bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 15 அக்டோபர், 2018

கரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிடுங்கள்..

அதிகம் புரத சத்துப் பெறுங்கள்!
இந்த புகைப்படத்தைப் பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும். 
ஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? 
அச்சம் வேண்டாம்… 
எல்லா ரொட்டிகளும் இந்த வகையைச் சேர்ந்ததில்லை. 
இந்த 'ஸ்பெஷல்' ரொட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சாமன்கள் வைத்திருக்கும் அறையிலும், அசுத்தமான இடங்களிலும் சுற்றும் கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அருவருப்பாகத் தோன்றும் நிலையில், எப்படி அதை சாப்பிடுவது என்று தோன்றுகிறதா? சரி இந்த சிந்தனை எப்படி தோன்றியது?
ஊட்டச்சத்து குறைபாடு, உலகில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கான தீர்வாக விலங்குகளின் புரதம் இருக்குமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் குழு இதை கண்டுபிடித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2050ஆம் ஆண்டுவாக்கில், உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக (970 கோடி) இருக்கும்.
நமது அன்றாட உணவில் பூச்சிகளை சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மக்களின் புரதச்சத்து தேவைக்கு பூச்சிகளின் புரதங்கள், சுலபமான மாற்றாக இருக்கும் என்பதோடு அவை கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கும்.
தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் மக்களின் உணவின் ஒரு பகுதியாக பூச்சிகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
ஆனால் புகைப்படத்தில் காணப்படும் ரொட்டியில் நமது சமையலறையில் வழக்கமாக காணப்படும் கரப்பான் பூச்சியால் செய்யப்பட்டதில்லை. இது வேறொரு வகை கரப்பான் பூச்சிகளால் செய்யப்பட்டது. வட ஆஃப்பிரிக்காவில் காணப்படும், வெட்டுக்கிளி கரப்பான் (Locust Cockroach, Nophita cinera) வகையைச் சேர்ந்த பூச்சியால் செய்யப்பட்ட ரொட்டி இது.

எளிதாக வளரக்கூடியவை என்பதோடு, இனப்பெருக்கமும் துரிதகதியில் நடைபெறும் என்பதும் வெட்டுக்கிளி கரப்பான் பூச்சியின் சிறப்பம்சம்.
ஆனால் உலகில் ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள் இருக்கும் நிலையில், கரப்பான் பூச்சியை மட்டும் சாப்பிடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
கேள்வி எழுந்தால் அதற்கான பதிலும் உண்டல்லவா? கரப்பானில் இருக்கும் புரதம், சிவப்பு இறைச்சி எனப்படும் மாட்டு இறைச்சியில் இருக்கும் புரதத்தைவிட சிறந்தது. சிவப்பு இறைச்சியில் 50 சதவிகித புரதம் இருக்கிறது. ஆனால், கரப்பானில் 70 சதவிகிதம் புரதம் இருக்கிறது.
லட்சக்கணக்கான ஆண்டுகளாக உலகில் இருக்கும் கரப்பான்கள், முழு பரிணாம வளர்ச்சியையும் கடந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது.
தெற்கு பிரேசிலில் உள்ள ஃபெடரல் யுனிவர்சிடி ஆஃப் ரியோ கிராண்டே (Federal University of Rio Grande) பல்கழைகத்தில் உணவுத்துறை பொறியாளராக பணிபுரியும் ஆந்த்ரீசா ஜெந்த்ஜென் இவ்வாறு கூறுகிறார்: "வளிமண்டலத்தில் பொருந்துவதற்கும், லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்து பூமியில் இருப்பதற்கும் தேவையான சில சிறப்பு குணங்களைப் பெற்றுள்ளவை கரப்பான்கள்."
லாரென் மெனேகன் என்ற உணவு பொறியியலாளருடன் இணைந்து பணியாற்றிய ஜெந்த்ஜென், கரப்பான் பூச்சிகளை உலர்த்தி, அதை மாவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். புரதச்சத்து மிகுந்த இந்த மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 51 அமெரிக்க டாலர்கள் (அதாவது, 3,700 ரூபாய்).

