bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 11 டிசம்பர், 2018

பதவி விலகல் ஏன்?

மோடியிடமிருந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தப்பினார் .!
இந்திய மக்கள்.?
மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடந்து வந்த மோதலின் விளைவாக, ரிசர்வ் வங்கியில் கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் மோடி அரசு ஆதிக்கம் செலுத்த பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உர்ஜித் பட்டேல் பதவி விலகியிருக்கிறார்.

இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக பட்டேல் தெரிவித்துள்ளார்.

உர்ஜித் பட்டேலின் பதவி விலகல் இந்தியாவின் நிதி கொள்கைகளை செயல்படுத்துவதில் ஆட்டத்தை காணவைக்கும் என்கிறது த வயர் இணைய தளம்.

வயர் போன்று பல ஊடகங்கள் சொல்லும் கருத்துக்களை பார்ப்போம்.

முதலாவதாக, இந்திய பங்குச்சந்தைகளில் இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அடுத்து, மத்திய வங்கியின் இடைக்கால கவர்னராக பொறுப்பேற்கப் போவது யார்? இறுதியாக, மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில்,  நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன நடக்கும்?


டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72.50 ஆக சரிந்துள்ள நிலையில், பட்டேலின் ராஜினாமா தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது மெக்லாய் நிதி சேவை நிறுவனம். இந்த சரிவு செயல்பாட்டு அடிப்படையற்றது என்கிற அந்நிறுவனம், அரசியல் காரணங்களால்தான் இந்த சரிவு என்கிறது. 

அதுபோல பங்குச் சந்தைகளும் எதிர்மறையாக விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் நிதி சேவை நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. சொன்னதுபோல இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 10400 கீழே சரிந்தும் உள்ளது.
ரூபாயின் மதிப்பு 1.5% சரிவைக் கண்டுள்ளது.

பட்டேலின் ராஜினாமா அறிவிப்பு மோடி அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்கின்றன ஊடகங்கள். வழக்கமாக, மத்திய அரசின் செய்தி நிறுவனத்தின் வாயிலாக கவர்னர் பதவி விலகல் அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்படும்.
 பட்டேல் ராஜினாமா திடீரென்று எதிர்கொண்ட மோடி அரசு, தன்னுடைய அதிர்ச்சியை மறைக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவிக்கிறது.

ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “பட்டேலின் ராஜினாமா வங்கித் துறைக்கு பெரும் இழப்பு” என்கிறார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கிக்காக பட்டேல் செய்த பணிகளை பாராட்டுவதாக ட்விட்டரில் தெரிவிக்கிறார். 
ரிசர்வ் வங்கி இயக்குனராக உள்ள ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, பட்டேலின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை கையாளத்தெரியாமல் கீழ் நிலைக்குத் தள்ளியது காவி கும்பல். தன்னிச்சையான அமைப்புகளை சர்வாதிகாரத்தன்மையுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாஜக அரசு தீவிரமான முயன்றது.
அந்த வகையில் உர்ஜித் பட்டேலின் ராஜினாமாவை இவர்கள் எதிர்பார்த்தார்கள் எனலாம்.
 மோடி அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கு ஐந்து விசயங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது.

1. ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியை மோடி அரசு கேட்டது. அதைத்தர பட்டேல் மறுத்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய குழு அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

2. பலவீனமான நிலையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கச் சொன்னது மோடி அரசு. ஆனால், ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்வது புத்திசாலித்தனம் அல்ல என தெரிவித்தது.

3. வங்கிகளுக்கான மூலதன நெறிகள்: கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் இதற்கு ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. சர்வதேச மூலதன நெறிமுறைகளின் ஒரு பகுதியை தளர்த்த ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

4. சிறு, குறு தொழில்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு உதவும் விதமாக விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்கிற மத்திய அரசின் கோரிக்கையையும் ஆர்.பி. ஐ. நிராகரித்துவிட்டது.

5. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பு உடைக்க மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், மோடி அரசு ரிசர்வ் வங்கி, துணை கமிட்டிகளை அமைக்குமாறு வலியுறுத்தியது. இந்த கமிட்டியில் அரசு நியமிக்கும் உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கியின் பல்வேறு செயல்பாடுகளை கவனிப்பார்கள் என கூறியது.

ரிசர்வ் வங்கி கவர்னரின் ராஜினாமா இந்த ஐந்து விசயங்களில் இருந்த முரண்பாட்டில் விளைவாக நடந்திருக்கிறது என ஊடகங்கள் பல கருத்துரைக்கின்றன.

ஆனால் இது வரை மோடி அரசின் தவறுகளுக்கு ரிசர்வ் வங்கி உடன்பட்டு போயிருப்பதை அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. இது குறித்து மேலே உள்ள புதிய ஜனநாயகம் கட்டுரை இணைப்பில் நீங்கள் விரிவாக காணலாம். அதிலிருந்து சில பத்திகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.


தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. 
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. 

குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.
உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.

எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, 
ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். 
அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். 
 பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.

மோடி கும்பலால் முன்னிறுத்தப்பட்ட உர்ஜித் பட்டேல் இறுதியில் தனக்குப் பழி வரும் என்பதால் பதவி விலகியிருக்கிறார்.

 ஆனால் மோடியின் பொருளாதார்த் தாக்குதலில் இருந்து இந்திய நாட்டு மக்கள் தப்பிக்கதான் வழியே இல்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...