bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 22 நவம்பர், 2018

இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசஸர்!

அசத்திய  சென்னை ஐஐடி
ஜென் இஸட் தலைமுறையின் உயிர்நாடி எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ். இந்த கேட்ஜெட்ஸை இயக்கும் மந்திரக்கோல்தான் மைக்ரோ பிராசஸர்.  பாதுகாப்பு, அணு ஆயுதக் கட்டமைப்பு, அரசு அலுவலகம் மற்றும் பிற துறைகளில் இதன் பயன்பாடு இன்றியமையாதது. 
 இதுவரை வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ பிராசஸர்களை இறக்குமதி செய்யும் நிலையே இந்தியாவில் நிலவி வந்தது. இனிமேல்  உலகத்தரத்தில் பிராசஸர்களை உருவாக்கும் ஒரு தேசமாக மிளிரப் போகிறது நம் நாடு!ஆம்; ‘சக்தி’ என்ற இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசஸரை அறிமுகப்படுத்தி அசத்தி யிருக்கிறது சென்னை ஐஐடி.

சாஃப்ட்வேரில் தவறு செய்தால் அந்த தவறை அழித்துவிட்டு புதிதாக எழுதிக் கொள்ளலாம். ஆனால், பிராசஸர் போன்ற ஹார்டுவேரில் சிறு தவறு  நிகழ்ந்தாலும் அதைக் குப்பையில் போட்டுவிட்டு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வளவு நுணுக்கமான வேலையைச் சிறப்பாகச்  செய்திருக்கிறது சென்னை ஐஐடி.

  சண்டிகரில் உள்ள இந்திய விண்வெளித் துறையின் செமிகண்டக்டர் ஆய்வகத்தில் இந்த பிராசஸரை ஃபேப்ரிகேட் செய்திருக்கிறார்கள். இதன்  வடிவமைப்புக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ரூ.11 கோடி நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக சென்னை ஐஐடி மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், ஆர்வமுள்ளவர்களும் தங்களின் வேலையைவிட்டு இரவு பகல்  பாராமல் உழைத்து இந்த பிராசஸரை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களை வழிநடத்தி இந்த புரொஜெக்ட்டை ஒருங்கிணைத்தவர் சென்னை ஐஐடியில்  கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பணிபுரியும் பேராசிரியர் காமகோடி.

‘‘நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒண்ணுனா அது கேட்ஜெட்ஸ்தான். வண்டி ஓட எப்படி பெட்ரோல் அவசியமோ அப்படி டிவி ரிமோட்,  வாஷிங் மெஷின், செக்யூரிட்டி கேமரா, லேப்டாப், மொபைல்னு எல்லா கேட்ஜெட்களும் சரியா வேலை செய்ய மைக்ரோ பிராசஸர் அவசியம். ஒரு  குட்டி கம்ப்யூட்டர் மாதிரி கேட்ஜெட்ஸ்க்குள்ள இருந்துட்டு அவை வேலை செய்யுது...’’ என்று மைக்ரோ பிராசஸரைப் பற்றிய தெளிவான  அறிமுகத்தோடு ஆரம்பித்தார் காமகோடி.

‘‘பொதுவா இங்க வெளிநாட்டு பிராசஸர்களைத்தான் பயன்படுத்திட்டு வர்றோம். அதுல சில பிரச்னைகள் இருக்கு. முக்கியமா செக்யூரிட்டி. நாம  சொல்ற வேலைகளை அந்த பிராசஸர் செய்யுது. அதனால எந்த சந்தேகமும் நமக்கு வர்றதில்லை. ஆனா, நாம சொல்லாத வேலையையும் அது  செய்யாமல் இருக்குமான்னு யாருக்கும் தெரியாது!

