bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 28 பிப்ரவரி, 2019

அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் !

புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு அரசும், ராணுவமும் அடையும் பதட்டத்தை விட, இந்துத்துவ கும்பலுக்கு அடியாள் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களின் கூச்சல், பதட்டம் அதிகமாக இருக்கிறது. தாக்குதல் நடந்த அன்று அர்னாப் கோஸ்வாமி பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என குதித்தார்.
அர்னாப்பின் கதறலை மெல்லிய தொனியில் பேசும் நம்மூர் பத்திரிகையாளர் மாலன், இதுதான் சந்தர்ப்பம் பாகிஸ்தானை முற்றாக குண்டு போட்டு அழிக்க வேண்டும் என யோசனை சொன்னார்.
இரு தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் தீவிரவாத முகாம்களை அழித்ததாக  இந்தியா சொன்னபோது, மாலனுக்குள் இருந்த முழு சங்கியும் வெளிப்படுகிறார். அவர் எழுதிய முகநூல் பதிவில்,
“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! இன்று அதிகாலை நடந்த அதிரடித் தாக்குதலின் சிறப்பு என்ன?

போர் வியூகம் வகுக்கும் மாலன்…
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய உடனேயே பதிலடி இருக்கும் என்று ஜெய் ஷே முகமது எதிர்பார்ததது. அதனால் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இருந்த முகாம்களை 100 கிலோமீட்டர் உள்ளே, அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் மாற்றியது. அது பத்திரமான மலைப்பகுதி. எவ்வளவு பத்திரமாணது என்றால் அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்த இடம் அது. அது 5 நட்சத்திர ஓட்டலின் வசதிகளோடு கூடிய இடம்.
தீவிரவாதிகள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்காது என்று நினைத்தது. ஏனென்றால் 1971 -க்குப் பிறகு, 48 வருடங்களாக இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்கியதில்லை.
அதன் கணக்குகள் பொய்த்தன. அந்தக் காலங்கள் மலையேறிவிட்டன என்று அதற்குத் தெரியாது. இந்தியா தீவிரவாதிகள் பின்வாங்கக் காத்திருந்தது. அதே நேரம் வேறு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்தது. தீவிரவாதிகள் இடம் மாறியதும் துணிந்து எல்லை தாண்டிப் போய் போட்டுத் தள்ளியது. இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 400! (375 பயிற்சியாளர்கள்+25 பயிற்சி அளிப்பவர்கள்.)
40 -க்கு பதில் 400! இதுதான்(டா) இந்தியா!” என்கிறார்.

*****

ந்தியாவின் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்து இந்திய அரசே இதுவரை உறுதியான எந்தத் தகவலையும் கூறவில்லை. வெடி சத்தம் கேட்டது உண்மைதான், ஒரே ஒருவருக்கு, அதுவும் அந்த மலைப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு காயம் என்பதாக பிபிசி ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது.  உண்மை இப்படியிருக்க, அக்மார்க் சங்கிபோல, மாலன் “40 -க்கு பதில் 400” என அவிழ்த்து விடுகிறார்.
புதன்கிழமை நடந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் வசம் அபிநந்தன் என்ற வீரர் சிக்கினார். அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என சமூக ஊடகங்களில் இந்திய மக்களும் பாகிஸ்தானியர்களும்கூட வலியுறுத்திய நிலையில், கீ போர்டில் போர் புரியும் மாலன், “சிராய்ப்புக் கூட இல்லாமல் சண்டையில் ஜெயித்த ஹீரோக்கள் சினிமாவில் கூட இல்லை!” என அஞ்சா நெஞ்சனாக எழுதுகிறார்.

