bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 10 நவம்பர், 2018

அரசியல் சாசனத்திற்கு எதிரானது

தேசிய மருத்துவ ஆணைய மசோதா. 
                                                                                                                                                                                              -பேரா நா.மணி
நம் நாட்டில் 235 மருத்துவக் கல்லூரிகளும், அதில் 31,727 இடங்களும் உள்ளன. இவற்றில் படித்து பட்டம் பெற்று பதிவு செய்துள்ள மருத்துவர்கள் இதுவரை 9.29 லட்சம் பேர். உலகில் எந்தவொரு நாட்டோடு ஒப்பிடும்போதும் நம் நாட்டில் மருத்துவர்கள் அதிகமாகவே உள்ளனர். 

ஆனால் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி கணக்கிட்டால் இதுமிக குறைவாகவே உள்ளது. ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையைக் கூட நாம் எட்டவில்லை. ஆயிரம் பேர்களுக்கு 0.8 மருத்துவர்கள் என்பதே நம் நிலைமை. 
பிரேசில், ரஷ்யா, சீனா, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளோடு ஒப்பிடும்போது கூட குறைவான மருத்துவர்கள் விகிதத்தையே நாம் பெற்று உள்ளோம். மருத்துவர்கள் மட்டுமல்லாது, செவிலியர்கள் எண்ணிக்கை, படுக்கை வசதி உள்ள மருத்துவமனைகள் எண்ணிக்கை, மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை, பேறுகால மரணம், சராசரி ஆயுட்காலம் என எல்லாக் குறியீடுகளுடன் ஒப்பிடும்போதும் இந்திய நிலைமைகள் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தையே பெற்றுள்ளது. 

இந்தியா ஒரே நாடு என்றாலும், மருத்துவ சேவைகளின் தன்மை ஒரே மாதிரியாக இல்லை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மருத்துவ சேவை, வட ஐரோப்பா நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பெற்று உள்ளது. 

இங்கும், தனியார் மருத்துவக் கல்வியும் சேவையும் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் மிக மோசமாக உள்ளன. மருத்துவ சேவை மாநிலப் பட்டியலில் இருப்பதால் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அதைப் போன்றே மருத்துவக் கல்வியும் வேறுபடுகிறது. இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக் கல்வி இடங்களில் 65 விழுக்காடு தென் மாநிலங்களில் உள்ளன.மருத்துவ கல்வியைப் பொறுத்தமட்டில், அது அரசியல் சாசனப்படி பொதுப் பட்டியலில் இருக்கிறது. 

1934 ஆம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலும் பின்னர் 1956 ஆம் ஆண்டு மருத்துவக் கவுன்சில் சட்டப்படி திருத்தி அமைக்கப்பட்ட அமைப்பும் மருத்துவக் கல்வியை நிர்வகித்து வருகிறது. இதில் மொத்தம் 130 பேர் அங்கம் வகிக்கின்றனர். 

இதில் 23 விழுக்காட்டினர், மருத்துவப் பல்கலைக்கழகங்களில் இருந்தும், 17 விழுக்காடு பதிவு பெற்ற மருத்துவர்களில் இருந்தும், 6 விழுக்காடு மத்திய அரசின் பரிந்துரையின் படியும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் பணிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டிருக்கிறது:இளநிலை மருத்துவக் கல்வியின் தரத்தை ஒரேமாதிரி உருவாக்கல் மற்றும் பராமரித்தல், முதுநிலை மருத்துவப்படிப்பை ஒழுங்குபடுத்துதல், உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு அங்கீகாரம் அளித்தல், மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்வி, தகுதியுடைய மருத்துவர்களை பதிவு செய்தல், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்குதல் ஆகியனவாகும்.இந்தப் பணிகளை எந்த அளவுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் திறம்படச் செய்தது? 

