bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 13 பிப்ரவரி, 2019

ஒரு மக்கள் நாயகனும்; ஒரு கைக்கூலியும்

2018 டிசம்பர் இரண்டாவது வாரம்.35வயதே நிரம்பியஅந்த ரகசிய மனிதன், யாருக்கும் தெரியாமல் அந்த அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான்.
 இரண்டு வாரம் அவனுக்கு அவகாசம் தரப்படுகிறது.
 அவனும் உறுதியளிக்கிறான்.
என்ன உதவி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்; என்ன வேண்டுமானாலும் செய்து கொள்; ‘அவன்’ பதவியிலிருக்கக் கூடாது எனஉத்தரவிடுகிறார்கள்.

உன்னை ஜனாதிபதி யாக்குகிறோம் என்கிறார்கள்.
 வாயெல்லாம் பல்லாக, கெக்கெலி கொட்டிச் சிரித்தவாறு கை கொடுத்து விடைபெறுகிறான்.
அது, உலகின் பல நாடுகளில் அரசாங்கங்களை கவிழ்ப்பது தொடர்பான சூழ்ச்சிகள் திட்டமிடப்படும் அமெரிக்காவின் நாசகர உளவு அமைப்பான சிஐஏவின் அலுவலக அறைகளில் ஒன்று.அங்கிருந்து புறப்பட்டு அவன், வெள்ளை மாளிகைக்குச் செல்கிறான்.
டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறான்.


 அவர் முதுகில் தட்டி ஆசி வழங்குகிறார்.
அங்கிருந்து கொலம்பியாவுக்குச் செல்கிறான்; அங்கு ஜனாதிபதியாக இருக்கிற சிஐஏவின் தலைசிறந்த அடிமையும் வலதுசாரி வெறியனுமான இவான் டியூக் மார்க்கஸை சந்திக்கிறான்.
அவனும், என்ன உதவி வேண்டுமானாலும் கேள்; என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; ‘அவனை’ ஒழித்துக்கட்டு என்கிறான்.

அந்த உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டு, பிரேசிலுக்குச் செல்கிறான்... அங்கு சமீபத்தில் வன்முறையையும் கலவரத்தையும்தூண்டிவிட்டு நூலிழையில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட கொடிய நவீன பாசிச முக மான ‘ஜனாதிபதி’ ஜெயிர் பல்சானரோவை சந்திக்கிறான்.

அவனும் அதேபோலக் கூறு கிறான்.அங்கிருந்து வெனிசுலாவுக்குத் திரும்பு கிறான். நாடெங்கும் கலவரத்தையும், வன்முறை யையும் கட்டவிழ்த்து விடுகிறான்.

நாடு பற்றி எரியத் துவங்குகிற சூழலைப் பயன்படுத்தி; எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விலை பேசி, தன்வசப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவராகிறான்; எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை யாக உள்ள நாடாளுமன்ற அவையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அடுத்த நிமிடமே, அவனுக்கு வெள்ளை மாளிகையிலிருந்து அழைப்பு வருகிறது.

டிரம்ப்பின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அவனுடன் பேசுகிறார்.
உன்னை நீயே ‘இடைக்கால ஜனாதிபதி’ என்று அறிவித்துக் கொள் என உத்தரவிடுகிறார்.
 மக்கள் மத்தியில் செய்தியாளர்களைக் கூட்டி,இனி நான்தான் ‘இடைக்கால ஜனாதிபதி’ என அறிவிக்கிறான்.

அடுத்த நொடியே, நியூயார்க் டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர் குழு அவனைப் புகழ்ந்து தலையங்கம் எழுதுகிறது. வெனிசுலாவை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அற்புதமான தலைவன் கிடைத்துவிட்டான் என்று வானளாவப் புகழ்கிறது.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் குழு, வெனிசுலாவில் ஜனநாய கத்தை மீட்க வந்த ரட்சகன் என்று புகழ்கிறது.
வால்ஸ்ட்டீரிட் ஜர்னல் ஏட்டின் ஆசிரியர் குழுவோ அவனை புதியதோர் ஜனநாயகத் தலைவன் என உயர்த்துகிறது.
அதேவேளை கனடா அரசு, வெனிசுலா வின் புதிய ஜனாதிபதி வாழ்க என்கிறது.