நல்லா கூவுற தம்பி….
மாலனைப் போல டிவி ஸ்டியோவில் உட்கார்ந்துகொண்டு  ‘போர் போர்’ என கத்திக்கொண்டிருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. போர் வேண்டாம் என முழக்கங்கள் எழ ஆரம்பித்த நிலையில், போருக்கு போயாக வேண்டும் என அடம்பிடிக்கும் அர்னாபை தயவு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வையுங்கள் என ட்விட்டரில் பலர் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
“அன்புள்ள பாகிஸ்தானியர்களே இங்குள்ள அர்னாப் கோஸ்வாமியை அழைத்துக்கொண்டு, அபிநந்தனை திருப்பி அனுப்பி விடும்பம்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ரவிச்சந்திரன்.
முன்னாள் இராணுவ வீரரான சாவூர், “அபிநந்தனை மீட்க அர்னாப், கவுரவ் சாவந்த், நாவிகா குமார், ராகுல் கன்வால், ராகுல் சிவசங்கர் போன்றோரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.
அதுபோல, மாலனையும் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் முகநூல் பதிவர்கள் பலர் விரும்புகிறார்.
“மாலன் போன்ற போர் விரும்பிகள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சென்று எதிரிகளை சுட்டு வீழ்த்தி தங்கள் வீரத்தை நிரூபிக்க வேண்டும். இதுதான் பொருத்தமான நேரம். மாலன், கூச்சப்பட்டு அமைதியாக இருந்துவிடுவார் என்பதால் நாம் அவரை போர் முனைக்கு செல்வதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். தேசமே பதற்றத்தில் இருக்கும்போது தேசபக்தாளுக்கு ஃபேஸ்புக்கில் என்ன வேலை?” என்கிறார் பாரதி தம்பி.

***

“நமது ராணுவத்தில் நேரடியாக யுத்தத்தில் இறங்கும் சிப்பாய்கள் அனேகமாக பஞ்சமர்களும் சூத்திரர்களுமே. 10% இடஒதுக்கீட்டின்படி உயர்சாதியினரையும் அங்கே பணியமர்த்த வேண்டும். மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குதான் முரட்டு குணம் வரும் என்று சங்கிகள் கூறுவதால் அவர்களும் அதை சாப்பிட வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு பிறகு போருக்கு போனால் வெற்றி நிச்சயம். சரிதானே மாலன்..?” எனக் கேட்கிறார் பேராசிரியர் அருணன்.

***

இந்தியாவின் தாக்குதல் குறித்து தெலுங்கு செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராணுவ உடையணிந்து செய்தியை வழங்கினார். அதைக் குறிப்பிட்டு, “இதுபோல இனி, திரு மாலன் நாரயணன் தொலைகாட்சிவிவாதங்களுக்கு மில்ட்ரி ட்ரஸில் வரவேண்டும். அதே வேகத்தோடு எல்லைக்குப் போய் பாகிஸ்தான் மண்ணில் குதித்து… படபடவென்று தன்னைத் தானே சுட்டுக் கொள்ள வேண்டும்…” என்கிறார் இரவிக்குமார்.

***

“இந்திய ராணுவ தளபதி அவர்களுக்கு..
தமிழ்நாட்டில் மாலன் என்றொரு ஸ்பார்ட்டன் வீரர் ஒருவர் போர் புரிய துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.. தயவு செய்து வந்து அள்ளிட்டு போகவும்.. ” என்கிறார் கார்ட்டூனிஸ்ட் பாலா.

***

“போர் வேண்டும்” என்று தினம் தினம் சமூக வளைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு சென்று குடியேற வேண்டும்.
மாலன், மாரிதாஸ் போன்ற பிஜேபி அயோக்கியர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, பாதுகாப்பான இடங்களில் அமர்ந்து கொண்டு போர் வேண்டும் என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வருகிறார்கள்…” என காட்டமாகிறார் சந்திரசேகர்.

***

“மாலன் என்ற ஆளுங்கட்சி ஜால்ரா பத்திரிகையாளர் அவருடைய 300 தீவிரவாதிகள் கதையை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினார் என்று விளக்கம் கொடுப்பாரா? கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை உளவுத்துறை தெரிவிக்குமா? இந்த தாக்குதல் குறித்து இந்திய விமான படை நேரடியாக அறிக்கை அளிப்பார்களா?
ராணுவ தாக்குதல் குறித்து சந்தேகம் கொள்வதற்கு மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் பிஜேபி-யினர் அள்ளி விடும் கதைகளால் ராணுவத்தின் பொறுப்பு கேள்விக்குரிய விஷயமாக ஆக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம்.” என்கிறார் அரசியல் நையாண்டி.

