bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 14 நவம்பர், 2018

ஏன் பாஜகவிலிருந்து விலகினேன் ?



                                                                                                   -சிவம் சங்கர் சிங்.    

பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் குழுவில் அங்கம் வகித்து வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டவர் சிவம் சங்கர் சிங். 

ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூக அமைப்பையோ உருவாக்குவதற்கு பல நூறு ஆண்டுகளாகும். அவ்வாறு உருவாகியிருந்த மிக உயரிய நம் சமூக அமைப்பை அற்பக் காரணங்களுக்காக பாஜக சின்னாபின்னமாக்கி சிதற அடித்துவிட்டது. 
எனவேதான் நான் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்என்று சிவம் சங்கர் சிங் கூறியிருக்கிறார்.
 தான் விலகியதற்கான முக்கியமான காரணங்கள் என்று அவர் பட்டியலிட்டிருப்பதில் ஒருசில பின்வருமாறு:

தேர்தல் பத்திரங்கள்
பாஜக கொண்டுவந்திருக்கும் தேர்தல் பத்திரங்கள் அடிப்படையில் ஊழலை சட்டப்பூர்வமாக்கிவிட்டது. இது கார்ப்பரேட்டுகளும், அந்நிய நாடுகளும் நம் அரசியல்கட்சிகளை (விலைக்கு) வாங்குவதற்கு அனுமதிக்கிறது. 
ஆட்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை நிறைவேற்றினால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்குவேன் என்று ஒரு கார்ப்பரேட் கூறினார் என்றால் அவர்மீது எவ்விதமான வழக்கும் தொடர முடியாது. 
ஆட்சியாளர்கள் லஞ்சப் பணத்தை நேரடியாக வாங்காமல் தேர்தல்பத்திரங்கள் மூலமாக வாங்கினார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழலில் வழக்கு எதுவும் தொடர முடியாது.

திட்டக் குழு ஒழிப்பு 
திட்டக் கமிஷன் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது. 
நாட்டில்நடைபெற்றுவந்த திட்டங்கள் தொடர்பான தரவுகளைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது. 
இதற்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் என்னும் அமைப்பிடமிருந்து இவற்றையெல்லாம் பெற்றுவிட முடியாது.

சிபிஐ/அமலாக்க இயக்குநரகம் முறைகேடு 
மோடி/அமித்ஷாவிற்கு எதிராக எவர் பேசினாலும் அவர்மீது மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அமலாக்க இயக்குநரகமும் ஏவப்படுகின்றன. 
இத்தகைய செயலானது, ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத கூறாகவிளங்கும் கருத்துவேறுபாடு தெரிவித்தல் என்னும் சிந்தனையோட்டத்தையே கொல்வதற்குப் போதுமானது.

முக்கிய வழக்கு விசாரணைகளில் தோல்வி
அருணாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்காலிகோ புல் அவர்களுடைய தற்கொலைக் குறிப்பு,நீதிபதி லோயா மரணம், சொராபுதீன் கொலை, உன்னோவோவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்டதும், அவரைகொலை செய்த கயவர்கள்மீதான வழக்கு ஆகியவற்றில்புலன்விசாரணைகள் உரியமுறையில் மேற்கொள்ளப்படாமல் தோல்வி அடைந்துள்ளன.

பண மதிப்பிழப்பு

எல்லாவற்றிலும் முக்கிய மானது .ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது பாஜக மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது. 
எனினும் அதனை பாஜக இன்னமும் ஏற்க மறுக்கிறது. 
பயங்கரவாதிகளுக்குப் பணம்வருவது தடுக்கப்படும், ஊழல் ஒழிக்கப்படும் என்றுசொன்னதெல்லாம் அபத்தமாகிப்போயின. நடைமுறையில் இது நாட்டின் வர்த்தகங்களை ஒழித்துக்கட்டியது.