பிரிட்டனில் துவங்கி பல்வேறு ஐரோப்பிய நாடு கள், இஸ்ரேல், லத்தீன் அமெரிக்காவில் கொலம்பியா, பிரேசில் உட்பட பல்வேறு நாடுகளும் அடுத்தடுத்த நிமிடங்களில் வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அவனை அங்கீகரிக்கின்றன.

டொனால்டு டிரம்ப், வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி ஜூவான் குவாய்டோ என பிரகடனம் செய்கிறார்.ஜூவான் குவாய்டோ.
வெனிசுலாவில் பிறந்தாலும் அமெரிக்கா வில் படித்தவன்.
சிஐஏவின் கைக்கூலியாக தேர்வு செய்யப்பட்டு, வன்முறைகளையும் கலவரங்களையும் படுகொலைகளையும் எப்படி நிகழ்த்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டவன்.
மதுரோ                                            ஜூவான் குவாய்டோ.
வெள்ளை மாளிகையின் தலைசிறந்த அடிமைகளில் ஒருவன்.

வெனிசுலாவில் தனக்கு அடிமையாக மறுக்கிற நிக்கோலஸ் மதுரோவை ஒழித்துக் கட்டுவதற்காக வெள்ளை மாளிகையை இயக்குகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடைந்தெடுத்த கைக்கூலியாக செயல்படு வேன் என்று அவர்களிடம் உறுதி யளித்துக் கொண்டவன்.

குவாய்டோவை வெனிசுலாவின் ஜனாதி பதியாக அறிவித்த கையோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே ஆட்சி நடத்தி வருகிற நிக்கோலஸ் மதுரோவை ‘சட்ட விரோதமானவர்’ என்று வெள்ளை மாளிகை யிலிருந்து டிரம்ப் அறிவிக்கிறார். ஒருவார காலத்திற்குள், மதுரோ, ஜனாதிபதி பதவி யிலிருந்து வெளியேற வேண்டுமென உத்தரவு போடுகிறார்.

வேறொரு நாட்டிற்கு தானே ஜனாதிபதியை நியமிப்பதும், அந்நாட்டின் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவரும் ஜனாதிபதியை சட்டவிரோதமானவர் என்று அறிவிப்பதும் உலகின் எந்த சட்டத்திற்கும் உட்பட்டது அல்ல என்பது தெரியாதவர் அல்லடொனால்டு டிரம்ப்.

அந்த சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, வெனிசுலா எனும் தேசத்தின் இறை யாண்மையை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து, ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளை யெல்லாம் சுக்குநூறாக கிழித்தெறிகிறார் டொனால்டு டிரம்ப்.நம் கண் முன்னே இத்தகைய பயங்கரம் பகிரங்கமாக அரங்கேறுகிறது.
வெனிசுலா.
 உலக வரைபடத்தில் தென் அமெரிக்கக்கண்டத்தில் மையமான பகுதியில் அமைந்திருக்கும் அற்புதமான நாடு. இன்றைய தேதியில், உலகிலேயே நிரூபிக்கப்பட்ட பெட்ரோலிய வளம் மிக மிக அதிக அளவில் இருக்கும் முதன்மையான நாடு.
 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, உலகம் முழுவதும் இன்னும் உறிஞ்சப்படாமல் இருப்பு இருக்கிற மொத்தபெட்ரோலியத்தில் 20 சதவீதம் வெனிசுலாவில் தான் இருக்கிறது. உலகின் அன்றாட பெட்ரோலியத் தேவையை பூர்த்தி செய்கிற முதல் பத்து பெரிய எண்ணெய் வள நாடுகளில் ஒன்று வெனிசுலா. உலகிற்கு அன்றா டம் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்கிற முதல் ஐந்து பெரிய பெட்ரோலிய வளம் கொண்ட நாடுகளில் ஒன்று வெனிசுலா.

இதில் 41 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது.
தனது தேவையில் கிட்டத்தட்ட சரிபாதி பெட்ரோலியத்தை அமெரிக்கா வெனி சுலாவிடமிருந்து பெறுகிறது என்றும் இதைச் சொல்லலாம்.வெனிசுலா அமெரிக்காவுக்கு அருகில் இருக்கிறது.
 பெட்ரோலியத்தை கொண்டு செல்லும் செலவு குறைவு. இதற்கு முன்பு வெனிசுலாவிடமிருந்து அமெரிக்கா காசு கொடுத்தெல்லாம் பெறவில்லை.


