ஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி
இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இறக்குமதி குறைவாகவும், ஏற்றுமதி அதிகமாகவும் இருக்க வேண்டும்.
இதுவொரு முக்கியமான அம்சம்.
ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக்கான இந்தியாவின் ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து இருப்பதுடன், இறக்குமதியும் பலமடங்கு உயர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியா மொத்தம் 27.95 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இது சென்ற ஆண்டின் செப்டம்பர் மாத ஏற்றுமதி மதிப்பை விட 2.15 சதவிகிதம் குறைவாகும். அதேநேரம், செப்டம்பர் மாத இறக்குமதி 10.45 சதவிகிதம் அதிகரித்து 41.9 பில்லியன் டாலராக உள்ளது.
தெளிவாகக் குறிப்பிட வேண்டுமானால், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இறக்குமதி 16.16 சதவிகிதம் அதிகரித்துள்ளது.இதன்மூலம் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம்- அல்லது வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 6 மாதங்களில் மட்டும் 943.2 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
குறிப்பாக செப்டம்பரில் மட்டும் 139.8 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இதே பணவீக்கம் 3.14 சதவிகிதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலை செப்டம்பர் மாதத்தில் 0.21 சதவிகிதம் குறைந்துள்ளது.
குறிப்பாக, பருப்பு வகைகளின் விலை சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 18.14 சதவிகிதம் குறைந்துள்ளது.
மேலும், காய்கறிகளின் விலையும் 3.83 சதவிகிதம் சரிந்துள்ளது.
வெங்காயத்தின் விலை 25.23 சதவிகிதமும், பழங்களின் விலை 7.35 சதவிகிதமும் குறைந்துள்ளது.
உருளைக்கிழங்கு விலையும் (80.13 சதவிகிதம்), கச்சா பெட்ரோலியத்தின் விலையும் (47.83 சதவிகிதம்) மட்டுமே உயர்ந்துள்ளன.
இவற்றில் எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கான பிரிவில், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவின் விலை 33.51 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை 17.21 சதவிகிதமும், டீசல் விலை 22.18 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
உற்பத்திப் பொருட்களுக்கான பிரிவில் சர்க்கரை விலை 12.91 சதவிகிதம் குறைந்துள்ள அதேவேளையில், உலோகங்களின் விலை 12.78 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
எனினும், மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலத்தில் இருந்ததை (3.14 சதவிகிதம்) விடவும் உயர்ந்து, நடப்பு நிதியாண்டில் 5.13 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக