bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 10 நவம்பர், 2018

யாருக்காக?

அந்த 59 நிமிடம் !



சிறு, குறு , நடுத்தர தொழில்களுக்கு ‘59 நிமிடத்தில் கடன்’ வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 2-ஆம் தேதி திடீரென அறிவித்து, 
அதனை தில்லியில் இருந்தவாறே காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஜிஎஸ்டி-யில் பதிவு செய்த சிறு, குறு, நடுத்தரநிறுவனங்களுக்கு புதிய போர்ட்டல் மூலம் ‘59 நிமிடங்களில் ரூ. 1 கோடி வரை கடன் வழங்கப்படும்’ என்பதுதான் இந்த திட்டத்தின் விசேஷம் என்று மோடியே கூறினார்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறையை இன்ஸ்பெக்டர்கள் அதிகாரத்திலிருந்து விடுவிக்கும் வகையிலேயே இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும்- அதாவது, தொழிற்சாலைகளில் இன்ஸ்பெக்ஷன் நடப்பதில் ஏற்படும் தாமதம் களையப்பட்டு, கணினி மயமாக்கம் செய்யப்பட்ட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் கடன் தொடர்பான ஆய்வறிக்கை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று மோடி கூறினார்.


“இப்போது எந்த இன்ஸ்பெக்டரும் எந்த ஒரு தொழிற்சாலைக்கும் சோதனை செய்கிறேன் என்று தன்னிச்சையாகச் செல்ல முடியாது, அவர் ஏன் அங்கு சென்றார் என்று கேள்வி எழுப்பப்படும்”என்றும் வாய்ஜாலம் காட்டினார்.

இதைப்போலவே, தான் கொண்டுவந்துள்ள 12 புதிய விதிமுறைகளும் ‘வரலாற்றில் முதல்முறை’ என்ற சிறப்புக்குரியவை; 
இதனால் தொழில்செய்ய எளிதான நாடுகளின் பட்டியலின் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா மிகவிரைவிலேயே நுழையப் போகிறது என்றும் மோடி அவராகவே கைகளைத் தட்டிக் கொண்டார்.ஆனால், இந்த திட்டங்களை மோடி கொண்டுவந்திருப்பது, உண்மையிலேயே சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோருக்காக அல்ல; 
அனைத்தும் பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்காக- அதிலும் குறிப்பாக, குஜராத்தைச் சேர்ந்த நிதி நிறுவனம் கொள்ளை லாபம்அடிப்பதற்காக என்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது. 

நேசனல் ஹெரால்ட் பத்திரிகை இதுதொடர்பான விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.
59 நிமிடக் கடன் திட்டத்தில் பயன்பெற ஒவ் வொரு விண்ணப்பதாரரும் ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும். யாருக்கு என்றால், குஜராத்தைச் சேர்ந்த ‘கேபிட்ஒர்ல்ட்.காம்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு. அகமதாபாத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தநிறுவனத்தை ஜினந்த் ஷா, விகாஷ் ஷா ஆகியோர் நிர்வகித்து வருகிறார்கள். 

அனில் அம்பானியின் நிர்மா மற்றும் முத்ரா நிறுவனத்தில் தொடர்புடைய வினோத் மாதாவும், 2014-இல் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய அகில்ஹண்டாவும்தான் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள். நேரடியாக கூறினால், அனில் அம்பானியின் பின்னணி இருக்கும் நிறுவனம். 

இந்த நிறுவனத்தின் இதுவரையிலான ஆண்டுவருமானமே வெறும் ‘15 ஆயிரம் ரூபாய்’தான். 
ரூ. 5 லட்சம் மட்டுமே முதலீட்டை கொண்டிருந்த ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைப்போல.‘59 நிமிடக் கடன்’ பெறுவதற்கு, நாடு முழுவதிலும் உள்ள தொழில் முனைவோர், இந்த ‘கேபிட்ஒர்ல்ட்.காம்’ நிறுவனத்தில் ரூ. 1000 செலுத்திவிண்ணப்பிக்க வேண்டும். 

