bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 20 டிசம்பர், 2018

கடவுள் மனிதனுக்கு எதற்காக தேவை?

உலகில் மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் வணக்கமும் கடவுள் பக்தியும் கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகிறது?
 ஏன் செய்ய வேண்டியதாகிறது?

இவற்றை இவற்றில்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவு உள்ள மனிதனின் கடமையாகும்.
முதலாவதாக மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி உண்டாகிறது? 
தானாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் நம்பிக்கை அவன் பிறந்தபோதே உண்டாகிறதா? 
கடவுள் நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா? 
அல்லது மனிதனுக்குக் குழந்தைப் பருவத்திலேயே கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டதால் ஏற்படுகிறதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் மனிதனைத் தவிர அதுவும் மனிதரிலும் பல பேர்களைத் தவிர, மற்ற எந்த ஜீவராசிகளும் கோடிக்கணக்கான மனித ஜீவனுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அறவே இல்லை. 
 மனிதரிலும் உலகில் பகுதிப்பட்ட மனிதருக்கும் கடவுள் நம்பிக்கை புகுத்தப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். 
ஏனெனில் கடவுள் நம்பிக்கை உள்ள எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்-கள் அல்ல.
 எப்படியெனில் கடவுள் நம்பிக்கைக்-காரர்-கள் ஒரே மாதிரியான, ஒரே பெயருள்ள, ஒரு மாதிரியான எண்ணிக்கைக் கொண்ட ஒரே மாதிரி உருவம் கொண்ட கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல; ஒரே மாதிரியான கடவுள் தன்மை, ஒரே மாதிரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர்களும் அல்ல.

இதற்குக் காரணம் என்ன? 
கடவுள் நம்பிக்கை-யும் அதன் மேல் சொல்லப்பட்ட பலவாறான தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய் தானாகத் தோன்றாமல் மற்றவர்கள் கற்பிப்பதாலும், கற்பிக்க நேருவதாலும், சூழ்நிலையாலும், தான் அனுசரிக்கும், தான் கட்டுப்பட்ட மதத்தாலும் மத ஆதாரங்-களாலும், மதக் கற்பனை, மதக் கட்டுப்பாடு என்பவையாலுமே ஏற்படுவதால் இவை விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை கொள்ள முடிவதில்லை.

மேற்கண்ட கருத்துகள் சாதாரணமாக கிருஸ்தவ மதக்காரனுக்கு ஒருவிதம்.
 
இஸ்லாம் மதக்காரனுக்கு ஒருவிதம், இந்து மதத்திலேயே சைவனுக்கு ஒருவிதம், வைஷ்ணவனுக்கு ஒருவிதம், சைவ, வைணவத்திற்குள்ளாகவே பல பிரிவுகள்; அப்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதம். மற்றும் பல காரணங்களால் பலருக்கு பல மாதிரி நம்பிக்கை ஏற்படுகிறது.
 இவற்றிலும் ``கீழ்நிலை'' அறிவில் இருப்பவர்-களுக்கு ஒருவிதமாகவும், ``மேல்நிலை'' அறிவில் இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும், தோன்றப்-படுகிறது.
 
 இவற்றிற்கெல்லாம் காரணம் வாய்ப்பு, கற்பிப்பு, சூழ்நிலை, தேவை (சுயநலம்) என்பதல்லாமல் வேறு எதைச் சொல்ல முடியும்?

கடவுளைப்பற்றி, கற்பித்தவர்கள் யாரானாலும், தாய் தந்தையார், குரு, சமயங்கள், நூல்கள் எதுவானாலும் கடவுளை வணங்கினால் நலம்பெறலாம் என்கின்ற ஒரு இலட்சியத்தை அடிப்படையாக வைத்தே புகுத்தி இருக்கிறார்கள் என்பதோடு, தாங்களும், மற்றவர்களுக்கு புகுத்தியோரும் கடவுளை நம்பினால், வழிபட்டால், பிரார்த்தித்தால் தங்களுக்கு வேண்டிய நலன்கள் கிடைக்கும். 
கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடனே இருக்கிறவர்களாவார்கள். மற்றும் தங்கள் தவறு மன்னிக்கப்படும். தங்கள் தகுதிக்குமேல் பலன் அடையலாம் என்பவையான எண்ணங்களே, ஆசைகளே, பேராசைகளே நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக இருக்கின்றன.
 
 உண்மையான பொது உடைமை மதக்கார (கொள்கைக்காரன்)னுக்கும் சமதர்மக் கொள்கைக்காரனுக்கும் பவுத்தனுக்கும் பகுத்தறிவுவாதி (நாத்திகர்)களுக்கும் இந்த எண்ணங்கள் அதாவது சுயநலத்திற்காக கடவுளை நம்புதல், கடவுளை வணங்குதல், பிரார்த்தித்தல் முதலிய குணங்கள் தோன்றுவ-தில்லை என்பதோடு, தோன்றப் பட்டவர்-களையும் முட்டாள்கள் என்றும் பேராசைக்-காரர்கள், மற்ற மக்களை ஏய்ப்பவர்கள் என்றுமே கருதுகிறார்கள்!

