bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 15 நவம்பர், 2019

மண்ணின் மைந்தன் பிர்சா

 "தர்த்தி அபா" பிர்சா முண்டா
இந்தியாவுக்கான சுதந்திர போராட்டம் என்பது நாடு தழுவிய போராட்டமாக அமையாமல், ஆங்காங்கே பிராந்திய குழுக்களின் போராட்டங்களாக, அவரவர்கள் தேவைக்கான போராட்டமாகவே அமைந்த காலகட்டம் அது.
1857ம் ஆண்டு சிப்பாய் கலகம் ஏற்பட்ட காலத்தில் அந்த போராட்டம் வடக்கே பஞ்சாப், தெற்கே அமராவதி, கிழக்கே ராஜ்புதானா, மேற்கே ஆவாத்தை தாண்டாத போராட்டமாகவே அது இருந்தது.


ஊதிய உயர்வு, நில உரிமைகள் மீதான சட்டம், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த வரி, மத தலைவர்களுக்கு அளித்து வந்த சலுகைகள் நிறுத்தம் போன்ற பிரச்சனைகளால் அவதியுற்ற சாதாரண வீரர்கள், விவசாயிகள், மதத்தலைவர்கள் என அனைவரும் எதிர்கால திட்டங்கள் குறித்த பிரஜை ஏதும் இல்லாமல் போராடிய போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷாருக்கு மற்ற மாகாணங்களில் இருந்து வீரர்களையும் நிதி உதவியும் கிடைத்தது என்பது வரலாறு.

அந்த போராட்டம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட பின்னர் தான் ஒட்டு மொத்த  இந்தியாவுக்கான சுதந்திரத்தின் தேவை என்பதே பலருக்கும் புரிபட துவங்கியது.
இருநூறு ஆண்டுகால சுதந்திர போராட்டத்தில் தியாகம் செய்த பலரின் பெயர்கள் வரலாற்றின் சிதைந்த பக்கங்களில் வெறும் சிதிலமாகவே கிடைக்கப்பெறுகிறது.
பல நேரங்களில் கவனிப்பாரன்றி காணாமலும் போய்விடுகின்றார்கள்.

தமிழ்நாட்டில்  பிர்சா முண்டா கதையை திரைப்படமாக எடுப்பதாக சில இயக்குநர்கள் கூறிவருவதால் பிர்சா முண்டா யார் ?அவர் இப்படி பேசப்பட என்ன காரணம் ?என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.
  இதோ உங்களுக்காக பிர்சா முண்டா வரலாறு

முண்டா பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தான் பிர்சா முண்டா.
1875ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி ராஞ்சி மாநிலம், குந்தி மாவட்டத்தில் அமைந்திருக்கும் உலிகாட் என்ற பகுதியில் சுகணா முண்டா மற்றும் கர்மி ஹத்து தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார் பிர்சா.
இவருக்கு நேர் மூத்த அண்ணன் கொமட்டா முண்டா, அக்காக்கள் தக்ஸிர்,  சம்பா மற்றும் தம்பி பஸ்னா முண்டா ஆகியோருடன் இளமை காலத்தை செலவழித்தார் பிர்சா முண்டா.

 முண்டா பழங்குடியினர்
முண்டா பழங்குடியினர் ஜார்கண்ட், ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலஙகளில் அதிகமாக வாழும் பழங்குடியினர் முண்டா மக்கள். இவர்கள் முந்தாரி என்ற மொழி பேசும் மக்களாக இருந்தனர்.
இவர்கள் இந்த மாநிலங்களில் மட்டுமில்லாமல் பிஹார், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வாழ்கின்றனர்.
ஆரம்ப காலங்களில் காட்டில் வேட்டையாடும் நாடோடிகளாக இம்மக்கள் வாழ்ந்து வந்தனர். காடுகளில் பழங்குடிகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட பின்னர் இவர்கள் விவசாயம் செய்யவும் கூடை முடையும் தொழிலையும் மேற்கொண்டு வந்தனர்.
ராயத்து வரி விதிக்கப்பட்ட பிறகு ஒப்பந்த முறையில் பணியாற்ற பல்வேறு இடங்களுக்கு இம்மக்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தனர்.
 இவ்வாறே பிர்சாவின் குடும்பமும் ஒவ்வொரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்தது.
சாதாரண ஒரு முண்டா பழங்குடி குழந்தை போலவே வளர்ந்த பிர்சா முண்டாவுக்கு புல்லாங்குழல் என்றால் மிகவும் விருப்பம். அதே போன்று ஒற்றை நரம்பால் இயற்றக் கூடிய பூசணிக்குடுவையில் செய்யப்பட்ட இசைக்கருவி ஈட்டுவதையும் பழக்கமாக கொண்டிருந்தார் பிர்சா.
 இன்னும் ஜார்கண்டின் தெருக்களில் பாடப்படும் பழங்குடி  மக்களின் பாடல்களில் இசையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிர்சா.
பின்பு சில காலம் சாலக்காட்டில் இருந்தார் பிர்சா முண்டா. வறுமையில் உழன்று கொண்டிருந்த பிர்சாவை அவருடைய மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தார் பிர்சாவின் தந்தை. அயுபதூ என்ற கிராமம் அவரின் வாழ்வை மாற்றும் ஒன்றாக அமைந்தது.