உதாரணத்துக்கு, ரெண்டு பேர் மொபைல்ல பேசறாங்க. அவங்க பேசுனது மூணாவதா இன்னொரு ஆளுக்கும் போகலாம். அது நமக்குத் தெரியாது.  ஏன்னா மொபைலுக்குள் உள்ள மைக்ரோ பிராசஸரின் கன்ட்ரோல் எல்லாமே வெளிநாட்டுல இருக்கு. அவங்களால என்ன வேணாலும் செய்ய  முடியும். இந்த மாதிரி நூற்றுக்கணக்கான செக்யூரிட்டி பிரச்னைகளைப் பட்டியலிடலாம். உள்நாட்டுலயே பிராசஸரைத் தயாரிக்கும்போது இதைக் கட்டுக்குள்ள கொண்டு வர முடியும். பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்.

அடுத்து மொபைல் போன்ல இருக்குற பிராசஸர் லேப் டாப்ல இருக்காது. லேப் டாப்ல இருக்குற பிராசஸர் கம்ப்யூட்டருக்குப் பொருந்தாது.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அளவுல பிராசஸர் தேவைப்படும். தவிர, நம்மகிட்ட இருக்குற அப்ளிகேஷன்களுக்கு, ஹார்டுவேர்களுக்குத் தகுந்த  மாதிரியான பிராசஸர்கள் வெளிநாட்டுல கிடைக்காது.

அதனால வெளிநாட்டுப் பிராசஸரின் அளவுக்குத் தகுந்த மாதிரி நம் அப்ளிகேஷன்களையும், ஹார்டுவேர்களையும் வடிவமைச்சிட்டு இருக்கோம்.  செருப்பை வாங்கிட்டு கால வெட்டிக்கிற கதைதான்!இங்க பிராசஸர்களைத் தயாரிக்கும்போது இந்தப் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வரும்.

நமது அப்ளிகேஷன்களுக்குத் தகுந்த மாதிரி பிராசஸரை வடிவமைத்துக் கொள்ளலாம். இது பரவலாகும்போது விலையும் மலிவாகும்...’’ என்று உள்நாட்டிலேயே பிராசஸர் தயாரிப்பதற்கான காரணங்களை அடுக்கிய காமகோடி, சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘‘மைக்ரோ பிராசஸர் மாதிரி யான ஒரு புரொடக்ட்டை இந்தியாவிலும் பண்ண முடியும்னு நிரூபித்திருக்கிறோம். இந்தியாவில் தயாராகுதுங்கிற ஒரே  காரணத்துக்காக மட்டுமே மக்கள் இதை வாங்கக்கூடாது; தரத்துக்காகத்தான் வாங்கணும்.

அந்த வகைல சர்வதேசத் தரத்துல இது வந்திருக்கு. அவ்வளவு ஏன்... ஆசியாவிலேயே தயாராகிற முதல் பிராசஸர்னு இதை உறுதியாகச் சொல்லலாம்.  இனி இந்தியாவுல தயாராகுற எலெக்ட்ரானிக் சாதனங்களுக்குள் ‘சக்தி’ பிராசஸரைக் கொண்டு போகணும். இதுக்காக பல ஏஜென்சி களிடம் பேசிட்டு  இருக்கோம்.

பிராசஸர் வடிவமைப்பில் டிசைனுக்குத்தான் செலவு அதிகம். அந்த டிசைனை எங்க வெப்சைட்டுல போட்டிருக்கோம். யார் வேணாலும் அதை  எடுத்து இலவசமாகப் பயன்படுத்திக்க முடியும்.

சூப்பர் கம்ப்யூட்டருக்கான ‘பராசக்தி’ பிராசஸர் வடிவமைப்பும் போய்க்கிட்டு இருக்கு. எங்க பிராசஸர் மேல மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரணும்.  அதுதான் இவ்வளவு நாளா நாங்க உழைச்சதுக்கு கிடைக்கும் வெகுமதி..!’’ புன்னகைக்கிறார் காமகோடி.l


த.சக்திவேல்
 நன்றி:குங்குமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...