ஆனால் ரொட்டி தயாரிப்பதற்கு கரப்பன் பூச்சி மாவின் 10% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதி உள்ள மாவு வழக்கமாக நாம் பயன்படுத்தும் கோதுமை மாவுதான்.
பிபிசி செய்தியாளரிடம் பேசிய ஜெந்த்ஜென், "ஓரளவு கரப்பன் பூச்சி மாவை கோதுமை மாவில் கலந்ததும், அந்த மாவில் 133% புரதம் அதிகரித்திருந்தது" என்று சொன்னார்.
வீட்டில் வழக்கமாக 100 கிராம் மாவில் தயாரிக்கும் ரொட்டியில் 9.7 கிராம் புரதம் இருக்கும். அத்துடன் ஒப்பிடும்போது, சிறிதளவு கரப்பான் மாவு கலந்த அதே அளவு மாவில் புரதம் 22.6 கிராமாக அதிகரித்துவிட்டது.
"இந்த கலவையில் உணவு தயாரிக்கும்போது, கொழுப்புச் சத்து அல்லது எண்ணெய் சத்து 68% குறைகிறது" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புரதம் அதிகம், கொழுப்பு குறைவு என்பதெல்லாம் சரி, சுவை எப்படி இருக்கும்?
சாதாரண மாவில் தயாரிக்கப்பட்ட உணவைப் போன்ற சுவையே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிலளிக்கிறார்கள்.

"சுவை, மணம், நிறம், தரம் என நன்றாக பரிசோதித்தோம். சாதாரண ரொட்டிக்கும் இதற்கும் எந்தவித வித்தியாசமுமே இல்லை. சிலர், இதில் வேர்க்கடலை வாசனை இருப்பதாக தோன்றுவதாக கருத்துத் தெரிவித்தனர்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்கள் தங்கள் உணவில் புழு-பூச்சிகளை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பது தொடர்பான தகவல்களை பற்றி ஊட்டச்சத்துத் துறை பேராசிரியர் இனோ வியிராவிடம் கேட்டறிந்தோம். "வெட்டுக்கிளி, குளவி, அந்துப்பூட்டிகள், நாவல் பூச்சிகள், எறும்புகள், பட்டாம்பூச்சி, பட்டு புழுக்கள், தேள்கள் என பல வகை புழு பூச்சிகளை நாம் உட்கொள்ளலாம், அவற்றை நமது உணவின் ஒரு பகுதியாக மாற்றலாம். அதில் தவறேதும் இல்லை" என்று அவர் சொல்கிறார்.
"புழு-பூச்சிகளை உணவாக ஏற்க நமக்கு தயக்கம் இருப்பதற்கு காரணம் நமது கலாசார சிக்கல்கள் தான்" என்கிறார் அவர்.
"ஒரு கிலோ மாமிசத்தை தயாரிக்க 250 சதுர கிலோ மீட்டர் நிலம் தேவை. 
இதுவே ஒரு கிலோ பூச்சி மாமிசம் வேண்டுமானால் அதற்கு 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு போதுமானது. அது மட்டுமல்ல, நீரின் தேவையும் குறைகிறது. 

ஏனெனில் ஒரு கிலோ பூச்சி மாமிசத்திற்கு தோராயமாக ஆயிரம் லிட்டர் நீர் தேவை என்று சொன்னால், அதுவே ஒரு கிலோ இறைச்சிக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை" என்று சொல்கிறார் பேராசிரியர் இனோ.
மேலும், சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுக்களையும் ஏற்படுத்தாதவை பூச்சி உணவுகள். உணவாக பயன்படுத்தப்படும் பூச்சிகள் (95 இனங்கள்), பிரேசிலில் காணப்படுவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உணவில் பூச்சி வகைகளை சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிரது. உலகின் இரண்டு கோடி மக்களின் உணவில் பூச்சியும் ஒரு பகுதியாகி இருப்பதாக ஐ.நாவின் தரவுகள் கூறுகின்றன.
பூச்சிகளை சேர்த்து செய்யும் கேக், ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் எண்ணெய் தயாரிக்கும் பணியில் லாரன் மெனெகன் மற்றும் ஜெந்த்ஜென் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தாலும், கரப்பான் பூச்சி மாவு கலந்த ரொட்டி வகைகள் இன்னும் பிரேசிலில் சில்லறை விற்பனைக்கு வரவில்லை. பூச்சிகளை உண்பதற்கு இதுவரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை, ஆனால் விலங்குகளுக்கு பூச்சி கலக்கப்பட்ட உணவுகளை கொடுக்கலாம்.

ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் பூச்சிகளை உண்பதற்கு ஊக்கமளிக்கின்றன. ஸ்பெயினின் கரேஃபோர் சூப்பர்மார்கெட்டில் வெட்டுக்கிளி மற்றும் லார்வா பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரிட்டனில் வறுக்கப்பட்ட மற்றும் பொடியாக்கப்பட்ட பூச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
குளோபல் மார்கெடிங் இன்சைட்ஸ் என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூச்சிகளின் வியாபாரம் சுமார் 70 கோடி அமெரிக்க டாலர்களை எட்டிவிடும் என்று கூறுகிறது.
சரி, கரப்பான் பூச்சி மாவு சேர்த்து செய்யப்பட்ட கேக் வேண்டுமா? அல்லது திண்பண்டம் வேண்டுமா? சொல்லுங்கள்…
கட்டுரை உதவி:பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...