அங்கு சென்ற பிர்சா பள்ளிக் கல்வியை கற்க துவங்கினார். சல்காவில், ஜெய்பால் நாக் என்பவர் நடத்திய பள்ளியில் இரண்டு வருடங்கள் படித்தார். பின்பு அங்கிருந்து கந்தகா சென்ற அவரை வெகுவாக கவர்ந்தது மிசனரி அமைப்புகளின் செயல்பாடுகள்.  ஆங்கிலேயர்கள் பழங்குடிகளை கிறித்துவர்களாக மாற்ற பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்ட வந்த காலம் அது.
 பழங்குடி மக்களிடம் இருந்த பிற்போக்கு தனங்களை சுட்டிக்காட்டி கிறித்துவ மதத்தினை ஆங்கிலேயர்கள் பரப்பி வந்தனர்.
பிர்சாவின் அறிவுக்கூர்மையை கவனித்த ஜெய்பால் நாக் பிர்சா நிறைய படிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அருகில் இருக்கும் ஜெர்மனியின் மிசனரி பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்தார். ஆனால் கிறித்துவர்கள் மட்டும் படிக்கும் பள்ளி என்பதால் பிர்சாவை மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசானின் சொல்லுக்கு கட்டுப்பட்ட அவர் பிர்சா டேவிட்டாக அந்த பள்ளியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்தார்.

கல்வியில் படி சுட்டித்தனமாக  இருந்த பிர்சாவுக்கு அனைத்திலும் சந்தேகம். அனைத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கத் துவங்கினார். கிறித்துவத்தில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக் காட்டினார். முண்டா பழங்குடிகளின் பிற்போக்கு தனத்தையும் விட்டுவைக்காமல் கேள்வி கேட்க துவங்கினார்.
ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் மதத்தை பரப்பவும், மக்களை அடிமையாக்கவும் எடுக்கும் முயற்சிகளை கூர்ந்து கவனித்த அவர் ஜெர்மன் பள்ளியில் இருந்தும் வெளியேறினார். தன் மக்கள் பின்பற்ற ஏதுவான கொள்கைகளை உள்ளடக்கிய ஒரு புதிய மதத்தை தோற்றுவித்து தன் மக்கள் அனைவரிடமும் பரப்பும் வேலையிலும் ஈடுபட்டார் பிர்சா.
தனித்துவமான முறையில் விவசாயம் செய்து வந்த முண்டாக்களால் அளவுக்கு அதிகமான விளைச்சலை கொண்டு வர இயலவில்லை. ராயத்து போன்ற நிலவரிகள் விதிக்கப்பட்ட காரணத்தால், அவர்களின் உழைப்பு ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தவே போதுமானதாக இருந்தது.

அண்டை மாநிலங்களில் இருந்து வரும் உற்பத்தியாளர்கள் ஆடை, உப்பு போன்ற பொருட்களை கொடுத்துவிட்டு விலைப் பொருட்களை திருப்பி எடுத்துச் சென்றனர். இதனால் முண்டாக்கள் மட்டுமில்லாமல் பல்வேறு இனக்குழுக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இதனை எதிர்த்து முண்டா குரல் கொடுக்க துவங்கினார். விக்டோரியா ராணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து முண்டாக்கள் ஆட்சி மலரும் என்று மக்கள் மத்தியில் போராட்டத்துக்கான விதையை தூவினார்.
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த வனச்சட்டம் 1882-ன் படி காடுகளில் பழங்குடிகளுக்கான உரிமைகள் குறைக்கப்பட்டது.
 மேலும் காடுகளில் விவசாயத்திற்காக பயன்படுத்தும் நிலங்கள் மீதும் அரசு அதிகப்படியான அதிகாரம் செலுத்த துவங்கியது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருக்கும் அனைத்து காடுகளையும் தங்களுக்கென உரிமை கொண்டாட ஆரம்பித்தான். வனப்பகுதியில் இருக்கும் நிலங்கள் அனைத்தும் ஆங்கில அரசுக்கு சொந்தமானது என்றும், அங்கு வீடு கட்டவும், குடியிருக்கவும், கால்நடைகளை மேய்க்கவும், விவசாயம் செய்யவும் ஆங்கிலர்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும்.