 1999ல், கியூபபுரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் வழி காட்டுதலுடன் சோசலிச சிந்தனைகளை நெஞ்சில் ஏந்தி, ராணுவத்தில் புரட்சிகர நட வடிக்கைகளை மேற்கொண்டு, மக்களையும் அணிதிரட்டி பொலிவாரிய புரட்சி நடத்தி தளபதி சாவேஸ் ஆட்சிக்கு வந்தது முதல், வெனிசுலாவின் பெட்ரோலியத்தை அமெரிக்காவால் களவாடிக் கொண்டு செல்ல முடியவில்லை.
 அதற்கு முன்பு கிட்டத்தட்ட நூறு ஆண்டு களுக்கும் மேலாக வெனிசுலாவின் எண் ணெய் வளம் அமெரிக்காவின் காலடியின் கீழ்தான் இருந்தது.
ஹியுகோ சாவேஸ்


அது 1890களின் வரலாறு.
அப்போது வெனிசுலாவுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும் இடையே இருந்த எல்லைத் தகராறில் தானடித்த மூப்பாக தலையிட்டு வெனிசுலாவில் ஒரு கைக்கூலியை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா.
 அன்றைக்கு அமெரிக்க வெள்ளைமாளிகையில் ஜனாதிபதியாக குரோவர் கிளீவ்லேண்ட் இருந்தார்.
அவரது நிர்வாகம்படிப்படியாக வெனிசுலாவை தனது கைகளின் பிடிகளில் கொண்டுவரத் துவங்கியது. 1908ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட அரசியல்நெருக்கடியை பயன்படுத்தி அமெரிக்க கடற்படை நேரடியாக தலையிட்டு, அங்குதுணை ஜனாதிபதியாக இருந்த ஜூவான் வின்சென்ட் கோமேஜ் என்பவர் அதிகாரத்தைக்கைப்பற்றுவதற்கு உதவி செய்தது;
கலவரத்தையும் வன்முறையையும் கட்ட விழ்த்துவிட்டு எண்ணற்ற மக்களை படு கொலை செய்து கோமேஜ் ஜனாதிபதியாக உட்கார்வதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகைஅனைத்து உதவிகளையும் செய்தது.

கோமேஜ், வெள்ளை மாளிகையின் மிகச் சிறந்த அடிமையாக - கைக்கூலியாக மாறினான். 1935ஆம் ஆண்டு அவன் செத்துப் போகும் வரையில் வெனிசுலாவில் நடத்தப்பட்ட பயங்கரங்களும், கொடூரங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
கற்கால காட்டு மிராண்டித்தன ஆட்சியை அவன் நடத்தினான். அரசியல் கைதிகள் தலை துண்டித்துப் படு கொலை செய்யப்பட்டார்கள். அரசியல் எதிரிகள் நிரந்தரமாக முடக்கப்பட்டார்கள்.
அதை யும் மீறி ஜனநாயகம் பேசியவர்களின் கழுத்திலும், ஆண்குறியின் விரைகளிலும் இறைச்சி யைக் கோர்க்கும் கொடிய கொக்கிகளை மாட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு படுகொலை செய்தான்.

இவனது ஆட்சியில்தான் ஒட்டு மொத்த வெனிசுலாவின் எண்ணெய் வளத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் முற்றாக தங்களது கைகளின் கீழ் கொண்டு வந்தன.
குறிப்பாக, இன்றைய அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில் மற்றும் ராயல் டட்ச்ஷெல் ஆகியவை முழுக்க முழுக்க வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைச் சுரண்டிக் கொழுத்தவைதான்.

கோமேஜின் சாவுக்குப் பிறகு 1948ல்ஆட்சிக்கு வந்த மற்றொரு கைக்கூலி மார்க்கோஸ் ஜிமனேஸ்.
இவன் அவனை விடக் கொடிய சர்வாதிகாரியாக செயல் பட்டான். 
அமெரிக்க பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைக்கூலியாக வேலை செய்தான்.
தனது சொந்த மக்களை கொடூரமாக கொன்று குவித்தான். பல்லாயிரக் கணக்கான அப்பாவி வெனிசுலா மக்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

1958ல் ஜனநாயக முயற்சிகள் துவங்கி னாலும் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் நுகத்தடியில் பூட்டப்பட்ட - அமெரிக்க பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் சொர்க்கமாக மாற்றப்பட்ட வெனிசுலா 40 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது.