கடவுள் என்ற சொல்லும் கருத்தும் உண்மை அற்றதும், பொருளற்றதுமாய் இருப்பதால் அவற்றைப்பற்றி ஒரு பொருள் ஒரு தன்மை இல்லாமல் பல ஆயிரக்கணக்கான கருத்துகள் ஏற்பட்டுவிட்டன!
 

எந்த ஜீவனுக்கும் அதுவும் அறிவற்ற சிந்தனையற்ற எந்த ஜீவனுக்கும் தேவையில்லாத கடவுள், பகுத்தறிவுள்ள _ - சிந்தனையுள்ள _- சுதந்திரமுள்ள தனக்கு வேண்டியதையும், தன்னையும் தேடி காப்பாற்றிக் கொள்ள தனது நல்வாழ்வை _- வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்-கொள்ள _- தனக்கு வரும் கேடுகளைத் தவிர்த்துக்-கொள்ள சக்தி உள்ள மனிதனுக்கு கடவுள், கடவுள் செயல், கடவுள் அருள் எதற்காகத் தேவை என்று கேட்கிறேன்.

கடவுளே அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினார் என்றால் கடவுள் மேற்கண்ட வசதி அற்ற மற்ற ஜீவராசிகளுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என்பதற்கு கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுள் அருள் தேடுகிறவர்-கள் என்ன பதில் சமாதானம் சொல்ல முடியும்.

மேற்கண்ட கடவுள் தன்மைகள் எல்லாம் மனிதனுக்கு பாஷைகளைப்போல், நாடுகளைப்-போல், மதங்களைப்போல் பிறந்த, வளர்ந்த, பழகின இடங்களுக்கு ஏற்ப ஏற்படும் தன்மையே தவிர இயற்கையானது, ஜீவ உரிமையானது என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல முடியாதே!
தேசப்பற்று என்றும், மொழிப்பற்று என்றும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் முட்டாள்களும் கற்பித்துக் கொண்டு பலனடையப் பார்ப்பது எப்படியோ, அப்படியே சுயநலக்காரர்களும் முட்டாள்களும் கடவுள் அருள், கடவுள் பக்தி, கடவுள் பற்று, கடவுள் தன்மை, கடவுள்கள் எண்ணிக்கை, கடவுள்கள் உருவம் என்பன-வற்றை-யெல்லாம் கற்பித்துக்கொண்டு மக்களை ஏய்க்கவும், மடையர்களாக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு மனித சமுதாய வளர்ச்சியைப் பாழாக்குகிறார்கள் என்பதல்லாமல் இவற்றில் எந்தவித உண்மையும், நாணயமும் இல்லை.
கடவுள் பணிக்காக பாதிரிகள், முல்லாக்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள், பண்டார சன்னதிகள், குருக்கள், பூசாரிகள் முதலிய இந்தக் கூட்டங்கள் மனிதனுக்கு எதற்காக தேவை?

இவற்றால் இந்தக் கூட்டங்கள்தான் கவலையற்று, உழைப்பற்று சுகபோக வாழ்வு வாழ்கிறார்களே ஒழிய, இவர்களால் யாருக்கு, எந்த ஜீவனுக்கு என்ன பயன்?

மற்றும் கடவுளை ஏற்படுத்தி, மதத்தை ஏற்படுத்தி, கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி மக்களை இயற்கைக்கும் நேர்மைக்கும் சுதந்திரத்திற்கும் கேடாக நடக்கும்படி நடக்க வேண்டியதாய் பல கருத்துகளை கற்பனை செய்து மக்களை வஞ்சிக்கிறார்கள்.

உலகிலாகட்டும், நம் நாட்டிலாகட்டும் கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம் என்பவை கற்பிக்கப்பட்டிராவிட்டால் உலகில் ஏழை ஏது?
 பணக்காரன் ஏது? 
பாட்டாளி மகன் ஏது? (பிராமணன்) ஏது?
 பட்டினி கிடப்பவன் ஏது? 
வயிறு புடைக்க உண்டு புரளுபவன் ஏது?

இவ்வளவு கொடுமைகளை - பேதங்களை சமுதாயத்தில் வைத்துக்கொண்டு பரிதாபம் பச்சாதாபம் இல்லாமல் முட்டாள்தனமாக _- பித்தலாட்டத்தனமாக _- மோசமாக ``கடவுளை நம்பு, கடவுளை வணங்கு, கடவுள் சொன்னபடி நட, உனக்கு தரித்திரம் நீங்கும்'' என்றால், இப்படிப்பட்ட இவர்கள் அறிவும் பரிதாபமும்-கொண்ட மனித ஜீவன் ஆவார்களா?
ஆகவே, கடவுள் என்பதும், பிரார்த்தனை என்பதும், கடவுள் அருள் என்பதும் கைதேர்ந்த பித்தலாட்டக்காரர்களின் மோசடி, தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
 நாம் சமதர்மம் அடைய ஆசைப்பட்டு இறங்கிவிட்டோம். 
இனி இப்புரட்டுக்கும் முட்டாள்தனத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது என வேண்டிக் கொள்ளுகிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
"விடுதலை", 7.10.1968

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...