அதில் எத்தகையவர்கள் இடம்பெற முடிந்தது என்பதெல்லாம் வருத்தம் தரத்தக்க விசயங்களே. நல்ல நேர்மையான மருத்துவர்கள், வசதி வாய்ப்புகள் இல்லாத மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், அரசுப் பல்கலைக்கழக மருத்துவர்கள், இதில் இடம் பெற முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்திய மருத்துவக் கவுன்சில் லஞ்ச ஊழல் முறைகேடுகள் நிறைந்து இருந்தது, 2010 ஆம் ஆண்டு கேத்தன் தேசாய் மூலம் தெரியவந்தது. 

அவர் வாங்கிய லஞ்சத்தின் அளவு, அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட நகை, பணம் ஆகியவற்றின் அளவைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. 

இதனை சரி செய்கிறேன் என்ற பெயரில் மத்திய அரசு இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்து விட்டு அதனிடத்தில் ஆளுநர் குழுவை நியமித்தது. மருத்துவக் கல்வி இந்திய அரசியல் சாசனப்படி பொதுப் பட்டியலில் இருப்பதால், அதனை மத்திய அரசு தானடித்த மூப்பாக கலைக்கக் கூடாது.

அது கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாநில அரசுகளுக்கும் விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின. மத்திய அரசு தற்காலிகமாக நியமித்த எழுவர் குழுவோ, பிறகு மீண்டும் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலோ நிலைமைகளை சரி செய்யவில்லை என்பது நிதர்சனமானது. 

குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவும், உச்சநீதிமன்றமும் இந்திய மருத்துவக் கவுன்சிலை திருத்தி அமைக்கும் ஆலோசனைகளை முன் வைத்தது. 

இதனையே வாய்ப்பாகக் கருதி மத்திய அரசு இந்திய மருத்துவக் கவுன்சிலை முடக்கி வைத்துவிட்டு ஒரு ஆளுநர் குழுவை மீண்டும் நியமித்து உள்ளது. அத்தோடு மத்திய திட்டக் கமிசனைக் கலைத்தது போல இதையும் கலைத்துவிட்டு புதிய அமைப்பு ஒன்றினை “தேசிய மருத்துவ ஆணையம்” என்ற பெயரில் உருவாக்க முயற்சித்து வருகிறது.

 ஒரு மசோதா ஒன்றை தயாரித்து, அமைச்சரவை ஒப்புதலும் பெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் என்பது ஏற்கனவே இருந்த இந்திய மருத்துவக் கவுன்சில் புரிந்த ஊழல்கள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. மருத்துவக் கவுன்சிலின் உறுப்பினர்கள் தேர்வு முறையில் பொறுப்புக்கு வந்தனர். ஆனால் தேசிய  மருத்துவ ஆணையத்திற்கு இருக்கும் இடங்கள் 25. 

இவற்றில், பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் பதவி வழி நியமிக்கப்படுபவை (நுஒ-டிககiஉiடி). மீதமுள்ள இடங்களில் மத்திய அரசே ஆட்களை நியமனம் செய்யும். பொதுப் பட்டியலில் உள்ள மருத்துவக் கல்வியை நிர்வகிக்கும் பொறுப்பில் மாநில அரசுகளுக்கு துளியும் பங்கு இல்லை. 

மாநில அரசுகளுக்காக உருவாக்கப்பட்டிருப்பது ஓர் ஆலோசனை குழு மட்டுமே. மாநில அரசுகளின் தேவைகள், குறைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை இந்தக் குழுவில் மட்டுமே முன்வைக்க முடியும். இதனை தேசிய மருத்துவ கமிஷன் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது.

 ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மருத்துவ கவுன்சில் மேற்கொண்டு வந்த பணிகளோடு புதிதாக அமைக்கப்படவிருக்கும் தேசிய மருத்துவ ஆணையம் சில கூடுதல் பணிகளையும் மேற்கொள்ளப்போகிறது. 