அது 1998. வெனிசுலா ராணுவத்திற்குள் புரட்சிகர நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கள் தலைவனாக மலர்ந்தார் சாவேஸ். பொலிவாரியப் புரட்சி நடந்தது.
அந்தநிமிடம் முதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்யும் நடவடிக்கைகளைத் துவக்கினார் சாவேஸ். மக்கள் அவரைக் கொண்டாடினார்கள்.
அமெரிக்க ஏகாதி பத்தியமும் அதன் கைக்கூலிகளும் வெனி சுலாவுக்குள் அவர்களால் பலன்பெற்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் நில பிரபுக்களும் சாவேசுக்கு மிகப்பெரும் எதிரிகளாக மாறினார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், சாவேசை பிசாசு என்று சாடினார்.

2002ம் ஆண்டு சாவேசை வீழ்த்துவதற்கு சிஐஏ சூழ்ச்சி செய்தது.
அவரது ஆட்சிக்கு எதிராக, சிஐஏவின் பயிற்சிக் கூடங்களில் கொலைகாரப் பயிற்சி பெற்று, பின்னர் வெனிசுலாவில் அரசியல்வாதியாக களமிறக்கப் பட்ட எலியாட் அப்ராம்ஸ் என்பவன் தலைமையில் பெரிய கலகம் நடத்தப்பட்டு ஜனாதிபதி சாவேஸ் சிறை வைக்கப்பட்டார்;
ஆனால் வெனிசுலா முழுவதும் மக்களின் எழுச்சி வெடித்தது. ராணுவத்தில் மிகப்பெருவாரியான அதிகாரிகளும் வீரர்களும் சாவேசை விடுவிக்க குரல் கொடுத்தனர்.
அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு 48 மணி நேரத்தில் சாவேசைவிடுவித்து, அமெரிக்க ஏகாதிபத்திய கைக் கூலிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தார்கள்.

சாவேஸ் இன்னும் எழுச்சியோடு தனது புரட்சிகர நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
வெனிசுலா குடிமக்களின் சொர்க்கமாக மாறியது. சாவேஸ் ஏழைகளின் ஏசுவாக வலம் வந்தார்.வெனிசுலாவின் பெட்ரோலிய வளம் முழுவதும் மக்கள் சொத்தாக மாறியது.
 அமெரிக்க பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகள் துரத்தி அடிக்கப்பட்டன. வெனிசுலாவிட மிருந்து முதல் முறையாக பெட்ரோலை காசுகொடுத்து வாங்கியது அமெரிக்கா. ஏகாதிபத்தியம் - உலகம் முழுவதும் பெட்ரோலிய வளத்தை தனது காலடியின் கீழ் கொண்டுவர வெறியோடு அலைகிறஅமெரிக்க ஏகாதிபத்தியம் - ஆப்கானிஸ் தானைச் சிதைத்தது;
லிபியாவைத் தகர்த்தது;
இராக்கைச் சின்னாபின்னமாக்கியது.
 சிரியா வைப் பாய்ந்து குதறியது.
வடகொரியாவை அழிக்க முயற்சித்தது.
வெனிசுலாவையும் விடாமல் துரத்தியது.
 சாவேசுக்கு சூழ்ச்சிகரமாக கொடிய விஷம் கொடுத்து மெல்லக் கொன்றது.

2013.சாவேசுக்குப் பிறகு அவரது பொலிவாரியப் புரட்சியை உயர்த்திப் பிடித்து வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் தலைவராகவும் மக்களின் மனம் கவர்ந்த ஜனாதிபதியாகவும் மலர்ந்தார் நிக்கோலஸ் மதுரோ. ஒரு சாதாரண போக்குவரத்துத் தொழிலாளி.
அரசியல் கற்று, இடதுசாரி சித்தாந்தம் கற்று, சாவேசின் உற்ற தோழனாய் மாறி,வெனிசுலா மக்களின் இதயத்தில் சாவேசைப் போலவே அமர்ந்தார் மதுரோ.
இனி அசைக்க முடியாது என்றெண்ணிய ஏகாதிபத்தியம், மதுரோ ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் அவரை ஒழிப்பதற்கு களத்தில் இறங்கியது.
வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறுபொருளாதாரத் தடைகளை விதித்து நெருக்கடிக்கு உள்ளாக்கியது. வெனிசுலா வின் ஒரே மிகப்பெரிய பொருளாதார ஆதாரம்அதன் தீராத பெட்ரோல் வளம்தான்.
ஆனால்அந்த பெட்ரோலிய வளத்தை எங்கும் கொண்டு செல்ல விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் பல நாசகர முயற்சிகளை அமெரிக்கா செய்தது.
இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சிக்கலில் மதுரோ அரசுசிக்க வைக்கப்பட்டது. அதையும் மீறி மக்களுக்கான நடவடிக்கைகளைத் தொடர்கிறார் மதுரோ.