இனிமேல் கடன் விண்ணப்பங்களை ஆராய இன்ஸ்பெக்டர்கள் வரமாட்டார்கள் என்று திட்டத்தைத் துவங்கியபோது மோடி கூறினார் அல்லவா, ஆமாம் அவர்கள் வரமாட்டார்கள்; 
அவர்களுக்குப் பதில் ‘கேபிட்ஒர்ல்ட்.காம்’ என்ற இந்த குஜராத் நிறுவனம்தான் விண்ணப்பங்களை பரிசீலித்து, பின்னர் அவற்றை தகுதியான விண் ணப்பதாரர்கள் என்று குறிப்பிட்டு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும்.

ரூ. 1000 செலுத்தி விட்டதாலேயே, அல்லதுதகுதியான விண்ணப்பதாரர்தான் என்று ‘கேபிட்ஒர்ல்ட்.காம்’ பரிந்துரை செய்து விட்டதாலேயே, வங்கிகளில் கடன் கிடைத்து விடாது. 

வங்கிகளும் தனியாக ஆவணங்களை ஆய்வு செய்யும். அதன்பின்னர் கடன் வழங்குவதும் வழங்காததும் வங்கிகளின் விருப்பத்தைப் பொறுத்ததே. 
கடன் வழங்கத் தகுதியான நிறுவனம் என்று பரிந்துரை செய்வது மட்டுமே ‘கேபிட்ஒர்ல்ட்.காம்’-இன் வேலை. 

தகுதி இருக்கிறது;
 தகுதிஇல்லை என்று என்ன சொன்னாலும், விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1000 திரும்பி வராது. 

ஒருவேளை ‘கேபிட்ஒர்ல்ட்.காம்’ பரிந்துரைத்து கடன்கிடைத்து விட்டால், 1 சதவிகித கமிஷன் ‘கேபிட்ஒர்ல்ட்.காம்’ நிறுவனத்திற்கு வந்துவிட வேண்டும்.
இதில் இன்னொரு விஷயம், 59 நிமிடத்தில் கடன் கிடைக்காது. 

கடன் பரிசீலனைக்குத்தான் 59 நிமிடம் என்ற வரையறை. 
அதுவும் சாத்தியமா? 
என்பது இனிமேல்தான் தெரியும்.

ஆகவே, வங்கிகள் வழக்கம்போல தனது விசாரணைகளை நடத்தித்தான் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான கடன்களை வழங்கப் போகின்றன. 
அதுவும் ஒரு மணி நேரத்திலும் கிடைக்கப் போவதில்லை. ஒரு மாதமே ஆனாலும் உத்தரவாதம் இல்லை. 

பின்னர் எதற்காக 59 நிமிடக் கடன் என்றால்,வங்கிகள் கடன் வழங்கினாலும், கடன் வழங்காவிட்டாலும் குறிப்பிட்ட தொகை, அம்பானி வகையறாக்களின் கல்லாக்களுக்கு வந்து சேர வேண்டும்என்பது மட்டுமே ஆகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரபேல் விமான விலை உயர்ந்ததா; 

உயர்த்தப்பட்டதா?

ரபேல் விமானத்தின் விலை, 2012-ஆம்ஆண்டைக் காட்டிலும் தற்போது 40 சதவிகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையான ‘பிசினஸ் ஸ்டாண்ட்ர்ட்’ கூறியுள்ளது. 

ஒப்பந்தம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுத்துவரும் நிலையில், இந்த செய்தியை வெளியிட்டு ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய விமானப் படைக்காக, 36 ரபேல்ரக போர் விமானங்களை வாங்க மத்தியபாஜக அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. 

ஆனால், இந்த ஒப்பந்தம் பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டதால், ஆரம்பம் முதலே சந்தேகங்களும், சர்ச்சைகளும் தலைதூக்கின.பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, 126 ரபேல் ரக போர் விமானங்களை ரூ. 79 ஆயிரத்து 200 கோடிக்கு வாங்குவதற்கு, 2012-ஆம் ஆண்டு அப்போதைய மன்மோகன் சிங் அரசு முடிவு செய்தது.