அனுமதி அளித்த பின்பு அவர்கள் பயன்படுத்தும் நிலங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனை கட்ட இயலாதவர்கள் காடுகளில் இருந்து வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் பழங்குடிகள் நிலத்திற்கு ஜமீன்தார்களை நியமனம் செய்தது ஆங்கில அரசு.

ஆயிரக்கணக்கானோர் நேரடியாக காடுகளின் வளங்களை கொள்ளையிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில் பிர்சா முண்டா கலகக் குரல் எழுப்பினார். சோட்டா நாக்பூர் முழுவதும் போராட்ட குரல் பலமாக ஒலித்தது.

அதன் பின்னர் எதிர்ப்பு குரலோடு சேரும் போர் தான் நம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்று கொரில்லா திட்டங்களை தீட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் தாக்குதல்களை நடத்தினார்.

“இந்தக்காடும், நிலமும், நீரும், பாரம்பரியமாய் நமது இரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. 
இதை நம்மிடம் இருந்து பறிக்க ஒருபோதும் அனுமதியோம். ஆயுதமேந்தி காப்போம்”
”இந்த நீர் எமது
இந்த நிலம் எமது
இந்த காடு எமது”
என்று அவர் போருக்கான குரல்களை பதிவு செய்து கொண்டே இருந்தார்.

பிர்சாவின் நண்பன் கயா முண்டாவை கைது செய்தால் பிர்சாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று பலமாக எண்ணியது ஆங்கில அரசு. கயாவை கைது செய்ய செய்ல் மலையில் அமைந்திருக்கும் எட்கடிக்கு காவல்துறை விரைந்தது.

  காவல்துறையின் வருகையை உணர்ந்த ஒற்றர்கள் சங்கேத ஒலி கொண்டு எச்சரிக்கை செய்தியை அனுப்பினர். கயாவை கைது செய்ய சென்ற காவல்துறை தலைவர் பழங்குடி மக்களால் கொல்லப்பட்டார்.

இதனை அறிந்த துணை காவல் ஆணையர் மொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு கயாவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

கயா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்கு பழிவாங்கும் விதமாக 400 முண்டாக்கள் துணையுடன் பிர்சா குந்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டார்.

ஆகஸ்ட் 23, 1895ம் ஆண்டு பிர்சா கைது செய்யப்பட்டு 1897ம் ஆண்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் மீண்டும் அவருடைய விடுதலைக்கான போர் மேலும் வலுப்பெற்றது.
ஆதிகுடிகளின் கதாநாயகான பிர்சாவை மீண்டும் 1900ல் ஆங்கில அரசு கைது செய்தது.

 1900ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கிய இவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜூன் 9ம் தேதி மர்மமான முறையில் அவர் மரணமடைந்தார்.
அவருடைய உடல் அவருடைய குழுவினருக்கோ அல்லது குடும்பத்திற்கோ கூட வழங்கப்படவில்லை.

பிர்சாவின் சிலைகள் 2016ம் ஆண்டுக்கு முன்பு வரை கையில் கைவிலங்குகளுடன் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிர்சா முண்டா சிலைகள் அனைத்துக்கும் விடுதலை வழங்க உத்தரவிட்டார்.
கைவிலங்குகள் இல்லாத சுதந்திர பறவையாக ஜார்கண்ட் மாநிலம்  முழுவதும் பிர்சாவின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்மாநில தலைநகரான ராஞ்சியில் இருக்கும் விமான நிலையத்துக்கு பிர்சா முண்டாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 மண்ணின் மைந்தன் (தர்த்தி அபா) என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவரின் வீரதீர செயல்களை கொண்டாடும் வகையில் இந்திய பாராளுமன்றத்தில் இவரின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.
 வட மாநிலங்கள் தாண்டியும் கர்நாடகாவின் சில  பகுதிகளிலும் இவருடைய பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...