bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சிறுநீரை குடிப்பது.....?

ஒருவர் தனது சிறுநீரை குடிப்பது என்பதை நினைப்பதற்கு சற்று நெருடலாக இருக்கிறது. 
சிறுநீர் குடித்தால் நோய் ஏற்படுமோ, இறந்து விடுவோமா என்ற அச்சங்கள் ஒரு புறம் இருந்தால், இந்த கருத்தை கேட்பதற்கே பலருக்கு அருவருப்பாக இருக்கும் என்றாலும், சிலர் தங்களது சிறுநீரை குடிக்கின்றனர், 
அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் செய்கின்றனர்.
உதாரணமாக, நேவீங்கடினில் வசிக்கும் 33 வயது யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ, தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறுகிரார். அவர் ஹஷிமோட்டோவின் தைராய்டு நோய் மற்றும் நீண்ட காலமாக வலியால் பாதிக்கப்பட்டிருந்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது சிறுநீரை குடிக்க ஆரம்பித்ததாக தெரிவித்தார். சிறுநீர் குடிக்கும் பழக்கத்திற்கு 'யூரோஃபோபியா', 'சிறுநீர் சிகிச்சை' என்று கூறப்படுகிறது.

"சிறுநீரைக் குடித்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மீட்டெடுப்பதாகவும், ஆரோக்கியத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு நன்மையளிக்கும் என்று கேள்விப்பட்டேன். அதனால் அதை முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன்" என்று அவர் கூறுகிறார்.
அதன் பிறகு, சிறுநீர் குடிக்க ஆரம்பித்த கெலீ ஓக்லீ, இப்போது தனது சிறுநீரில் நனைக்கப்பட்ட பருத்தித் துணியால் தனது முகத்தில் ஒத்தடம் கொடுப்பதால் முகச் சருமம் 'பளபளப்பாக' இருப்பதாக நம்புகிறார்.

சிறுநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 46 வயது லீஹ் சாம்சன், 'த சன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.

120 கிலோ எடையாக இருந்த அவரின் எடை குறைப்புக்கு சிறுநீர் அருந்துவது உதவியாக இருக்கும் என்று கேள்விபட்டபோது, முதலில் ஆச்சரியமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

"சிறுநீர் சிகிச்சை தொடர்பான யூடியூப் இணைப்பு ஒன்றை என் நண்பர் அனுப்பினார், அதை பார்த்த பிறகு, ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் சிறுநீரை குடித்தேன். அதனால் என் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பதை உணர்ந்து, உட்கொள்ளும் உணவில் இருந்து சோடியத்தை குறைக்க முடிவு செய்தேன்.
இப்போது தினசரி காலையில் தனது சிறுநீரை குடிப்பதுடன், பல் துலக்கியவுடன் சிறுநீர் கொண்டு வாயை கொப்பளிக்கிறார் லீஹ். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. கண்ணுக்கு சொட்டு மருந்தாகவும் பயன்படுத்துகிறாராம். ஆனால் மருத்துவர்கள் இது அபத்தமானது, ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.
ஆனால், 39 வயது ஃபேத் கைண்டர் இந்த எச்சரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு, சிறுநீரை பயன்படுத்துகிறார். அதை சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார்.
அபர் தீனை சேர்ந்த ஃபேத், தற்போது போர்ச்சுகல் நாட்டில் வாழ்கிறார். கொசுக் கடியால் ஒவ்வாமை ஏற்பட்டு கண்களில் வீக்கம் ஏற்பட்ட பிறகு தனது சிறுநீரை அவர் குடிக்கத் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.
ஆரம்பத்தில் அது சற்று கடினமானதாக தோன்றினாலும், மூன்றே நாட்களில் ஒவ்வாமை சரியானதாக அவர் கூறுகிறார்.