ஆனால், 2016-இல் புதிய ஒப்பந்தம் போட்ட மோடி அரசு, விமானங்களின் எண்ணிக்கையை 36 ஆகக் குறைத்தது. முந்தைய மன்மோகன் ஆட்சியில்,டஸ்ஸால்ட் நிறுவனம், 18 விமானங்களைமட்டும் பறக்கும் நிலையில் தயாரித்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும்; ஏனைய 108 விமானங்களை ‘டஸ்ஸால்ட்’ தரும் தொழில்நுட்பத்தை வைத்து, இந்திய பொதுத்துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ழஹடு)’ தயாரிக்கும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது.


ஆனால், வாங்குவதாக முடிவு செய்யப்பட்ட 36 விமானங்களையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக்கொள் வதற்கு மோடி அரசு தலையாட்டியது. 
காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒரு விமானம் 526 கோடி ரூபாய் என்றே வகையிலேயே விலைபேசப்பட்டு இருந்தது. 

ஆனால், பாஜக அரசு, அந்த விமானத்திற்கு 1670 கோடி ரூபாய் வழங்க ஒப்புக்கொண்டது.

பொதுத்துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’நிறுவனத்திற்கு, விமானத் தொழில்நுட் பம் கிடைக்காது என்பது மட்டுமன்றி, அந்தநிறுவனமே முற்றிலுமாக கழற்றிவிடப்பட்டது. மாறாக, ஒரு கமிஷன் ஏஜெண்ட் போல அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனம், அதுதொடங்கப்பட்ட பதின்மூன்றே நாட்களில் ஒப்பந்தத்திற்குள் புகுத்தப்பட்டது.

இதுதொடர்பாக பிரான்ஸ் மற்றும் இந்திய ஊடகங்கள் அரசல் புரசலாக செய்திகளை வெளியிட்டன. ரபேல் ஒப்பந்தம் ரிலையன்ஸூக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது; இதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்றுகுற்றம் சாட்டின. 
இதனால், ரிலையன்ஸ்ஒப்பந்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒப்பந்த விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய பாஜகஅரசு பதுங்கிக் கொண்டது.விமானத்தின் தொழில்நுட்பம் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியம்தான். 

ஆனால், விலை விவரங்களை வெளியிடுவதில் என்ன பிரச்சனை? 
என்று எதிர்க் கட்சித் தலைவர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். ஒப்பந்த விவரங்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்புகூட வைக்கமுடியாது என்றால், நிச்சயமாக இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை என்றும் கூறினர். 

ரபேல் ஒப்பந்தத்திற்குள் ரிலையன்ஸ் வந்ததன் பின்னணியில் இந்திய அரசின் நெருக்குதல் இருந்தது என்று பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்காய்ஸ் ஹாலண்டே,‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லோய்க் சிகாலன் ஆகியோர் பேட்டி அளித்தனர். 

ரபேல் ஒப்பந்தப்படி, டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் ரூ. 30 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய வேண்டும். 

ஆனால், இந்த 30 ஆயிரம் கோடி ரூபாயும், ரிலையன்ஸ் குழுமக் கணக்கில் முதலீடு செய்யப் பட்டிருப்பதும் அம்பலமானது.இந்நிலையில்தான், பிரபல ஆங்கிலப்பத்திரிகையான ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில்,“டஸ்ஸால்ட் நிறுவனம் கடந்த 2012-ஆம்ஆண்டு கூறியிருந்த விலையைக் காட்டிலும் 40 சதவிகிதம் கூடுதல் விலைக்கு 2016-இல் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

2012-ஆம் ஆண்டிலிருந்து இந்த விவகாரத்தைக் கவனித்து வரும், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருவர்தான் தங்களுக்கு இந்த தகவலை அளித்துள் ளார்கள் என்று கூறியிருக்கும் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’, ரபேல் விமானத்தின் விலைஉண்மையிலேயே 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதா; 
அல்லது அதிகரித்துக் காட்டுப்பட்டுள்ளதா? 
என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...