 கோடிக்கான ஊழல்கள் அம்பலமாகும்''’ என சுட்டிக் காட்டுகிறார்கள் ஆவேசமாக.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளரும், ஏ.ஜி.அலுவலக ஊழியர் சங்கத்தின் அகில இந்திய முன்னாள் தலைவருமான எம்.துரைபாண்டியனிடம் விசாரித்தபோது, ’அக்கவுண்ட் ஜெனரலாக அருண் கோயல் நியமிக்கப்பட்டதுமே லஞ்சத்தில் ஊறிப்போனது ஏ.ஜி. அலுவலகம்.

கோட்ட கணக்காளர் பதவிகளை நிரப்புவதில் அருண்கோயலின் லஞ்ச விளையாட்டை ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யில் புகார் கொடுத்தேன்.

 என் புகார் மீது ஆரம்பத்தில் அக்கறை காட்டாத சி.பி.ஐ., ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் குதித்தது. அருண்கோயலும் புரோக்கரும் கைது செய்யப்பட்டார்கள்.
லஞ்சம் கொடுத்து பாஸான கோட்ட கணக்காளர்கள் சிலரின் பதவி உயர்வை சி.பி.ஐ.யின் உத்தரவுக்கேற்ப தற்போது ரத்து செய்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை.
ஆனால், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை நியாயமாக இல்லை.
குற்றவாளிகள் பலர் தப்பித்துள்ளனர்''’ என்கிறார் அழுத்தமாக.

-//////////////////-/////////////////--//////-/------------------/////////////-//-///////////////////-///////////////////////////-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...