***

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது!
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
– என்ற நாமக்கல் கவிஞர் வழியிலேயே மாலனுக்குப் பதில் சொல்லத் தொடங்குகிறேன்.
போர் என்றால் நடுங்குகுறார்கள் புறநானுற்றின் புலிப் போத்துகள் என்று மாலன் பதிவிட்டத்தை நான் காண நேர்ந்தது. மாலன் வரிகளையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. பறநானூற்றின் புலிப் போத்துகள் என்று தமிழர்களை தான் குறிப்பிடுகிறார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவ்வரியால் தான் தமிழ்ப் பேசினாலும் தான் ஒரு தமிழினில்லை என்று தன்னுடைய அடையாளத்தையும் அதே ஒற்றை வரியில் உறுதிப் படுத்தியிருக்கிறார். புலிப் போத்துகள் என்ற சொல்லை விடுதலைப் புலிகளை சிறுமைப் படுத்தவும் பயன்படுத்திக் கொள்வதை நான் உணர்கிறேன்.
அதிகாரத் திணிப்பை எதிர்த்து போராடிய புறநானூற்றின் புலிப் போத்துகள் தன் இனத்தின் ஒரு பகுதியை இழந்தே இருக்கிறோம். போரின் வலியை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதன் பாதிப்புகளையும் நிகழ் காலத்தில் கண்டிருக்கிறோம்.
இந்நாட்டிலும் ஆரிய திராவிடப் போரை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறோம். நாங்கள் கருத்தியல் போர் நடத்திக் கொண்டிருக்க, கல்வி கற்பதாலேயே எதிர்த்துப் பேசுகிறார்கள் என்றறிந்து படுகொலைகளை கல்வி நிறுவனங்களின் மூலமாகவும், தகுதித் தேர்வு என்ற பெயர் மூலமாகவும் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள் மாலன்.
உண்மையில் உங்கள் நெஞ்சில் உரமிருந்தால் அபிநந்தனின் குடும்பத்தைப் பார்த்து விட்டு வாருங்கள். போரினால் கைக்கால் இழந்த இராணுவ வீரர்களையும் அவர்கள் குடும்பத்தின் நிலையையும் பார்த்து விட்டு வருங்கள். போரினால் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களையும் சந்தித்து விட்டு வாருங்கள்.
இதற்கு மேலும் இறுதியாக ஒரு மாத காலம் காஷ்மீரில் இருக்கும் இசுலாமியர்களின் வீடுகளில் ஒரு மாதம் காலம் இருந்து விட்டு வாருங்கள்.
பின்னர் உங்கள் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் போருக்கு அனுப்பி வைத்துவிட்டு வாருங்கள்.
போலி தேசப் பக்தியால் ஓட்டுப் பொறுக்காதீர்கள் மாலன் அவர்களே!”  முரளிகிருட்டிணன் சின்னதுரையின் பதிவு இது.

***

“எல்லையில் காவல் காக்க மாலன் செல்ல இருப்பதாக செய்தி வருகிறது. உண்மையா?” எனக் கேட்கிறார் யோ. திருவள்ளுவர்.