அவற்றில் முக்கியமானவை: இந்த ஆணையம் இளநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்த இருக்கிறது.
அத்தோடு சேர்க்கைக்கான கலந்தாய்வையும் அதுவே நடத்திட உள்ளது. மருத்துவ படிப்பு முடிந்ததும் மருத்துவ தொழில் செய்யவும் நாடு முழுவதும் மற்றுமொரு ஒரே மாதிரியான தேர்வை நடத்தும். 

மருத்துவக் கல்வி பயில முயலும் மாணவர்களுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை, தரம் என்ற பெயரில் திணிக்கும் புதிய ஆணையம் மற்றொருபுறம் பெரும் கேலிக்கூத்தை நிகழ்த்த உள்ளது. 

இந்தியாவில் நடைமுறையில் உள்ள மாற்று மருத்துவம் கையாளும் பிரிவினர் ஓர் இணைப்பு வகுப்பை நடத்தி (க்ஷசனைபந உடிரசளந) அவர்கள் அனைவரையும் ஆங்கில மருந்துகளை பரிந்துரைக்க அங்கீகாரம் வழங்கப் போகிறது. இளநிலை, முதுநிலை மருத்துவம் படித்து டாக்டராக பணிபுரிய வேண்டும் எனில் மொத்தம் நான்கு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும். 

அதே சமயம் யுனானி உள்ளிட்ட மருத்துவம் செய்பவர்களுக்கு இணைப்பு வகுப்பு மட்டும் போதும். 
இது என்ன மாதிரியான அறிவியல் பூர்வமான அணுகுமுறை? 
இது நடைமுறைக்கு வந்தால் மனித ஆரோக்கியத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்கும்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நாற்பது விழுக்காடு இடங்களுக்கான கட்டணங்களை இந்த புதிய ஆணையம் தீர்மானிக்கும். தமிழ் நாட்டில் 65 விழுக்காடு இடங்கள் இப்போது அரசு ஒதுக்கீட்டில் அரசு நிர்ணயித்த கட்டணங்கள் படி தீர்மானம் செய்யப்படுகிறது. 
புதிய ஆணையம் வந்து விட்டால் நாற்பது விழுக்காடு இடங்களில் மட்டுமே தமிழ்நாடு அரசு கட்டணங்களை தீர்மானிக்க இயலும். 
மத்திய, மாநில அரசுகள் கல்வி அளிக்கும் பொறுப்பில் இருந்து பின்வாங்கி தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல்கிப் பெருகும் இந்தக் காலகட்டத்தில் தனியாரின் லாப வேட்டைக்கு இது மிகவும் தோதாக அமையும். தனியாரைக் கட்டுப்படுத்தவே நீட் தேர்வு என்று சொல்லிக் கொண்ட மத்திய அரசு இப்போது கட்டணக் கொள்ளையை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப் போகிறது. 

ஆதலால் நாடு முழுவதும் மருத்துவக்கல்வி தனியார்மயம் முடுக்கி விடப்படும்.இந்தியா ஓர் பரந்து விரிந்த மாநிலங்களின் ஒன்றியம். 
தட்ப வெப்பம், பூகோள ரீதியாக அமைப்பு முறை, அதனை ஒட்டிய பயிர் முறைமைகள், உணவுப் பழக்கம், கலாச்சாரம் அதனைச் சார்ந்து உருவாகும் நோய்கள் எல்லாம் வெவ்வேறான தன்மை கொண்டவை. எனவே மாநிலங்களில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் இதற்கு ஏற்றவாறு பாடத்திட்டம் தயார் செய்து நோய்களையும் நோயாளிகளையும் கையாளும் முறைகள் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவர்கள் அந்தந்த மாநிலங்களில் அந்தந்தப் பகுதிகளில்.
பணிபுரிவதும்  இதற்கு நல்ல பலனை தந்து வருகிறது. 


மண்ணின் மகத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் ஆங்கில மருத்துவக் கல்வியில் மாத்திரம் இந்த பன்முக தன்மைக்கு எதிராக நீட் போன்ற தேர்வுகளை பொதுமைப்படுத்துகிறார்கள்.