ஜிஎஸ்டி அமலாக்கம்
ஜிஎஸ்டி மிகவும் அவசரகதியில் அமலாக்கப்பட்டது. 
இது நாட்டின் வர்த்தகத்திற்குத் தீங்கு விளைவித்திருக்கிறது. சிக்கலான கட்டமைப்பு, பல்வேறு பொருள்களுக்கு பல்வேறு வரிவிகிதங்கள் போன்றவை மிகவும் தீங்கிழைத்திருக்கின்றன. 
இவ்வாறு ஜிஎஸ்டி படுதோல்வி அடைந்தபின்னரும் அதனை ஏற்க பாஜக மறுப்பது அதன் ஆணவத்தையே காட்டுகிறது.

அயல்துறைக் கொள்கை
அயல்துறைக் கொள்கையில் மிகவும் குளறுபடி செய்யப்பட்டுள்ளது. 
நம் அண்டை நாடான சீனா, இலங்கையில் ஒரு துறைமுகத்தைப் பெற்றிருக்கிறது. 
வங்க தேசத்திலும் பாகிஸ்தானிலும் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. 
இவ்வாறு இந்தியாவைச் சுற்றிலும் அது செல்வாக்கை செலுத்துகிறது. 
மாலத்தீவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு மரியாதையே கிடையாது. இனி இந்தியர்களுக்கு விசா அளிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

உண்மை நிலைமை இவ்வாறிருக்கையில் உலகம் முழுதும் சுற்றிவரும் பிரதமர் மோடியோ 2014க்கு முன்னர்வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது என்று கூறிவருகிறார். 

இது உளறல்நிறைந்த வெட்டிப்பேச்சாகும். 
சரியாகச் சொல்லப்போனால் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களைக் கொல்வது, பத்திரிகையாளர்களைக் கொல்வது போன்ற இவர்கள் ஆட்சியில் நடைபெற்றுவரும் இழிசெயல்கள் மூலமாகத்தான் ஏற்கெனவே இந்தியாவிற்கு இருந்துவந்த நல்ல பெயர் தற்போது வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

மோடி அரசின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி
மோடி அரசு கொண்டு வந்த சன்சாத் ஆதர்ஷ் கிராம்யோஜனா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம், திறன்வளர்ச்சி, பயிர் இன்சூரன்ஸ் திட்டம் போன்ற அனைத்துத் திட்டங்களுமே படுதோல்வி அடைந்திருக்கின்றன. பயிர் இன்சூரன்ஸ் திட்டம் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பைகளைத்தான் நிரப்பி இருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் நெருக்கடி ஆகியவற்றைத் தீர்த்திட எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெட்ரோல், டீசல்விலைகளை காங்கிரசார் உயர்த்திவிட்டதாக மிகவும்ஆக்ரோஷமாகக் கூறிவந்தனர். ஆனால் இப்போது என்னநிலை? கச்சா எண்ணெய் விலை மலிவாகக்கிடைத்தபோதும், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.
இதனை எவ்விதத்திலும் ஏற்க முடியாது.

கல்வி-சுகாதாரம்

மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின்மீது அக்கறையே செலுத்தவில்லை. 
அரசாங்கப்பள்ளிகளின் தரம் தாழ்ந்து கொண்டிருக்கின்றது. 
இதனை மேம்படுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று சுகாதாரப் பாதுகாப்பிற்காகவும் எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

இப்போது ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
இதுவும் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் நலத்திற்குத்தான் பயனளிக்குமேயொழிய மக்களின் சுகாதார நலனுக்கானது அல்ல.