***

மாலன், அர்னாப் வகையறா சங்கி பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், ஆளும் அரசுக்கு கூஜா தூக்கும் பல ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
“ தினந்தந்தி – தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு. அதிகபடியான தமிழர்களால் வாசிக்கப்படக் கூடிய தினசரி.
நேற்று : “பழி தீர்த்தது இந்தியா”.
இன்று : “பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட போது, சென்னை விமானி சிக்கினார். வீடியோ வெளியிட்டதுக்கு இந்தியா கண்டனம்”.
இவை இரண்டும் தான் தலைப்பு செய்திகள்.
இதை கொட்டை எழுத்தில் போட்டு விட்டு, பக்கத்தில் அபிநந்தனின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. வீடியோ வெளியிடக் கூடாது என்று இந்தியா சொன்னதை சொல்லிக் கொண்டே, புகைப்படங்களை வெளியிட்டு, “பார்த்தீங்களா மக்களே, இப்படி தான் பாகிஸ்தான் நம்முடைய வீரர்களை நடத்துகிறது” என்று சொல்லாமல் சொல்வது எந்த மாதிரியான நயத்தகு ஊடக தர்மம்? இதை ஊடக வேசித்தனம் என்று சொல்லாமல், வேறு எப்படி டிப்ளமேடிக்காக சொல்வது???
உள்ளே ஒரு பெட்டி செய்தியாய் ‘மசூத் அசார் ஒத்துக் கொண்டார்’ என்று ஒரு செய்தி வருகிறது. மசூத் அசார் இதற்கு முன் சொன்ன எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, இப்போது 300 – 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று சொன்ன பொய்யினை சமன் செய்ய, திடீரென என்ன மசூத் அசாரின் மீது அக்கறை? இதற்கு முன் மசூத் அசார் பேசியது அத்தனையும் பெரும் பிரசாரங்கள். பொய்கள். ஜிகாதி உளறல்கள். நேற்று சொன்னது மட்டும் சத்தியம். என்ன லாஜிக் இது?
மசூத் அசார் உருதுவில் சொன்னது பாகிஸ்தானிய உருது இதழ்களில் வெளியாகி இருக்கிறது. கூகிள் ட்ரான்ஸ்லேட் வைத்தால் ஒரளவிற்கு புரியும். அவர் சொன்னது “இந்திய விமானங்கள் அத்து மீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கின்றன” என்பது மட்டுமே. ஆனால், தினந்தந்தி மசூத் அசார் முழுமையாக ஒத்துக் கொண்டார் என்று எழுதுகிறது.
பாகிஸ்தான் இரண்டு மிக் விமானங்களை வீழ்த்தியது என்று பாகிஸ்தான் பிரதமரே பகிரங்கமாக ட்வீட் போடுகிறார். ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய சார்பு ஊடகங்கள், இந்திய நிலையினை எடுப்பதில் நமக்கு சிக்கலில்லை. ஆனால், நெடுசாண்கிடையாக இப்படி மோடிக்கு கால் கழுவி விட வேண்டிய அவசியமென்ன? பிறகு என்ன எம்-மிற்கு நடுநிலை நாளிதழ் என்கிற பெயர்? இதற்கு பேசாமல் ‘தினமலர்’ மாதிரியும், அதன் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் மாதிரியும் இருந்து விட்டு போகலாமே? ஊடகங்களில் இருக்கும் “மாமாக்கள்” என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஊரறிந்தது. ஆனால் ஊடகமே “மாமா” வேலை பார்த்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது?
ஆதித்தனார் குடும்பம் என்பதால் தான் உங்களுக்கு தமிழகத்தில் மரியாதை. அதை நீங்களே கெடுத்துக் கொண்டால், நாளை மக்களை குறை சொல்லாதீர்கள்.” என்கிறார் நரேன் ராஜகோபாலன்.
“நாட்டில் நல்லது கெட்டது என்ன நடந்தாலும் அதனால் ஒரு மயிரைக்கூட இழக்காமல் லாபம் மட்டுமே பார்க்கும் மேட்டுக்குடிகளின் கொழுப்பெடுத்த வாய்கள் இப்படித்தான் பேசும்.
பார்ப்பனீயம் என்பது மனிதக் கறியை ருசி பார்க்கும் சிந்தனை, அதனால்தான் அது ஆடு போன்ற அல்ப இறைச்சியை புசிப்பதில்லை.” என்கிறார் வில்லவன் இராமதாஸ்.
ஐந்தாண்டு கால ஆட்சி, இந்தியாவின் பேரழிவாக அமைந்துவிட்ட நிலையில், பதவி போகக்கூடும் என்ற கணிப்பில் போர் என்ற பேரழிவு ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு. இந்துத்துவ கும்பலைத் தவிர, பொது மக்கள் எவரும் போரையும் விரும்பவில்லை; மோடி நடத்தும் நாடகத்தையும் இனம் கண்டுவிட்டார்கள்.
மோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர். இந்துத்துவ கும்பலோடு, இந்த ஊதுகுழல்களையும் மக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்.
நன்றி,தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...