"அதில் இருந்து, தினசரி காலையில் எனது சிறுநீரை குடிக்கிறேன். இப்போது முன்பை விட கொசுக்கடியால் நான் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இப்போது பூச்சிகள் ஏதேனும் என்னைக் கடித்தால் வீக்கமோ அல்லது அரிப்போ ஏற்படுவதில்லை என்று ஃபேத் கூறுகிறார்.
ஜூன் மாதம், பெயர் தெரிவிக்காமல் ஒரு பெண் வெளியிட்டிருந்த காணொளிக் காட்சியில், அவர் தனது செல்லப்பிராணியான நாயின் சிறுநீரை குடித்துக்கொண்டிருப்பதை பதிவிட்டிருந்தார்.
சிறுநீரை குடித்தப் பிறகு பேசிய அவர், "என் நாயின் சிறுநீரை குடிக்கத் தொடங்கியபோது, முதலில் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது, அச்சமாகவும், வருத்தமாகவும் இருந்தது" என்று கூறியிருந்தார்.

இப்படி பலர் சிறுநீர் குடிப்பது ஆரோக்கியமானது என்று கூறினாலும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல; கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப்பொருளான சிறுநீரை மீண்டும் உடலுக்குள் அனுப்புவது சரியல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர் ஜுபைர் அகமதிடம் பிபிசி பேசியது. அவரது கருத்தின்படி, "பொதுவாக சிறுநீரகத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அது உடலில் இருக்கும்போது எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் உடலில் இருந்து வெளியேறிய சிறுநீர் நச்சாக மாறிவிடும். அதை மீண்டும் உடலில் ஏற்றிக் கொள்வது உடல்ரீதியிலான பிரச்சனைகளை அதிகரித்துவிடும்."
தொற்றுநோய் ஏற்படுவதற்கான கூறுகள் சிறுநீரில் இருக்கின்றன. யூரோஃபோபியாவால் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் டாக்டர் அகமது.
உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்தான் சிறுநீராக உடலில் இருந்து வெளியேறுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"உடலில் இதுபோன்ற பொருட்களை சேர்ப்பதால் ஆரோக்கியம் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை, இருப்பினும், குறைந்த அளவில் சிறுநீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்லமுடியாது" என்கிறார் அவர்.
சிறுநீர் குடிப்பதால், உடலுக்கு தீமை ஏற்படுத்தும் ஆபத்தான கழிவு பொருட்கள் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுவதாக எச்சரிக்கிறார் மருத்துவர் ஏண்ட்ரூ தார்ன்பர்.
"சிறுநீரகம் தான் ரத்தத்தை வடிகட்டி, உப்பு, கனிமங்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை நீக்கி சிறுநீராக வெளியேற்றுகிறது. சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால்தான் செயற்கை முறையில் ரத்த சுத்திகரிப்பு (டயலிசஸ்) செய்யப்படுகிறது."
"ஆரோக்கியமான உடலின் சிறுநீரில் 95 சதவிகிதம் தண்ணீர் மற்றும் ஐந்து சதவிகித கழிவு உள்ளது. கழிவில் பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கியுள்ளது. இவை உடலில் அதிகமானால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்."
சிறுநீர் குடிப்பதால் குடலும் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என்று மருத்துவர் தார்னர் கூறுகிறார்.
மருத்தவர்கள் மட்டுமல்ல, ஊட்டச்சத்து நிபுணர்களும், உணவு நிபுணர்களும்கூட சிறுநீர் குடிப்பது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டச்சத்து நிபுணர் கெர்ரி ஃபில்ட்னெஸும் இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறார். சிறுநீரில் 95 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால், அது ஒரு பானமாக குடிப்பதற்கு ஏற்றது என்ற வாதமும் மூடநம்பிக்கை என்று அவர் கூறுகிறார்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? 
அதற்காக சிறுநீர் குடிப்பதைவிட, தண்ணீர் அல்லது மூலிகை தேநீர் குடிக்கலாம் 
என்று ஊட்டச்சத்து நிபுணர் கெர்ரி ஃபில்ட்னெஸ் அறிவுறுத்துகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...