மோடியின்  இழிவான -அசிங்கமான திட்டங்கள்
இவை எல்லாவற்றையும்விட இந்த அரசாங்கத்தின் மிகவும் அசிங்கமான விஷயங்களும் உண்மையில் இருக்கின்றன. இவற்றை இந்த அரசாங்கத்தின் தோல்விகள் என்று சொல்லமுடியாது. மாறாக, இதன் இழிவான திட்டங்கள் என்றுதான் கூறவேண்டும்.

l இந்த அரசாங்கம் ஊடகங்களை மிகவும் இழிவாக நடத்திக் கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்போர் அனைவரையும் பத்திரிகையாளர்களாகவே ஏற்றுக்கொள்வதில்லை. 
அவர்கள் அனைவரும் காங்கிரசின் ஊழியர் பட்டியலில் இருப்பதாகக் கூறுகிறது. 
இத்தகைய விமர்சனங்கள் உண்மையல்ல என்று எனக்கு நன்றாகத் தெரியும். இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவென்றால் அவர்கள் எழுப்பும் பிரச்சனையைப் பற்றிக் கவலைப்படாமல், அவ்வாறு பிரச்சனையை எழுப்பியவரைத் தாக்கும் நிலைக்கு இந்த அரசு செல்வது என்பதேயாகும்.

l இந்த அரசாங்கம், கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில்
எதுவுமே நடக்கவில்லை என்று ஒரு கதையை அவிழ்த்து
விட்டிருக்கிறது. 
இது நிச்சயமாக தவறு. 
மேலும் இந்த அரசாங்கம் நாலாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக விளம்பரத்திற்காக செலவு செய்திருக்கிறது. அது யாருடைய பணம்? 
அனைத்தும் சாமானிய மக்களின் வரிப்பணம். மிகவும் சிறிய வேலையைச் செய்வது. பின்னர் பெரியஅளவில் விளம்பரம் தேடுவது. 
நாட்டில் உள்ள சாலைகளை அமைத்தவர்களில் முதல் நபர் மோடி அல்ல. 
நான்பயணித்த மிகச்சிறந்த சாலைகளில் சில, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோது அமைக்கப்பட்டவை, சில அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது அமைக்கப்பட்டவைகளாகும். 
இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் உலக அளவில் சிறந்து விளங்குவது என்பது 
1990களிலேயே துவங்கிவிட்டது. 
கடந்த கால செயல்பாடுகளையும், கடந்த கால தலைவர்களையும் இன்றைய சூழ்நிலையில் நிந்தனை செய்வதுஎன்பது எளிது.

நேருவின் பாதை

உதாரணமாக ஒருவர் கேட்கலாம்: “கடந்த 70 ஆண்டுகளில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி கழிப்பிடங்களை ஏன் கட்டவில்லை? 
மக்களுக்கு அடிப்படைத் தேவைகளாகஉள்ள சிலவற்றை அவர்களால் ஏன் செய்ய முடியவில்லை?” இந்தியாவின் வரலாற்றைப் படிக்கும் வரைக்கும்இதுபோன்ற விமர்சனங்களை நானும் நம்பினேன். 

1947இல் நம் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் மிகவும் வறிய நிலையில் நம் நாடு இருந்தது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கான வளங்களோ, மூலதனமோ நம்மிடம் கிடையாது. 
இவற்றைச் சமாளிப்பதற்காக நேரு, சோசலிச நாடுகள் மேற்கொண்டுவந்த பாதையைத் தேர்ந்தெடுத்தார். 
பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். 
உருக்காலையை உருவாக்குவதற்கான வல்லமையை நாம் பெற்றிருக்கவில்லை. எனவே ரஷ்யாவின் உதவியுடன் அதனைச் செய்தோம். 
ராஞ்சியில் கனரக இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் அமைக்கப்பட்டது. அதன் மூலமாக இந்தியாவில் உருக்கு உருவாக்கப்பட்டது. இது அமையாதிருந்திருந்தால் நமக்கு உருக்கு கிடைத்திருக்காது. 
அதன் அடிப்படையிலான கட்டமைப்பு வசதிகளையும் பின்னர் நம்மால் பெற்றிருக்க முடியாது.