2017 டிசம்பர்.வெனிசுலாவில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச அளவில் பத்திரிகை யாளர்கள், சிந்தனையாளர்கள், நடுநிலையாளர்கள் என பல தரப்பினரை உள்ளடக்கிய பல்வேறு கண்காணிப்புக் குழுக்கள் சர்வதேச அமைப்பு களின் சார்பில் அங்கு அனுப்பப்பட்டது. அந்தக்குழுவில் ஒரு கண்காணிப்பாளராக பங்கேற்றுவெனிசுலாவுக்கு சென்றவர் பெட்டி புர்ச்செல்.
வெனிசுலா சோசலிச சிந்தனையை உயர்த்திப்பிடித்து ஆட்சி நடத்துகிற நாடு என்பதால், மதுரோவின் அரசு மக்களுக்கான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்கிறது என்று இடதுசாரிகளே சொன்னால்,
 வெனிசுலாவைப் பற்றி வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் குப்பை போல தமிழ் இந்துஏட்டின் வணிகவீதியில்  எழுதியுள்ள கட்டுரையாளர் சரவணன் போன்றவர்கள் கேள்விக்குள்ளாக்கலாம்.

 அவருக்கு பெட்டி புர்ச்செல் பதில் சொல்கிறார்.பெட்டி புர்ச்செல் ஒரு இடதுசாரி அல்ல. அவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

வெனிசுலாவில் உள்ளாட்சி தேர்தல் முடிந்தபிறகு தலைநகர் காரகஸ்ஸிலும், நாட்டின் பல்வேறு பகுதி களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்க ளின் வாழ்நிலையை நேரில் ஆய்வு செய்து,
பின்னர் லண்டனுக்கு திரும்பி, ஐரிஸ் டைம்ஸ் ஏட்டில் ஒரு கட்டுரை எழுதினார்:
“வெனிசுலாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை நுட்பமான முறையில் நாங்கள்கண்காணித்தோம். மதுரோவின் ஆளும்சோசலிஸ்ட் கட்சி 70 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
 எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து 30 சதவீத வாக்குகளை பெற்றன.
வாக்குப்பதிவில் ஏதேனும் முறை கேடுகள் நடந்துள்ளதா என்று விரிவாக ஆய்வு செய்தோம். லத்தீன் - அமெரிக்க தேர்தல் வல்லுநர்களின் கவுன்சில் சார்பில் இன்னும் முழுமையான ஆய்வில் ஈடுபட்ட ஒரு உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, ‘‘தேர்தல் மிகமிகஅமைதியாக, மிக மிக நேர்மையாக, எந்தவிதப்பிரச்சனையுமின்றி, வெனிசுலா குடிமக்க ளின் முழு விருப்பத்தை பூர்த்தி செய்யும்விதத்தில் நடந்துமுடிந்தது’’ என்று தனது தீர்ப்பினை பதிவு செய்தது.
இத்தேர்தலை வெனிசுலாவின் தேசிய தலைமைத் தேர்தல் கவுன்சில்நடத்தியது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது.
இந்த எந்திரங்கள் தைவானில் தயாரிக்கப்பட்டவை.
 ஒவ்வொரு வாக்காளரின் கைரேகையை இந்த எந்திரம் தானியங்கி முறையில் சரிபார்த்து அதன் பிறகே வாக்களிக்க அனுமதிக்கிறது. எனவே இந்த எந்திரத்தை ஏமாற்றி வேறு ஒருவர் வாக்களித்துவிட முடியாது. வாக்களித்தபிறகு வாக்காள ருக்கு அச்சிடப்பட்ட ரசீதும் வருகிறது. அந்த ரசீதை தனியாக ஒரு வாக்குப்பெட்டியில் போடுகிறார்கள்.
மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்கும் ரசீதில் உள்ள வாக்கும் ஒன்றுதானா என்பதை யார் வேண்டுமானாலும் தணிக்கை செய்து கொள்ளமுடியும்.
வெனிசுலாவில் உள்ள இந்த தேர்தல் நடைமுறை எந்த விதத்திலும் மோசடி செய்யமுடியாத ஒன்று என்பதை உறுதியாகச் சொல்வேன்.இந்தத் தேர்தலை சில எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தேர்தல் நியாயமாக நடக்காது என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை. தேர்தலைப் புறக்கணித்த மேற்படி எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது.

