bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

தவறு நமது தரப்பில்தான் !

 ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டம், காக்கபோராவை சேர்ந்த 22 வயதான அகமது தர், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் கடந்த ஆண்டு சேர்ந்துள்ளான்.
சிஆர்பிஎஃப் வாகன அணிவகுப்பில், வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு தாக்குதலை நிகழ்த்தியது இவனே எனக் கூறப்படுகிறது.

வெடிபொருட்கள் துளைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் நிகழ்ந்தவுடன் ஒரு உடல் 80 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்படும் அளவுக்கு பயங்கர சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
 100 மீட்டர் சுற்றளவுக்கு மனித உடல் பாகங்கள் சிதறி கிடந்துள்ளன.

ஸ்கார்ப்பியோ எஸ்யுவி ரக காரில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை நிரப்பி வந்து தீவிரவாதி மோதியதாக தகவல் வெளியானது. ஆனால், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது செடான் ரக கார் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல, வாகனத்தை சிஆர்பிஎஃப் பேருந்தின் மீது மோதவில்லை என்றும், அருகில் சென்றதும் டெட்டனேட்டர் பயன்படுத்தி வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே பயன்படுத்தப்பட்ட வாகனம், வெடிபொருளின் தன்மை, அளவு, தாக்குதல் நிகழ்த்தப்பட்ட முறை போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக தாக்குதல் நடைபெற்ற இடத்தில், தேசிய புலனாய்வு நிறுவன குழுவினர், தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன், மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
அந்த சாலை மிகவும் கண்காணிப்பிற்குரிய சாலை.
ராணுவ நடமாட்டம் அதிகம்.
சாதாரணமாக சாலைகளில் செல்வது போல் அச்சாலையில் மக்கள் அதில் பயணிப்பது கடினம்.கடந்து செல்லும் வாகனங்கள் கடும் சோதனைக்குப்பின்னர்தான் அனுமதிக்கப்படும்.


இரண்டு  நாட்களாக பாதுகாப்பு படை வீரர்கள் நகர்வுக்காக தீவிர கண்காணிப்பில் உள்ளது.
சிலநாட்களுக்கு முன்னர்தான் அப்பகுதியில் பாரிய தாக்குதல் நடக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் .எந்த வேலையும் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர் துணை ராணுவப்படையினர் மீது அதே இடத்தில் வைத்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அப்படி பட்ட நிலையில் 350 கிலோ வெடிமருந்து காரில் ஒருவன் கொண்டுவந்தது எப்படி?
ஒருவர்க்கண்ணிலும்,சோதனையிலும் அதுவும் வீரர்கள் வரும் வேளையில் சாதாரணமாக கொண்டுவரப்பட்டது எப்படி?

சிஆர்பிஎஃப் வாகன அணிவகுப்பு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் சோதனை செய்யப்பட்ட நெடுஞ்சாலையில், தீவிரவாதி நுழைய முடிந்தது எப்படி?

 தாக்குதலுக்கு முன்னர் 10 கிலோமீட்டர் தொலைவில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களுடன் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக புல்வாமா மற்றும் அவந்திபோராவை சேர்ந்த 7 பேரை பிடித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இரவு இவர்கள் 7 பேரையும் சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 தாக்குதலுக்கான சதித் திட்டம், புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் நகரில் மிடூரா என்ற பகுதியில் தீட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த நபர் ஒருவரையும் தேடி வருகின்றனர்.

 1) 350 கிலோ வெடிபொருள் உயர் பாதுகாப்பு உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு எவ்வழியாக  வந்தது?

 2) 2500 படைவீரர்களை ஒரே நேரத்தில் நேற்று அதிகாலை நகர்த்த உத்தரவிட்டது யார்?

  3) பக்சி ஸ்டேடியம் Transit Camp க்கு 30 கிமீ அருகில் 2 நாட்கள் பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் இல்லையா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன ?


மக்களவையின் கடைசி கூட்டம் முடிந்தது.தேர்தல் அறிவிப்பு வரவிருக்கிறது.அவ்வேளையில் இப்படி ஒரு பயங்கரம்.பதட்டம்.போர்சூழல்.இதன் மூலம் தட்டி எழுப்பப்படுகிறது தேசபக்தி.

ஏதோ திரைக்கதை அமைப்புபோல் இருக்கிறது. தற்செயல்தானா?
சிலர் வேடிக்கையாக "ஒரு பீர் பாட்டிலையே புதுச்சேரியில் இருந்து கொண்டுவர முடியலையே.ராணுவ கண்காணிப்பை மீறி எப்படிங்க?என்பது வேடிக்கையான கேள்வியல்ல வேதனை வெளிப்பாடு .
இன்று மக்கள் பலரின் மனதில் எழும் கேள்வியும் அதுதான்.