பொய் மூட்டைகள்
நம்நாட்டில் அடிக்கடி வறட்சிகள் ஏற்படும்.
 அதனால்ஒவ்வொரு 2, 3 ஆண்டுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டினியால் மடிந்துகொண்டிருந்தார்கள். 
எனவே மக்களுக்கு உணவு அளிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்தக்காலத்தில் கழிப்பிடங்கள் என்பது ஓர் ஆடம்பரமான அம்சமாக விளங்கியது. 
அதைப்பற்றி எவருமே அந்தக்காலத்தில் பொருட்படுத்தவில்லை.1990களில் பசுமைப்புரட்சி நடந்தது. உணவுப் பற்றாக்குறை காணாமல் போய்விட்டது. 
இப்போது நாம் உபரி உணவை என்ன செய்வது என்கிற பிரச்சனையைப் பெற்றிருக்கிறோம். 
எனவே 70 ஆண்டுகளில் எதுவுமே நடைபெறவில்லை என்று கூறுவதானது பயங்கரமான மிகவும் வெறுக்கத்தக்க பொய்மூட்டையாகும்.


மனநிலையை மாற்றியமைப்பதும் மதவெறியை விசிறி விடுவதும்
பாஜகவினர், “இந்து மதம் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது, இந்துக்களும் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்,” என்றும், “இதிலிருந்து நம்மை மோடிதான் காப்பாற்றமுடியும்” என்பதுபோல ஒரு சித்திரம் கட்டமைக்கப்படுகிறது. 
எதார்த்தத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்குமுன்பு இந்துக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதேமாதிரிதான் இப்போதும் வாழ்கிறார்கள். 
அவர்களின் மனோநிலையை மாற்றியமைப்பதற்கான வேலைகள்தான் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுகிறீர்களா? 
நீங்கள் தேச விரோதி. 
இப்போது இந்து விரோதி என்றும்முத்திரை குத்தப்படுவீர்கள். 

இவ்வாறு முத்திரை குத்தப்படுவதன் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரான நியாயமான விமர்சனம் மூடிவைக்கப்படுகிறது.பாஜகவினர் செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தி வருகின்றனர். 

அவற்றின் பிரதானமானபணி என்ன தெரியுமா? 
இந்து – முஸ்லிம், தேசியவாதியா?– தேசவிரோதியா? 
போன்ற விவாதங்களை நடத்துவதுதான். 

மக்களின் பிரதான பிரச்சனைகள் எது குறித்தும் விவாதிக்க மாட்டார்கள். மாறாக மக்கள் மத்தியில் மதவெறித் தீயை உசுப்பிவிட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வார்கள். 
இதில் யார் அதிக அளவில் விஷத்தைக் கக்குகிறார்களோ அவர்களுக்கு விருதும் அளித்திடுவார்கள்.
வரவிருக்கும் தேர்தலில் பாஜவின் உத்தி என்பதுமதவெறியை விசிறிவிடுவதுதான். 
வளர்ச்சி என்பதெல்லால் போயே போய்விட்டது. 

அடுத்து போலி தேசியவாதத்தைக் கிளறிவிடுவது.பாஜக எப்படி செயல்படுகிறது என்பதற்கு இவை சில உதாரணங்களேயாகும். 
சிவம் சங்கர் சிங்

எதுவுமே செய்யாது இருட்டுமுனையில் நின்றுகொண்டு பிரசங்கம் செய்துகொண்டிருக்கிறது. இத்தகைய கட்சியில் செயல்படுவதில் அர்த்தமில்லை என்றுதான் நான் ராஜினாமா செய்துவிட்டேன்.

பின்குறிப்பு:-

2013இலிருந்து நான் பாஜக ஆதரவாளராக இருந்தேன். 

ஏனெனில் நரேந்திர மோடி நாட்டின்ஒளிவிளக்காக எனக்குத் தெரிந்தார். வளர்ச்சி குறித்து அவர் முழக்கமிட்டதில் ஏதோ அற்புதம் நிகழப்போகிறது என நம்பினேன். 

ஆனால் அந்த நம்பிக்கைகள் எல்லாம்இப்போது பொய்த்துப்போய்விட்டன.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  தமிழில் : ச.வீரமணி(தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...