 எனவே நீட் தேர்வு நாட்டின் கூட்டாட்சி, நெறிமுறை, சமூக நீதி, சமவாய்ப்பு, சமநீதி ஆகியவற்றுக்கு மட்டுமே எதிராக இல்லை. 


மருத்துவ சேவைக்கே எதிராக முடியும்.மருத்துவ முறை என்பது அனைத்து மருத்துவ முறைகளுக்கும் ஒன்றாகவே இருக்க முடியும். மாற்று மருத்துவம் என்று ஒன்று இருக்க வாய்ப்பு இல்லை. மாற்று மருத்துவம் என்ற சொல்லாடலே தவறானது. ஓர் மருத்துவ முறை அறிவியல் பூர்வமாக பரிசோதனை செய்யப்பட்டு, தொழில் முறை ஆய்வுகள் வழியாக நிரூபிக்கப்பட வேண்டும். 
இந்த நிபந்தனை சித்தா ஆயுர்வேதம், யுனானி என்று அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும். 

இப்போது மாற்று மருத்துவம் என சொல்லப்படுகிற அனைத்தும் இவ்வாறு செழுமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இத்தகைய நிகழ்முறைகளுக்குள் ஆங்கில மருத்துவத்தோடு இதனை ஒருங்கிணைக்கப் போகிறது இவ்வாணையம். இதற்கான கூட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என்பதெல்லாம் பல்வேறு சிக்கல்களையும் குழப்பத்தையும் உருவாக்கும். 

இந்த குழப்பம் விளைவிக்கும் பணியையும் வரவிருக்கும் தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொள்ளவிருக்கிறது.உலகில் பல நாடுகளில் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

ஆனால் ஒரே அமைப்பு இளநிலை, முதுநிலை ஆகியவற்றிற்கு தனித்தனி வாரியங்கள் அமைத்து அதன் மூலம் தேர்வுகள் நடத்தத் திட்டமிடவில்லை. இதற்கான தேவை என்ன என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. தேவையற்ற நெருக்கடிகளுக்குள் இவை தள்ளும் என்பது மட்டும் புரிகிறது. 

இதுவும் வரவிருக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் கைங்கர்யம்.
செய்ய வேண்டியது என்ன?
இந்திய நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. 
செவிலியர்கள் இல்லை. 
படுக்கை வசதிகள் இல்லை. 
கிராமப்புற சேவை போதுமான அளவு இல்லை. 
பொது சுகாதாரத்தை வலுப்படுத்தும் சீரான கொள்கை இல்லை. 
நோய் தடுப்பு முறைகளில் கவனம் இல்லை. 
மருத்துவத் தொழிலின் அறம் சார்ந்த செயல்பாடுகளை அபிவிருத்தி செய்யும் வழிவகைகள் இல்லை. 

மருத்துவக் கல்வி மற்றும் சேவை என்றாலே அது மருத்துவர்கள் சார்ந்தது என்று நம் பொதுப் புத்தியில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான ஈடுபாடும் விழிப்புணர்வு உள்ள ஒவ்வொருவரும் பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. 
சமூக விஞ்ஞானிகள் ஆரோக்கியம் தொடர்பான நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆரோக்கியம் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற பொருளாதார வல்லுனர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இதில் பங்களிப்பு செய்ய இயலும். அரசு மக்கள் மருத்துவத் தொழில் புரிவோர் இணைந்த முக்கூட்டு மருத்துவக் கல்வியை நன்கு திட்டமிட முடியும். 

வழிகாட்ட முடியும். மருத்துவ சேவைகள் மிகச் சிறந்த முறையில் வழங்கப்படும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் கூட மருத்துவக் கவுன்சிலின் 50 விழுக்காடு இடங்கள் சாமானிய மக்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் மட்டும் ஏன் மருத்துவத்தில் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகள்?  எழுபது விழுக்காடு மருத்துவர்கள் நகர்ப்புறங்களில் மட்டுமே சேவை செய்கிறார்களே! 