 "பெருமளவிலான வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் சுற்றிக் கொண்டிருந்து எப்படி நிர்வாகத்தின் கண்களில் இருந்து தப்பியது என்பது வருத்தப்படச் செய்கிறது.
துணை ராணுவப்படையினரின் வாகன அணிவகுப்பு எதோவொரு இடத்தில் உடைக்கப்பட்டிருக்கிறது. 2500 பேர் ஒன்றாக செல்ல முடியாது. ஐ.ஈ.டி குண்டு வெடிப்பு நடைபெறுவதாக இருந்தால் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்க வேண்டும். 
 ஆனால், வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும்போது, அவை மிதமான வேகத்தில்தான் செல்லும். யாரோ வந்து வாகன அணிவகுப்பின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்னும்போது, நமது தரப்பில்தான்  எங்கோ தவறு நடைபெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது,"

இதை சொல்லியவர் நமது டீக்கடை திண்டு அரசியல் பேசுபவர் அல்ல.  ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மலிக்.

பாதுகாப்புத்துறையை ,அதன் தேவைகளை தனியாரிடம் விடுவதன் எதிர்விளைவுகளில் ஒன்றுதான் பாதுகாப்புக்குறைபாடு.

                  "இதற்கு முன்னதாக, ஐ.ஈ.டி வெடிப்பு அல்லது துப்பாக்கிச்சூடு போன்ற முறைகளில் பள்ளத்தாக்கில் படைவீரர்கள் தாக்குதல் நடைபெறும்
 இதை தவிர்ப்பதற்காக வாகன அணிவகுப்பு செல்லும் பாதைகளில் தீவிர பாதுகாப்பு சோதனை எனப்படும் ஆர்.ஓ.பி (Road opening party) மேற்கொள்ளப்படும்.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இந்த ஆர்.ஓ.பி நடைமுறையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.
ராணுவ வீரர்கள் செல்லும் பாதை முற்றிலுமாக சோதிக்கப்பட்டு பாதுகாப்பை உறுதி செய்வது இந்த ஆர்.ஓ.பி பிரிவினவரின் பணியாகும். 

படையினர் செல்லும் வழிகள், சாலைகள், பாலங்களின் ஓரங்களில் இருக்கும் கடைகள் மற்றும் கிராமங்களில், மோப்ப நாய், நவீன உபகரணங்களை பயன்படுத்தி வெடிபொருட்கள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள். 
 மேலும், கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டறிவதற்காக, அந்தப் பகுதிகளில் நிலத்தில் எதாவது குழிகள் தோண்டப்பட்டிருக்கிறதா என பல்வேறுவிதமான சோதனைகளையும் மேற்கொள்வார்கள். 

இந்த ஆர்.ஓ.பி பிரிவினரின் பணி, வெறும் சாலை மற்றும் அதையொட்டிய கிராமங்களில் சோதனைகளை மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிபடுத்துவது மட்டுமல்ல, சாலையிலிருந்து தொலைவில் இருக்கும் பகுதிகளையும் தங்கள் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டுவரும் பணியையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.
ஆனால் தற்போதைய தாக்குதலுக்கு முன்பு அப்படி கண்காணிப்பு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.அப்படி நடந்திருந்தால் இப்படி தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை." என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பி.கே மிஷ்ரா.

இந்நிலையில் இந்திய அரசுக்கு H A L இருக்கையில்அதை தவிர்த்து விட்டு , போர் விமானங்களை வெளிநாடுகளில் வாங்குவதும்,அதன் தொழில் நுட்பத்தைஅதை பராமரிக்கும் உரிமையை, அம்பானி போன்ற தனியார் கார்ப்பரேட் கையில் கொடுப்பதும் எப்படிப்பட்ட புத்திசாலித்தனம்.
 தனது கார்பரேட்கள் விசுவாசத்தைக்காட்ட நாட்டின் பாதுகாப்பையா,மக்களின் வரிப்பணத்தையா அவர்கள் கையில் ஒப்படைப்பது.?

அரசு நிர்வாகம்,குடிநீர்,ரெயில்வே,விமானம்,வங்கிகள்,காப்பீட்டுக்கழங்கள் ,பொதுத்துறை நிறுவங்கள் எல்லாமே தனியார்,கார்ப்பரேட் கள் கையில் ஒப்படைப்பது என்றால் மக்களால் வாக்களிக்கப்பட்டு இவர்களைத்தேர்ந்தெடுத்தது ஆட்சி செய்ய அனுப்புவது எதற்கு.?

மக்களவையில் நாற்காலிகளைத்தேய்த்துவிட்டு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்,ஓய்வூதியம்,மற்ற வசதிகளை அனுபவிக்கவா?
இதற்கு ஆண்டாண்டு கர்ப்பரேட்களுக்கு ஆட்சி உரிமையை குத்தகைக்கு கொடுத்து விடலாமே?

2014 ஆரம்பங்களில் மோடி தேர்தல் மேடையில் முழங்கியது இப்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளது.

"இந்தியாவில் யாருக்குமே பாதுகாப்பில்லை.குஜராத்,கேரளா,தமிழ்நாடு என்று இந்திய முழுமையுமே பாதுகாப்பின்மை,அச்சம் உள்ளது.ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பில்லை.இப்படிப்பட்ட ஆட்சியை வைத்திருக்கலாமா?தூக்கி எறியும் நேரம் வந்து விட்டது.தேர்தல் அதற்கு உங்களுக்கு வாய்ப்புத்தந்துள்ளது.அதை பயன்படுத்தி இக்கேடு கெட்ட ஆட்சியை தூக்கி எறியுங்கள்."

அதுதான் நடக்கப்போகிறதா?அதைத்தான் மக்கள் செய்யப்போகிறார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...