 அவர்கள் மதுரோவின் ஆட்சியை மாற்றிய பிறகுதான் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று கூறி,வாக்குப்பதிவுக்கு முன்பு வன்முறை நிறைந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
 நான் காரகஸ் நகரத்தில் மக்கள் வாழ்வு எப்படி இருக்கிறது என்று பார்க்கும் பொருட்டு சுற்றிப்பார்க்கச் சென்றேன்.
 நகரின் பரபரப்பு மிக்க பகுதிகளைத் தாண்டி மலைத் தொடர்போன்ற எழில்மிகு பிரதேசங்கள் இருக் கின்றன. அந்த மலைப்பகுதியின் எழிலைக் காண்பதற்காக ஒரு கேபிள் காரில் சென்றேன். குடும்பம் குடும்பமாக மக்கள் பிக்னிக் வந்திருந்தார்கள்.

 அவர்களோடு வெனிசுலாவின் புகழ்பெற்ற சாக்லேட்டை சுவைத்துக் கொண்டே உரையாடினேன். அரசியல் பிரச்சனைகள் குறித்து அவர்கள் காரசாரமாக பேசிக்கொண்டார்கள்.
ஒரு சிலர் மது ரோவின் கொள்கைகளை விமர்சித்தார்கள். பெரும்பாலானோர் மதுரோவின் ஆட்சியைப் புகழ்ந்தார்கள்.
 சாவேஸின் நினைவுகளை தங்கள் நெஞ்சில் தாங்கியிருப்பதாக கூறி னார்கள்.
 எங்களது குழந்தைகள் இன்றைக்கு ஒரு கவுரவமான, முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழத் துவங்கியிருக்கிறார்கள் என்றால் அதற்கு சாவேஸ் உருவாக்கிய, மதுரோ பின்பற்றுகிற கொள்கைகள்தான் காரணம் என்றார்கள்.
அமைதி வேண்டி வயலின் இசை
1980களில் துவங்கி மத்திய அமெரிக்காவிலும், வெனிசுலாவிலும் அமெரிக்கா நடத்தி வருகிற தாக்குதல்களை சகித்துக் கொள்ளமுடியவில்லை என்று கொந்தளித்தார்கள்.
இன்னும் ஆய்வு செய்தேன்.
பல விபரங்கள் கிடைத்தன.

சாவேஸ் காலத்தில் துவங்கி இப்போது வரையிலும் வெனிசுலாவுக்கெதிராக அமெரிக்கா ஏராளமான தடைகளை விதித்துள்ளது.
அதன் காரணமாக உணவு, மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிக்கான பொருட்கள் எவையும்வெனிசுலாவுக்குள் அவ்வளவு எளிதாக வந்து விட முடியாது.
மேலும் மேலும் புதிய புதிய தடைகளை அமெரிக்க நிர்வாகம் வெனிசுலா மீது விதித்து வருகிறது. இதன் விளைவாக வெனிசுலா மக்களை கடுமையான நெருக் கடிக்குள் தள்ளி, அதன்மூலம் அரசுக்கெதி ராக திருப்ப முடியும் என்கிற அமெரிக்காவின் கணக்குதான்.
இது சில இடங்களில் பிரதி பலித்திருக்கிறது. ஆனால் முரண்பாடு என்னவென்றால், தங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும்கூட மக்கள் மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக திரும்பவில்லை என்பதுதான். காரகஸ் நகரத்தில் பெருவாரியான குடும்பங்கள் நிக்கோலஸ் மதுரோவை உறுதியாக ஆதரிக்கின்றன. நாடு முழுவதும் இதுதான் நிலை. சூப்பர் மார்க்கெட்டுகள் இருக்கக்கூடிய இடங்களில் அந்த அங்காடிகளை பெரிதும் நம்பியிருக்கிற பணக்கார மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்கள் பொருட்கள் வராமல் இருக்கிறபோது, மதுரோவுக்கு எதிராக பேசுகின்றனர். ஆனால் பெருவாரியான ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் மதுரோவைப் போற்றுகிறார்கள்.