கிராமப்புறங்களில் முழுமையான மருத்துவ சேவைக்கு என்னதான் வழி? 
மாநிலம்/ பிராந்தியம் சார்ந்த நோய்கள் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு தான் என்ன? அனைவருக்கும் ஆரோக்கியம் ஆரோக்கியம் ஓர் அடிப்படை உரிமையாக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவக் கல்லூரிகள் உருவாக தடைகள் என்ன? 
முதுநிலை மருத்துவம் ஏன் பலருக்கு எட்டாக் கனியாக இருக்கிறது? 
இந்தக் கேள்விக்கு விடைகள் வேண்டும். தெளிவு வேண்டும். 

ஆனால் புதிதாக அமைக்கப்பட உள்ள தேசிய மருத்துவ ஆணையம் இதற்கெல்லாம் விடையளிக்க இயலாது. 
காரணம் என்ன?
இந்த மசோதாவை உருவாக்கியது நிதிஆயோக் அமைப்பு. 
2016 ஆம் ஆண்டிலேயே இந்த வரைவு மசோதாவை அது தயாரித்து விட்டது. 

உச்ச நீதிமன்றமோ நாடாளுமன்றமோ இந்திய மருத்துவக் கவுன்சிலை மாற்றி அமைக்க பரிந்துரை செய்யாமல் இருந்தால் கூட இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டிருக்கும். 

அதனிடத்தில் தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு நிதிஆயோக் என்ற அமைப்பையே உருவாக்கியதே இத்தகைய செயல்திட்டங்களை நிறைவேற்றவே. ஐஎம்எப், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, இந்திய கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றை மாற்றி அமைப்பதே நிதிஆயோக்கின் அடிப்படை பணி. எனவே தான் மாற்றத்திற்கான மசோதா என்று கூறப்படும் தேசிய மருத்துவ ஆணையம் நாம் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை. 
இந்த மசோதாவின் சாரம் மத்தியில் அதிகாரக் குவியலை ஏற்படுத்தி கூட்டாட்சியை சீர்குலைப்பது, தனியார்மயத்தை மருத்துவக் கல்வியில் துரிதப்படுத்துவது, சமூக நீதி சீர் குறைப்பது.
இந்திய மக்கள், மக்களின் நலம் நாடும் அரசியல் கட்சிகள் மனசாட்சி உள்ள சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் என்ன செய்ய வேண்டும்?

l மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்தது தவறு என்று கூட சுட்டிக்காட்டப்பட வேண்டும். நீட் தேர்வை நிரந்தரம் ஆக்கும் முயற்சிகள் மருத்துவம் பயின்ற பின்னர் மருத்துவம் செய்ய தனித் தேர்வு ஆகியவை கைவிடப்பட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு நிலுவையில் உள்ள தமிழ் நாட்டின் சட்ட மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.
l மருத்துவக் கல்வி தனியார்மயத்தை ஊக்குவித்தல், தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணக் கொள்ளைக்கு அனுமதி ஆகியவை கைவிடப்பட வேண்டும்.
l ஆங்கில மருந்துகளை எந்தவித பயிற்சியும் அற்றவர்கள் கையாளும் ஆபத்து நீக்கப்பட வேண்டும்.
l மருத்துவக்கல்வி அளிக்கும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கும் போக்கும், மாநில அரசுகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லாத கையறு நிலையும் களையப்பட வேண்டும்.
இவை நடைபெற வேண்டுமெனில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும். மாநில அரசுகளையும் ‘‘அனைவருக்கும் ஆரோக்கியம்’’ ‘‘ஆரோக்கியம் ஓர் அடிப்படை உரிமை’’ என்பதற்காக செயல்பட்டு வருவோரை கலந்து ஆலோசித்து கூட்டாட்சி நெறிமுறைக்கு ஒப்ப இந்திய மருத்துவக் கவுன்சிலை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.

கட்டுரையாளர் : முன்னாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...