ஏனென்றால் அவர் களுக்கு மிக விரிவான முறையில் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரோ அரசு உத்தர வாதப்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் மொத்தமுள்ள ஒரு கோடியே 90 லட்சம் மக்க ளில் 40 லட்சம் மக்கள் தினந்தோறும் மூன்று வேளையும் உணவுப் பொட்டலங்களை அரசுஏற்பாட்டில் பெறுகிறார்கள். குழந்தைகள் தினந்தோறும் பள்ளிக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

பள்ளி வருகை 40 சதவீதத்தி லிருந்து 90 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளூர் சுகாதார மையங்கள் மூலமாக இலவசமாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. தடைகள் இருப்பதால் மருந்து வந்துசேருவதில் சில நேரம் தாமதமாகிறது.
எனினும் நோயாளிகள் முறையாக கவனிக்கப்பட்டு மருந்துகள் எப்படியாவது அவர்களது கைகளில் சேர்க்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து சிறப்பாக இருக்கிறது.
பெட்ரோல் அநேகமாக அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது என்றே சொல்லலாம். ஒரு குளிர்பான புட்டியின் விலையைவிட ஒரு வாகனத்தின் முழு டேங்கை நிரப்புவதற்கான பெட்ரோல் விலை மிக மிகக் குறைவு.
மதுரோ ஆட்சியில் 20 லட்சம் குடும்பங்களுக்கு சமூக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வசதியான வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளன.
 சமூகப் பாதுகாப்புஉறுதி செய்யப்பட்டிருந்தாலும் பலரதுவாழ்வு கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலையில் இருக்கிறது என்பது உண்மைதான்.
பொருளாதாரத் தடைகள் ஒரு காரணம்.
வெனிசுலா வீதி சுவர்.

அதே வேளை எண்ணெய் வளத்தை இன்னும்எப்படி மக்களுக்கான முழுமையான வாழ்வுக்கான ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதை மதுரோ அரசு யோசிக்க வேண்டும்.
பெரிய கார்ப்பரேட் உணவு இறக்குமதி யாளர்கள் இன்னும் வெனிசுலாவில் உணவுச் சந்தையை கையில் வைத்திருக்கிறார்கள்.
 அவர்களை ஒழித்து மக்களுக்கு உணவை உறுதி செய்ய வேண்டும்”.இவ்வாறு புர்ச்செல் விரிவாக பதிவு செய்திருக்கிறார்.
எனவே வெனிசுலா மக்களை மதுரோவுக்கு எதிராக முழுமையாக தூண்டிவிட முடி யாது என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியம் உணர்ந்தே இருக்கிறது.

இத்தகைய பின்னணியில்தான் டிரம்ப் நிர்வாகம் முழு மூச்சில் வெனிசுலாவை வீழ்த்தி, அதை மீண்டும் தனது நுகத்தடியில் பூட்டி அடிமையாக்குவதற்கு, அதன் ஒட்டுமொத்த பெட்ரோலிய வளத்தையும் கைப்பற்றுவதற்கு வெறியோடு இறங்கியிருக்கிறது.
2018ஜூலையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரும் வன்முறை கலவரத்தை தூண்டிவிட்டு பல படுகொலைகளை அரங்கேற்றினார்கள் அமெரிக்க கைக்கூலிகள். அதற்கு முன்னதாக,வன்முறையைப் பிரயோகித்தும், எதிர்க்கட்சிகளில் பலவீனமானவர்களை விலைக்கு வாங்கியும், நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையை பெற்றனர்.
ஆனால் மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மதுரோவை தங்களது இதய சிம்மாசனத்தில் அமர்த்தி னார்கள்.
 67.7 சதவீத வாக்குகளை வாரி வழங்கினார்கள்.
இதை ஏகாதிபத்தியம் எதிர்பார்க்க வில்லை. எப்படியேனும் மதுரோவை அழிப்பது என கங்கணம் கட்டி அதற்கான ஒரு தலைசிறந்த கைக்கூலியைத் தேடியது.
அந்த கைக்கூலிதான் ஜூவான் குவாய்டோ.பேரரசன் டிரம்ப் உத்தரவு போடுகிறான்.
 அதை கைக்கூலி வெனிசுலாவில் நிறைவேற்ற முயல்கிறான்.
வெனிசுலாவில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.
                                                                                                                                                                                         -எஸ்.பி.ராஜேந்திரன்

ன்றி:தீக்கதிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...